ஸூரதுல் ஆதியாத் விளக்கவுரை !

سورة العاديات

ஸூரதுல் ஆதியாத்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரதுல் ஆதியாத் (ஓடக்கூடியவைகள்)

இறங்கிய காலப்பகுதி: மக்கீ

வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

وَالْعٰدِيٰتِ ضَبْحًا

وَ     சத்தியம் செய்வதற்கு பாவிக்கப்படும் எழுத்து, சத்தியமாக   الْعٰدِيٰتِ    ஓடக்கூடியவைகள்,    ضَبْحًا‏     மூச்சிரைக்கும் சத்தம்

மூச்சிரைக்க விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக! (100:1)

فَالْمُوْرِيٰتِ قَدْحًا

فَ     இன்னும்,     الْمُوْرِيٰتِ தீ மூட்டுபவைகள்,     قَدْحًا     தீப்பொறிகளை வெளிப்படுத்தல்

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்பை வெளிப்படுத்தும்(குதிரைகள்) மீதும், (100:2)

 فَالْمُغِيْرٰتِ صُبْحًا

فَ     இன்னும்,     الْمُغِيْرٰتِ     தாக்கக்கூடியவைகள்,     صُبْحًا     அதிகாலை

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றி (குதிரைகளி)ன் மீதும், (100:3)

 فَاَثَرْنَ بِهٖ نَقْعًا

فَ     இன்னும்,     اَثَرْنَ      அவை கிளப்பிவிட்டன,     بِهٖ    அதில்,    نَقْعًا     புழுதி

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், (100:4)

فَوَسَطْنَ بِهٖ جَمْعًا

فَ      இன்னும்,     وَسَطْنَ    அவைகள் நடுவில் நுழைந்தன,     بِهٖ     அதில்,     جَمْعًا     கூட்டம்

மேலும் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக, (100:5)

இந்த வசனத்தில் வேகமாக ஓடக்கூடியவைகள் என்பதைக் கொண்டு என்ன நாடப்படுகின்றது என்பதில் நபித்தோழர்கள் மத்தியிலே குறிப்பாக இப்னு அப்பாஸ், அலி ரலி ஆகியோருக்கு இடையில் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது. இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ‘யுத்தகலத்திற்கு சென்ற குதிரைகள்’ என்றும், அலி ரலி அவர்கள் ‘ஹஜ்ஜுக்குச் சென்ற ஒட்டகங்கள்’ என்றும் விளக்கம் சொன்னார்கள்.

அந்த அடிப்படையிலேயே ஐந்து வசனங்களுக்கும் விளக்கங்களும் சொல்லப்பட்டன;

இப்னு அப்பாஸ் ரலி அவர்களது கருத்துப்படி ‘யுத்த களத்தில் வேகமாகச் செல்லுகின்ற குதிரைகள், காலையில் விரோதிகளை தாக்க வேகமாக செல்லுகின்றன, தன் குழம்பிலிருந்து நெருப்பை கிளப்பி விடுகின்ற அளவுக்கு வேகமாக ஓடும் குதிரைகள், தூசி கிளம்புகின்ற அளவுக்கு வேகமாக ஓடக்கூடிய குதிரைகள், விரோதிகளின் படை நடுவுக்கு சென்று தாக்குவதற்கு உதவி செய்யக்கூடிய குதிரைகள் என்று சொல்லப்பட்டது,

ஒட்டகங்கள் என்று விளக்கம் சொன்ன கருத்தின் அடிப்படையில் ‘ஹஜ்ஜுக்குச் சென்று அரபாவிலிருந்து முஸ்தலிபா வரைக்கும் கொண்டுசென்ற ஒட்டகங்கள், இரவு நேரத்தில் தீயை மூட்டுவார்கள் என்ற அடிப்படையிலும்,காலை நேரத்தில் வேகமாக செல்லக்கூடியது என்பதற்கு ‘காலை நேரத்திலேயே மினாவை நோக்கி செல்லக்கூடிய ஒட்டகங்கள்’ என்றும் ‘ஹஜ்ஜிலே அவர்கள் தங்கி நிற்கக்கூடிய இடத்தில் தூசியை கிளப்பி விடும்’ என்ற கருத்திலும், கூட்டத்தின் நடுவுக்கு சென்று விடும் என்ற வசனத்திற்கு ‘மக்கள் இருக்கின்ற இடத்தின் நடு வரைக்கும் சென்று விடும்’ என்ற அர்த்தத்திலும் அதனை விளங்கப்படுத்தினர். (இப்னு கஸீர், அல்லாஹு அஃலம்)

இப்னு அப்பாஸ் ரலி அவர்களது கருத்தையே முஜாஹித், இக்ரிமா, அதாஃ,  கதாதா போன்ற விரிவுரையாளர்கள் ஆதரித்தத்துடன், இப்னு ஜரீர் ரஹ் அவர்களும் வரவேற்றார்கள்.

ஓடக்கூடியவைகள் என்பது ஒட்டகங்களையே குறிக்கும்  என்ற கருத்தை அலி ரலி அவர்கள் கூறினார்கள். இதனை இப்னு கஸீர், இப்னு ஜரீர் ரஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும் போது; ‘இந்த வசனங்களில் யுத்தகளத்தில் இருக்கும் குதிரை நாடப்படுகின்றதா, அல்லது ஹஜ்ஜுக்குச் சென்ற ஒட்டகம் நாடப்படுகின்றதா என்பதில் கருத்து வேற்றுமை வருவதற்கான காரணமே, ஜம்உ என்ற அந்த சொல் முஸ்தலிபா என்ற இடத்தின் பெயர்களில் ஒன்றாக இருப்பதுதான், ஹதீஸ்களில் ‘நான் இங்கே தரித்திருந்தேன், ஜம்உ முழுக்கவுமே தரித்திருக்கும் இடம் தான்’ என்று முஸ்தலிபாவுக்கு ஜம்உ என்ற சொல் பாவிக்கப்பட்டு இருக்கின்றது என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள், இந்த இரண்டு கருத்துக்களிலும் ஓடக்கூடியவைகள் என்பதைக் கொண்டு ஒட்டகங்களே நாடப்படுகின்றன என்பதனை பல அடையாளங்களைக் கொண்டு நிறுவுகின்றார்கள்;

நெருப்பு வெளிப்படும் அளவுக்கு வேகமாக ஓடுதல் என்பதைக் கொண்டு அரபாவிலிருந்து புறப்படுவதும், பிறகு முஸ்தலிபாவில் இருந்து புறப்படுவதும் வேகமாக செல்வதை வேண்டியிருக்காது, மாறாக யுத்த களத்தில் வேகமாக ஓடும் என்பது நாடப்படுவதே மிகப் பொருத்தமானது.

அடுத்து, தூசி கிளம்பும் அளவுக்கு ஓடுவது யுத்த களத்திற்கே மிகப் பொருத்தமானது,

அடுத்து, காலையிலே தாக்குதலுக்கு செல்லக்கூடியவை, புழுதியை கிளப்பிக்கொண்டு படை நடுவிலே சென்று விடும் என்பது ஒரு ஒழுங்கமைப்பில் சொல்லப்பட்டிருப்பதும் இது யுத்த களத்தின் குதிரைகள் தான் நாடப்படுகிறன என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்த ஒழுங்கமைப்பை ஹஜ் வணக்கத்தோடு வைத்துப் பார்க்கும் பொழுது ஜம்உ எனும் முஸ்தலிபாவில் தரித்து விட்டே காலையில் மினாவுக்கு செல்கிறார்கள் எனும் போது அந்த ஒழுங்கமைப்புக்கு மாற்றமாகவே நடக்கின்றது. எனவே இது முஸ்தலிபா என்பது நாடப்படவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எனவே (குதிரைகள் எனும்) முதல் கருத்தே மிகவும் பொருத்தமானது என்று கூறிவிட்டு, பின்வருமாறும் கூறினார்கள்:  “முந்திய ஸூரா ஸில்ஸாலின்   கடைசிப் பகுதி ‘மறுமையில் மனிதர்கள் தங்களது நற்காரியங்களை பார்ப்பார்கள்’ என்ற வசனத்தோடு  ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த ஸூராவிலே மனிதன் செய்கிற நற்கருமங்களுள் மிகச்சிறந்த  ‘அல்லாஹ்வுக்காக போராடும் ஜிகாத்’  கூறப்பட்டிருப்பதும் முதலாவது கருத்தை நாடுவது பொருத்தமானது என்பதற்கு சிறந்த எடுததுக்காட்டாக  இருக்கிறது என்றும் கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

இந்த வசனங்கள் மூலம் யுத்த களத்தில் குதிரைகள், தன்னை வளர்த்த, தனக்கு சேவை புரிந்த தனது சொந்தக்காரனோடு எவ்வளவு நன்றி உபகாரத்தோடு நடந்து கொள்ளுகின்றன என்பது எடுத்துக்காட்டப்படுகின்றது,

இந்த வசனங்கள் மூலம் குதிரைகளின் ஐந்து பண்புகள் தெளிவாகப் பேசப்படுகின்றன, அது ஓடுகின்ற போது மூச்சு விடுகின்ற சத்தத்தோடு ஓடுகின்றன, விரோதிகளை தாக்குவதற்கு கடும் வேகத்தோடு செல்கின்றன, அது ஓடுகின்ற வேகத்தின் காரணமாக பூமியிலிருந்து தூசி வெளிப்படுகின்றது, அது மட்டுமல்லாமல் படைகளின் நடுவிலே சென்று விரோதிகளை தாக்குவதற்கு உதவி செய்கின்றன, இப்படிப்பட்ட மனிதனுக்கு உதவி செய்கின்ற இந்த மிருகத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்து தன்னை படைத்தவன் ரப்பான அல்லாஹ்வை மறந்து வாழ்கின்ற மனிதனுக்கு அல்லாஹ் எப்படி நன்றி செலுத்துவது என்று பாடம் புகட்டுகின்றான்.

ஸபபுன் னுஸூல் :

இந்த ஸூரா இறங்கியதற்கு காரணியாக, ‘நபி ஸல் அவர்கள் ஒரு யுத்தத்திற்கு குதிரைப்படை ஒன்றை அனுப்பியதாகவும் ஒரு மாத காலம் வரை அதைப்பற்றிய எந்த தகவலும் நபிகளாருக்கு வராத போது இந்த ஸூராவின் ஆரம்ப வசனங்கள் ஐந்தும் இறங்கியதாக இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் வாயிலாக இமாம் பஸ்ஸார் ரஹ் அவர்கள் ஒரு செய்தியை பதிவு செய்திருக்கிறார்கள். (2291)

அந்த செய்தி பலவீனமானது அதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஹப்ஸ் பின் ஜுமைஃ ‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் பலவீனமானவர். (மஜ்மஉஸ் ஸவாஇத்)

اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ‏

اِنَّ  இதற்கு ஒரு எழுவாயும் பயனிலையும் வருவது அவசியம், பயனிலையில் வரக்கூடிய விடயம் எழுவாய்க்கு உறுதியாகவே இருக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு, ‘நிச்சயமாக’ என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படும் ஒரு எழுத்து,     الْاِنْسَانَ     மனிதன்,     لِ     க்கு,    رَبِّهٖ     தன் இறைவன்,     لَ           வுக்கு வரும் பயனிலையில் உறுதிப்படுத்துவதற்காக சேர்ந்து வரக்கூடியது,     ‏      كَنُوْدٌ    மிகவும் நன்றி கெட்டவன்.

நிச்சயமாக மனிதன் தன் இரட்சகனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். (100:6)

நன்றி கெட்டவன் அல்கநூத் என்றால் ‘அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறுக்கக் கூடியவன்’ என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்களும், ‘சோதனைகளை, கஷ்டங்களை  நினைவூட்டுவதோடு, அருட்கொடைகளை மறந்து வாழ்பவன்’ என்று ஹசனுல் பஸரீ ரஹ் அவர்களும் கூறினார்கள்.

நன்றி கெட்டவன் அல்கநூத் என்றால்,  ‘தனித்து சாப்பிடுவதோடு கொடை கொடுப்பதைத் தடுப்பதோடு தன்னுடைய அடிமையை அடித்துத் துன்புறுத்துபவன் தான்’ என்று நபி அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல் பாஹிலீ அவர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி பலவீனமானது. (மஜ்மஉஸ் ஸவாஇத்)

இதே செய்தி இமாம் திர்மிதீ ரஹ் அவர்களால் நவாதிருல் உசூல் எனும் புத்தகத்தில் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே செய்தி பல நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அனைத்தும் விமர்சனத்திற்குறிய பலவீனமானவைகளே அல்லாஹு அஃலம்!.

அல் கனூத் : என்றால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவனுக்கு மாறு செய்வதில் செலவிடுபவன் என்ற ஒரு அர்த்தமம் பதிவு செய்யப்பட்டுள்ளது, இன்னும் தின் நூன் எனும் அறிஞர் கூறும் போது அல்கநூத் என்பதற்கு விளக்கமாக ‘ஸூரா அல் மஆரிஜின் பின்வரும் வசனத்தை கூறினார்கள்,

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏     நிச்சயமாக மனிதன் (பேராசை கொண்ட) மிக்க பதட்டக்காரனாக படைக்கப்பட்டுள்ளான்.19,      اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا       (ஏனென்றால்) அவனை ஒரு தீமை தொட்டுவிட்டால் (திடுக்கிட்டுப்) பதறுகிறவனாக இருக்கின்றான். 20,     وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا    இன்னும், அவனை யாதொரு நன்மை தொட்டுவிட்டால் அதனை (பிறருக்கு வழங்காது) தடுத்துக் கொள்கிறவனாக (இருக்கிறான்). (70:19-21)

இமாம் குர்துபீ ரஹ் அவர்கள் இந்த கருத்துக்களை பதிந்து விட்டு, இந்த கருத்துக்கள் அனைத்தும் நிராகரிப்பவன், மறுப்பவன் என்ற கருத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

இமாம் ஷன்கீதீ ரஹ் அவர்கள் கூறும் போது ‘இந்த விளக்கத்தைப் போன்றதே ஸூரதுல் பஜ்ரில் வரும் பின்வரும் விளக்கமும்,  இந்த ஸூராவில் ‘நிச்சயமாக அவன் பொருளாதாரத்தை கடுமையாக நேசிக்கிறான்’ என்று கண்டிக்கப்பட்டுள்ளது போன்று ஸூரதுல் பஜ்ரில் ‘அவன் பணத்தை மொத்தமாக நேசிக்கிறான். (89:20)’ என்று கண்டிக்கப்பட்டுள்ளது.என்று கூறினார்கள்.

فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ‏

ஆகவே, மனிதன், அவனுடைய இரட்சகன் அவனை சோதித்து பின்னர் அவனைக் கண்ணியப்படுத்தி, அவனுக்கு அருட்கொடைகளையும் அளித்தால் “என்னை என்னுடைய இரட்சகன் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகிறான்.15,

وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏

இன்னும், (அல்லாஹ்) அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரங்களை நெருக்கடியாக்கி விட்டால், அப்போது “எனதிரட்சகன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று அவன்(குறை) கூறுகிறான். (89:15,16) அல்லாஹு அஃலம். (அல்வாஉல் பயான்)

இமாம் ஷன்கீதீ ரஹ் அவர்கள் கூறும் போது, மனிதன் என்பதைக் கொண்டு பொதுவாக மனித இனம் நாடப்பட்டிருந்தாலும் மனிதர்களில் சிலர் அல்லது பலர் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதே நாடப்பட்டிருக்கின்றது. பின்வரும் அல்குர்ஆன் வசனங்களைப் போன்று’ என்று கூறினார்கள்.

وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ‌ ؕ ‏

….(பொதுவாக) மனங்கள் உலோபித்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றன, (4:128)

وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‌ۚ‏

…… இன்னும் எவர் தன் உலோபத்தனத்திலிருந்து காக்கப்பட்டாரோ, அத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள். (59:9)

فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ,وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ, ‏فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ

ஆகவே, எவர் (தன் செல்வத்தை நன்மையானவற்றுக்கு) வழங்கி இன்னும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து,இன்னும், நல்ல காரியங்களை உண்மையாக்கி வைக்கின்றாரோ அவருக்கு இலேசானதற்கு (சுவர்க்கத்தின் வழியை) நாம் எளிதாக்கி வைத்தோம். (92:5-7) (அல்வாஉல் பயான்)

وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ

وَاِنَّهٗ     இன்னும் நிச்சயமாக அவன்,     عَلٰى     மீது,     ذٰلِكَ     அது,      شَهِيْدٌ     சாட்சியாளன்.

மேலும், நிச்சயமாக அவனே இதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான். (100:7)

இந்த வசனத்தில் ‘அவன்’ என்பதைக் கொண்டு மனிதனின் இரட்சகன்என்றும் மனிதன் என்றும் இரண்டு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ‘மனிதன் நன்றி கெட்டவன் என்பதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்’ என்றும், ‘மனிதனே சாட்சியாளனாக இருக்கிறான்’ என்றும் விளங்க முடியும் என்ற இரண்டு கருத்துக்களும் பதியப்பட்டுள்ளன. மனிதனே தன்னுடைய நிலையை அறிந்தவன் என்பதற்கு ஆதாரமாக அல்குர்ஆனிலே ஸூரா அத்தவ்பாவின் 17 வது வசனம் சான்று பகருகின்றது.

مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالـكُفْرِ‌ؕ‏

இணை வைத்துக்கொண்டிருப்போருக்கு, இவர்கள் தங்களுக்குத் தாங்களே நிராகரிப்பைக் கொண்டு சாட்சி கூறிக்கொள்பவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய பள்ளிகளை இவர்கள் பரிபாலனம் செய்ய எவ்வித உரிமையுமில்லை, (9:17)

இவ்விரண்டு கருத்துக்களிலும் ‘மனிதன் தனக்கு சாட்சியாளனாக இருக்கிறான்’ என்பதே பொருத்தமானது என ‘அவன் பொருளாதாரத்தில் கடுமையாக நேசம் கொண்டவனாக இருக்கிறான்’ என்ற அடுத்த வசனத்தை (100:8) வைத்து இமாம் ஷன்கீதீ அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். (அல்வாஉல் பயான்)

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ‏

وَاِنَّهٗ     இன்னும் நிச்சயமாக அவன்,     لِ     க்கு,     حُبِّ     நேசித்தல்,     الْخَيْرِ    நல்லது/செல்வம்,      شَدِيْدٌ‏     கடினமானவன்.

இன்னும், நிச்சயமாக (மனிதனாகிய) அவன், செல்வத்தை விரும்புவதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான். (100:8)

இந்த வசனத்தின் மூலம் மனிதன் அல்லாஹுவுக்கு நன்றி கெட்டவனாக வாழ்வதற்குறிய முக்கிய காரணத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான், அதுதான் பொருளாதாரத்தின் மீது இருக்கின்ற எல்லை மீறிய மோகம், பொருளாதாரத்தைத் தந்த அல்லாஹ்வை மறக்கடிக்கச் செய்து விட்டது. எனவே அல்லாஹ் எனக்குத் தந்தவன் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வோடு வாழ்வது எங்களை நல்லவர்களாக வாழ வைக்கும்.

இமாம் ஷன்கீதீ ரஹ் அவர்கள் கூறும் போது, இந்த வசனத்தில் ‘அல்ஹைர் நல்லது’ என்பதைக் கொண்டு பொதுவாக அனைத்து நலவுகளும் நாடப்பட்டிருந்தாலும், இந்த இடத்தில் பொருளாதாரம், சொத்து செல்வம் என்பது குறித்து நடப்பட்டுள்ளது என்று கூறினார்கள். பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைப் போன்று,

اِنْ تَرَكَ خَيْرَا  ۖۚ اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ

…அவர் சொத்துக்களை விட்டுச் செல்வாரானால், (அவர் தன்னுடைய) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி (மரண) சாசனம் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; .. (2:180) (அல்வாஉல் பயான்)

இமாம் இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறும் போது, இந்த வசனத்தை புரிவதில்  ‘நிச்சயமாக மனிதன் பொருளாதாரத்தை நேசிப்பதில் கடுமையானவனாக இருக்கிறான்’,’பொருளாதாரத்தை நேசிப்பதன் காரணமாக அவன் கடும் கஞ்சனாக இருக்கிறான்’ என்ற இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன என்று கூறிவிட்டு,

இவ்விரண்டுமே சரியானது தான் என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

இமாம் ஷன்கீதி அவர்களும், ‘பொருளாதாரத்தை கடுமையாக நேசிப்பவன் கஞ்சனாக இருப்பான்’ என்ற அடிப்படையில் இப்னு கஸீர் இமாமின் கருத்தை பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை வைத்து சரிகண்டார்கள்.

وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ , ‏وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّـمًّا , وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا

ஏழைக்கு நீங்கள் உணவளிக்காததுடன் மற்றெவரையும் உணவளிக்கும்படித் தூண்டுவதுமில்லை.18, மேலும் அனந்தரச் சொத்துக்களையும் சேர்த்து உண்டு வருகிறீர்கள்.19, மேலும், நீங்கள் மிக்க அளவு கடந்து செல்வத்தை நேசிக்கிறீர்கள். (89:18) (அல்வாஉல் பயான்)

எனவே இந்த வசனங்கள் உண்மையில் காபிர்களிடத்தில் இருந்த இறை நிராகரிப்பையும் படைத்தவனுக்கு நன்றி கெட்டவர்களாக வாழுகின்ற பண்பையும் தான் எடுத்துக்காட்டுகின்றன. அதே நேரம் ஒரு முஸ்லிமாக, முஃமினாக இருந்தாலும் இறை நம்பிக்கையில் குறைவு ஏற்படுகின்ற பொழுது அவனிடத்தில் இந்த மோசமான குணங்களும் மோசமான பண்புகளும் வெளிப்படலாம் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

எனவே எங்களுடைய உள்ளத்தில் மாற்றம் வரவேண்டும் மனித சமூகத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக அல்லாஹ் தொடர்ந்து மண்ணறை வாழ்க்கை மறுமை வாழ்க்கையைப் பற்றி எங்களுக்கு நினைவூட்டி எச்சரிக்கை செய்கின்றான்.

اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏

اَ   கேள்வி கேட்பதற்காக பாவிக்கப்படும் எழுத்து ஆ உறுபு,     فَ     எனவே,     لَا يَعْلَمُ    அவன் அறியமாட்டான்,     اِذَا   நிபந்தனை இடுவதற்கு பாவிக்கப்படும் எழுத்து, ஆல் உறுபு/போது,      بُعْثِرَ    எழுப்பப்பட்டது,     مَا     ஒன்று,     فِى     ல்/லே,       الْقُبُوْرِ‏     புதை குழிகள்

அவன் அறிந்துகொள்ள வேண்டாமா? மண்ணறைகளிலுள்ளவை (எழுப்பப்பட்டு) வெளியேற்றப்பட்டுவிடும்போது, (100:9)

இந்த வசனம் மூலம் மண்ணறைகளில் இருக்கின்ற மனிதர்கள், உயிரினங்கள் எழுப்பப்படுகின்ற நாள் மறுமை நாள் என்பது தெளிவுபடுத்தப்படுவதோடு, அல்லாஹ் இன்னும் பல இடங்களிலும் இதனை உறுதிப்படுத்தி கூறுகின்றான்.

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ‏

மண்ணறைகளும் மேலும் கீழுமாக புரட்டப்பட்டு (அவற்றிலுள்ள இறப்பெய்தியோரை வெளியேற்றப்பட்டுவிடும்போது, (82:4)

يَوْمَ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا

மண்ணறைகளிலிருந்து விரைந்தவர்களாக அவர்கள் வெளியேறி வரும்நாள், (70:43)

يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏

பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவர். (54:7)

يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏

அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப்போல் ஆகிவிடுவார்கள். (101:4)

 وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ‏

وَ    இன்னும்,    حُصِّلَ     வெளிப்படுத்தப்பட்டது,     مَا     ஒன்று,     فِى     ல்/லே,     الصُّدُوْرِ‏     நெஞ்சங்கள்

இதயங்களிலுள்ளவையும் வெளியாக்கப்பட்டுவிடும்போது, (100:10)

இந்த வசனத்தில் உள்ளத்தில் உள்ளவைகள் வெளியேற்றப்படும் போது என்பதன் மூலம் உலகத்தில் மனிதன் செய்த செயல்கள் வெளியேற்றப்படுகின்ற நாள் அந்த நாள் என்பதை அல்லாஹ் உணர்த்துகின்றான். ஏனெனில் மனிதனுடைய செயற்பாடுகளுக்கு உள்ளங்களே காரணமாக இருக்கின்றன, உள்ளங்களில் உதிப்பதையே மனிதன் செய்கின்றான். அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

يَوْمَ تُبْلَى السَّرَآٮِٕرُۙ‏

சகல மர்மங்களும் வெளிப்பட்டுவிடும் நாளில்- (86:9)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மனிதனுடைய உடம்பிலே ஒரு சதைத் துண்டு இருக்கின்றது, அது சீராகிவிட்டால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது, அது கெட்டுவிட்டால் மனித உடல் முழுவதும்  கெட்டுவிடுகின்றது, அதுதான் உள்ளம். (புகாரி:52)

மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. (புகாரி:1)

அதேபோன்றுதான் செயல்களை கண்டிக்கின்ற, புகழுகின்ற அல்லாஹ் உள்ளத்தை கண்டித்து, புகழ்ந்து கூறுவதை அல்குர்ஆனிலே பல இடங்களில் காணலாம்!

فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ‌ؕ ‏

….அவருடைய இதயம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது… (2:283)

وَجِلَتْ قُلُوْبُهُمْ

….அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும், (8:2)

ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ

அப்பால் உங்களுடைய இதயங்கள் இதற்குப் பின்னும் (கல் நெஞ்சாகி) கடினமாகி விட்டன; … (2:74)

اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ‏

பரிசுத்தமான இதயத்துடன் அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றெவருக்கும் பயனளிக்காத நாள்.) (26:89)

اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَٮِٕذٍ لَّخَبِيْرٌ

اِنَّ     நிச்சயமாக,     رَبَّهُمْ     அவர்களுடைய இறைவன்,     همْ     அவர்கள்,     يَوْمَٮِٕذٍ     அந்நாளில்,     خَبِيْرٌ‏    ஆழ்ந்தறிபவன்

நிச்சயமாக அவர்களின் இரட்சகன், அவர்களைப்பற்றி அந்நாளில் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (100:11)

இந்த வசனத்தின் மூலம் மண்ணறையிலிருந்து மனிதர்கள் எழுப்பப்பட்டு, மனிதர்களுடைய செயற்பாடுகள் எல்லாம் வெளிப்படுத்தப்படுகின்ற அந்த நாளையில், அனைத்தையும் அறிந்த அல்லாஹ், மனிதர்களுடைய உள்ளத்தில் உள்ளவற்றையும் செயல்களையும் நுணுக்கமாக அறிந்து, தெரிந்து, அதற்கு அநியாயம் இழைக்காமல் கூலி வழங்கக் கூடியவனாக இருக்கிறான் என்று அல்லாஹ்வைப் பற்றி சொல்லிக் காட்டுகின்றான்.

فَيَوْمَٮِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏

அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்து விடும்.15,

وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِىَ يَوْمَٮِٕذٍ وَّاهِيَةٌ ۙ‏

வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.16,

وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ‌ؕ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَٮِٕذٍ ثَمٰنِيَةٌ ؕ‏

இன்னும், மலக்குகள் அதன் ஓரங்களில் இருப்பார்கள், அந்நாளில் உமதிரட்சகனின் அர்ஷை (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டிருப்பார்கள்.17,

يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏

(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் எடுத்துக் காட்டப்படுவீர்கள்; உங்களிலிருந்து மறையக்கூடிய எதுவும் (அவனுக்கு) மறைந்துவிடாது. (69:15-18)

எனவே இந்த சூரா, மனிதர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், அப்படி நன்றி உள்ளவர்களாக இருப்பதற்கு நாங்கள் உலகத்துக்கு வாழ வந்தவர்கள் அல்ல, மறுமைக்காக வாழ வந்தவர்கள், ஒருநாள் அல்லாஹ் எங்களை மறுமையில் எழுப்புவான், எங்களை விசாரிப்பான் எங்களுடைய செயல்பாடுகளுக்கு நியாயமாக கூலி வழங்குவான் என்ற சிந்தனையை மனித உள்ளங்களில் விதைக்கின்றது.

எனவே நாமும் அந்த மறுமை உணர்வோடு இந்த உலகத்தில் வாழ முயற்சிக்க வேண்டும்.

ஸூரா ஆதியாத்தின் விளக்கம் முற்றுப் பெறுகின்றது.

!وأخر دعوانا أن الحمد لله رب العالمين

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *