ஸூரதுத் தகாஸுர் விளக்கவுரை !

سُورَةِ التَّكَاثُرِ

ஸூரதுத் தகாஸுர்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரதுத் தகாஸுர்(அதிகம் தேடுதல்/பேராசை)

இறங்கிய காலப்பகுதி: மக்கீ

வசனங்கள்: 8

சிறப்பம்சம்:

இந்த ஸூராவைப் பற்றி உபையுப்னு கஃப் ரலி அவர்கள் கூறும் போது ‘ஆதமுடைய மகனுக்கு ஒரு பள்ளத்தாக்கு நிறைய தங்கம் இருந்தாலும் இரண்டாவது ஒன்றை ஆசை வைப்பான், அவனது வாயை மண்ணைத் தவிர எதுவும் நிரப்பாது, பாவ மீழ்ச்சி தேடுபவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்கிறான். என்ற இந்த செய்தியை அல்ஹாகுமுத்தகாசுர் என்ற ஸூரா இறங்கும் வரையில் நாங்கள் குர்ஆனுடைய வசனமாகவே பார்த்தோம்.’ என்று கூறினார்கள். (புகாரி:6440)

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ‘அது குர்ஆனில் உள்ளதா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது என்று கூறினார்கள். (புகாரி:6437)

அபூமூஸா ரலி அவர்கள் இதனை குர்ஆனில் ஓதியதாக கூறுகின்றார்கள். (முஸ்லிம்)

ஸைதுப்னு அர்கம் ரலி அவர்கள் கூறும் போது, ‘நபிகளாருடைய காலத்தில் நாங்கள் இதனை ஓதி வந்தோம்’ என்று கூறினார்கள். (அஹமத்: 19280)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏

اَلْهٰٮكُمُ     அது உங்களை ஈடுபடுத்தியது/பராக்காக்கியது,     التَّكَاثُرُۙ‏     அதிகம்  தேடுதல் 

ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக் கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது.   (102:1)

இந்த வசனத்தின் மூலம், அல்லாஹ்வை விட்டும் மனித சமூகத்தை மறக்கடிக்கச் செய்து, இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கக்கூடிய ஒரு அம்சத்தை அல்லாஹ் சொல்கிறான். அதுதான் ‘உலகத்தில் வாழும் போது எதுவெல்லாம் மனிதனுக்கு இன்பத்தைத் தருமோ மகிழ்ச்சியைத் தருமோ அதையெல்லாம் அதிகம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற அந்த போட்டி, பேராசை’ அல்லாஹ் இந்த உலகின் நிலையைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றான்.

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ

(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையாட்டும், வீணும், அலங்காரமும், (அது) உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும், பிள்ளைகளிலும் (ஒருவருக்கொருவர்) அதிகபடுத்திக் கொள்வதும்தான்…. (57:20)

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்: இந்த வசனத்தில் எதனை மனிதன் அதிகம் தேடுகிறான் என்பதை அல்லாஹ் தெளிவாகக் கூறவில்லை, இமாம் இபுனுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறும் போது, ‘அதிகம் தேடுவதே இழிவானதாக கருதப்படுகிறது, எதனை தேடுகிறான் என்பது நோக்கம் அல்ல, அல்லது பொதுவாக எதனை அதிகம் தேடினாலும் அது கேவலமானது என்பதனாலே அல்லாஹ் கூறாமல் விட்டு விட்டான்.’ என்று கூறினார்கள். இந்த கருத்தைப் பதிந்த ஷன்கீதி இமாமவர்கள் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்களின் கூற்றை விளக்கும் பொது; ‘முதல் கருத்துப்படி, அல்லாஹ் கண்டித்தது ‘பேராசையையும், கலக்கத்தையுமே, இரண்டாவது கருத்தின் படி; ‘பணம்,  பிள்ளை, அந்தஸ்த்து, கட்டிடம்  கட்டுதல், விவசாயம் செய்தல் என்று எதனையெல்லாம் அதிகம் தேட முடியுமோ அந்த அனைத்தையும் சேர்த்துக்கொள்ளுதல்.’ என்று விலக்கிவிட்டு, இது போன்ற விளக்கத்தை இந்த வசனத்திற்கு எந்த விரிவுரையாளரும் கூறியதை நான் பார்த்ததில்லை. ஆனாலும் மொத்தத்தில் இந்த அத்தியாயம் இறங்கிய காரணம் ஸபபுன் னுஸூல் விடயத்தில் ஒன்றுபட்டார்கள், அதுதான் ‘தம் பெற்றோர்கள், மூதாதையர்கள் என்று உயிரோடிருந்தவர்களை  கணக்கிட்டு பெருமையடித்ததும், மரணித்த முன்னோர்களை கணக்கிட்டு பெருமையடித்ததும்’ என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

மனிதன் பணத்தின் மீதும், சொத்து செல்வங்கள் மீதும் ஆசை ஆர்வம் கொண்டவனே என்பதற்கான சில ஆதாரங்கள் பின்வருமாறு;

அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘நான் நபி ஸல் அவர்களிடம், அவர்கள் அல்ஹாகுமுத்தகாசுர்  சூராவை ஓதிக் கொண்டிருக்கும் போது வந்தேன், அப்போது அவர்கள், ‘ஆதமுடைய மகன்! எனது சொத்து எனது செல்வம் என்று கூறுகிறான், ஆதமுடைய மகனே! உனக்கு நீ சாப்பிட்டு முடித்ததும், அணிந்து உக்கிப்போனதும், தர்மம் செய்து சேமித்ததும் தவிர எந்த சொத்துமில்லையே’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு அடியான் எனது சொத்து, எனது செல்வம் என்று கூறுகின்றான், அவனது சொத்தில் அவனுக்கு இருப்பதெல்லாம் மூன்று விடயம் தான், அவன் சாப்பிட்டு முடித்ததும், அணிந்து உக்கிப்போனதும், தர்மம் செய்து சேமித்து வைத்ததுமே. அதை தவிர உள்ளவைகள் அவனை விட்டும் சென்று விடும், அது மக்களுக்கு உரியதாக ஆகிவிடும்.’  (முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஆதமுடைய மகன் முதுமையை அடைகின்றான், அவனோடு சேர்ந்து இரண்டு விடயங்கள் (பெரிதாகின்றன) இளமையை அடைகின்றன, பணத்தின் மீது ஆசையும், வாழ்க்கையின் மீது ஆசையும்.’ என்று கூறினார்கள். (புகாரி:6421, முஸ்லிம்)

இறங்கியதற்கான காரணம்:

இப்னு புரைதா அவர்கள், அல்ஹாகுமுத்தகாசுர் என்ற ஸூரா இறங்கியதற்கான காரணத்தைக் கூறும் போது; ‘அது பனுல் ஹாரிஸா, பனுல் ஹாரிஸ்  ஆகிய அன்சாரிகளின் இரண்டு கோத்திரங்களின் விடயத்தில் இறங்கியது, அவர்கள் மரணித்தவர்களை வைத்தும் உயிரோடு இருப்பவர்களை வைத்தும் ஒருவருக்கொருவர் பெருமை பாராட்டிக் கொண்டார்கள், அவர்களில் ஒரு சாரார் தங்களுடைய சமூகத்தில் இன்னின்ன மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பெருமை பேசிக்கொள்ள, மற்றவர்கள் எங்களிலும் அதுபோன்று இருக்கிறார்கள் என்று உயிர் உள்ளவர்களைப் பார்த்து பேசிக்கொள்வார்கள், பிறகு மண்ணறைகளுக்குச் சென்று, சமாதிகளைப் பார்த்து எங்களில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள் என்று ஒரு சாரார் பேச, அடுத்தவர்களும் எங்களில் அப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள் என்று பேசிக்கொள்வார்கள், அந்த நேரத்தில் அல்லாஹ், நீங்கள் மண்ணறைகளை சந்திக்கும் வரையில் அதிகம் தேடுவது (பெருமைபட்டுக்கொள்வது) உங்களை பறகாக்கிவிட்டது என்பதை இறக்கிவைத்தான். (இப்னு அபீ ஹாதிம், இப்னு கஸீர்)

இமாம் கத்தாதா ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் போது; ‘அவர்கள் தங்களது சந்ததியினரை வைத்து, நாங்களே எண்ணிக்கையால் அதிகமானவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் அனைவரும் மரணித்து மன்னறைகளுக்குள் புதைக்கப்படும் வரையில் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

அடுத்து, பொருளாதாரத்திற்கும், சொத்து செல்வங்களுக்கும் அடிமைப்பட்டு, அதிலே மூழ்கிவிடுவதை குர்ஆனும் சுன்னாவும் எச்சரிப்பதோடு, அதில் மூழ்கிவிடாமல் இருப்போரை புகழ்ந்துமிருக்கின்றது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏

விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய மக்களும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களை(த் திருப்பி) வீணாக்கி விட வேண்டாம், இன்னும், எவர் அதைக் செய்கிறாரோ அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்களாவர். (63:9)

رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ‏

(அவ்வாறு துதி செய்யும்) ஆடவர்கள் – அவர்களை வாணிகமோ விற்பனையோ, அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும், தொழுகையை நிறைவேற்றுவதைவிட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் பராமுகமாக்கிவிடாது, இதயங்களும், பார்வைகளும் தடுமாற்றமடையும் ஒருநாளை அவர்கள் பயந்து கொண்டிருப்பர். (24:37)

حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏

حَتّٰى     வரை,    زُرْتُمُ     நீங்கள் சந்தித்தீர்கள்,     الْمَقَابِرَؕ‏     புதை குழிகள்

மண்ணறைகளை நீங்க சந்திக்கும்வரை. (102:2)

இந்த வசனத்தின் மூலம், உலகத்தில் ஒரு மனிதன் இன்பங்களை அதிகம் தேடுவதில் கவனம் செலுத்துவது என்பது மரணம் வரைக்கும் மண்ணறையை சந்திக்கும் வரைக்கும் நிகழும் என்பதும், அவன் மண்ணறையை எப்போது சந்திக்கின்றானோ அப்பொழுதுதான் அவனுக்கு இந்த உலகத்தின் பெருமதியும் அவனது வாழ்க்கையின் பெருமதியும் விளங்கும்  என்பதும் தெளிவாகின்றது.

அடுத்து இந்த வசனத்தில் ‘நீங்கள் மண்ணறையை சந்திக்கும் வரையில்’ என்பதன் மூலம் சந்திக்கச் செல்லுகின்ற மனிதன் ஒரு நாள் திரும்பி வருவான் என்ற அடிப்படையில் மண்ணறை வாழ்க்கை தற்காலிகமானது அங்கிருந்து மனிதன் மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை நோக்கி செல்வான் என்பதும் உணர்த்தப்படுகின்றது.

இந்த வசனத்தை செவிமடுத்த ஒரு நாட்டுப்புற அரபி; ‘கஃபாவின் இரட்சகன் மீது சத்தியமாக! மனிதர்கள் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவார்கள்.’ என்று கூறிய போது. ‘ஏன் அப்படிச் சொன்னீர்?’ என்று கேட்கப்பட்டதாம், அதற்கு அவர்; ‘சந்திக்க செல்கின்ற ஒவ்வொருவரும், திரும்பி வருவது நிச்சியமானதே!’என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இபுனு கஸீர்)

இதே கருத்து உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்)

இப்னு கஸீர் இமாம் அவர்கள் கூறும் போது; ‘நீங்கள் மண்ணறையை சந்திக்கும் வரையில்’ என்றால் மண்ணறைக்குச் சென்று அதில் நீங்கள் அடக்கம் செய்யப்படும் வரையில்’ என்பதே சரியான கருத்து, அது பின்வரும் நபிமொழியைப் போன்றது என்று கூறினார்கள்.

நபி ஸல் அவர்கள் ஒரு நாட்டுப்புற அரபியை நோய் விசாரிக்கச் சென்றபோது, ‘கவலைப்பட வேண்டாம் அல்லாஹ் நாடினால் குணமடையும், (பாவத்தை போக்கும்)’ என்று கூறவே, ‘சுத்தப்படுத்தும் என்றா கூறினீர்!, மாறாக அது வயதான இந்த மனிதனின் சூட்டை வெளிப்படுத்துகின்றது, அது அந்த மனிதனை கப்ரை சந்திக்க வைக்கும்.’ என்று கூற, நபி அவர்கள்: ‘அப்படியானால் அதுவே நடக்கட்டும்’ என்று கூறினார்கள். (புகாரி:3616,5656)

அலி ரலி அவர்கள் கூறினார்கள்; அல்ஹாகுமுத் தகாசுர் என்ற அத்தியாயம் இறங்கும் வரையில் நாங்கள் கப்ருடைய வேதனை விடயத்தில் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தோம். (திர்மிதி:3355, ஷுஅபுல் ஈமான்:395) இது பலவீனமானதாகும், இதன் அறிவிப்பாளர்களான ‘ஹஜ்ஜாஜ் பின் அர்தாஃ, அம்ர் பின் அபீ கைஸ்‘ பலவீனமானவர்களே.

இந்த வசனத்தின் விளக்கத் தொடரில் இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கப்ர்களை மண்ணறைகளை (தரிசிப்பது) ஸியாரத் செய்வது பற்றிய ஒரு ஆய்வையும் பதிவு செய்துள்ளார்கள் உண்மையில் அது மிகப் பொருத்தமானதே, அதனால் அதனை இங்கே நாமும் நோக்குவோம்!

மண்ணறைகளை தரிசிப்பதில் பொதுவான தடை இருந்ததற்கான காரணம்; மரணித்த மூதாதையர்களின் பெருமைகளை பேசுவதாகவே இருந்தது, பிறகு மண்ணறைகளை தரிசிப்பதை நபி அவர்கள் அனுமதித்தார்கள்.

அனுமதி வழங்கப்பட்டவர்கள் ஆண்கள் மட்டுமா, அல்லது பெண்களுமா என்பதில் கருத்துவேறுபட்டார்கள் அறிஞர்கள். பெண்களுக்கு கப்ர்களை தரிசிப்பது கூடாது என்று சொன்ன அறிஞர்கள் சில ஆதாரங்களை முன்வைத்தார்கள், ஆனாலும் பெண்களுக்கும் அனுமதி இருக்கின்றது என்பதே ஆதாரங்களுக்கு மிக நெருக்கமான கருத்தாகும்.

அந்த அடிப்படையில் தடை செய்தவர்கள் மிகப் பிரதானமாக;

  • ஆரம்பத்தில் இருந்த அந்தத் தடையிலிருந்து பெண்கள் நீக்கப்படவில்லை என்றும்,
  • மண்ணறைகளை தரிசிக்கும் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று எச்சரிக்கை வந்திருப்பதும் காரணமாகும் என்றும் கூறினார்கள்.

பெண்களும் மண்ணறைகளை தரிசிக்கலாம் என்று கூறிய அறிஞர்கள்,

  • ‘பொதுவான கட்டளையில் அவர்களும் உள்வாங்கப்படுவார்கள் என்றும்,
  •  சபிக்கப்பட்டவர்கள் என்ற நபி மொழி இரண்டு அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, ஒன்று கப்ர்களை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கிறான் (இப்னு ஹிப்பான்:3178) என்று பொதுவாகவும், கப்ர்களை அதிகம் தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கிறான் (திர்மிதீ: 1056 இன்னும் பல கிரந்தங்கள்) என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மண்ணறைகளை அதிகம் தரிசிக்கும் பெண்கள் தான் தடுக்கப்பட்டிருக்கிறார்களே அல்லாமல், சாதாரணமாக தரிசிப்பது தடுக்கப்படவில்லை என்று கூறினார்.

இந்த நபிமொழியைப் பொறுத்தவரை இப்னு அப்பாஸ் ரலி அவர்களைத் தொட்டு அறிவிப்பவர் ‘அபூ ஸாலிஹ்‘ என்பவரே, இவர் யார் என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு காணப்படுகின்றது. இவரது பெயர் ‘மீஸான்’ என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறினார்கள், இந்த  அடிப்படையில் இதனை   ஆதாரப்பூர்வமானது ஸஹீஹ் என்று கூறினார்கள், ஆனால் அவரது பெயர் ‘பாதாம் மவ்லா உம்மி ஹானிஃ’ (முஸ்னத் இப்னு ஜஃத்:1500) என்பதாகும். அவர் பலவீனமானவரே. இதனை பல அறிஞர்கள் கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்) அதே நேரம் அதிகம் தரிசிப்பவர் (இப்னு  மாஜா:1575) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் தரிசிப்பவர் என்ற செய்தி அபூ ஹுரைரா ரலி வழியாகவும் பதியப்பட்டுள்ளது (திர்மிதீ:1056,3178). அது ஹஸன் தரத்தில் உள்ள செய்தியாகும், அதே செய்தியை இப்னு ஹிப்பான் அவர்கள் ‘பொதுவாக சந்திப்பவர்’என்று பதிந்துள்ளார்கள். அது ஷாத் வகையை சார்ந்ததாகும். இதே செய்தி ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலி வழியாக அஹ்மதில்:15657 பதியப்பட்டுள்ளது, அதன் அறிவிப்பாளரில் ‘அப்துர் ரஹ்மான் பின் பஹ்மான்’ எனும் பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.

எனவே அதிகம் சந்திக்கும் பெண்கள் என்ற அறிவிப்பே பலமானது. அல்லாஹு அஃலம்

மேலும் சில ஆதாரங்களையும் முன் வைத்தார்கள், அவை வருமாறு:

ஆயிஷா ரலி அவர்கள் நபிகளாரிடத்தில், ‘அல்லாஹ்வின் தூதரே! நான் மண்ணறைகளை சந்திக்கச் சென்றால் என்ன சொல்ல வேண்டும்?’ என்று கேட்ட பொழுது, நபியவர்கள், ‘السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَيَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُونَ ” என்ற  துவாவை சொல்லிக் கொடுத்தார்கள். (முஸ்லிம்)

அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘நபி ஸல் அவர்கள், ஒரு கப்ருக்கு பக்கத்தில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அருகாமையால் நடந்து சென்ற போது, ‘நீ அல்லாஹ்வைப் பயந்து, பொறுமையாக இரு!’ என்று கூறவே, கூறியவர் நபி அவர்கள் தான் என்று அறியாத அந்தப் பெண்மணி, ‘எனக்கு வந்தது உங்களுக்கு வந்திருந்தால் தான் தெரியும், என்னை விட்டு சென்று விடுங்கள்!’ என்று கூற, நபி அவர்கள் சென்று விட்டார்கள், பிறகு இப்படி கூறியது நபியவர்கள் தான் என்று  தெரிந்து கொண்ட அந்தப் பெண்மணி, நபிகளாரிடத்தில் சென்று முறைப்பாடு செய்த போது, அல்லாஹ்வின் தூதர்; ‘பொறுமை என்பது முதல் கட்டத்தில் வருவது தான்.’ என்று கூறினார்கள். (புகாரி:1283,1302, முஸ்லிம்)

எனவே இந்த ஆதாரங்களையும், கருத்துக்களையும் பார்க்கின்ற பொழுது பெண்கள் மண்ணறைகளைத் தரிசிப்பதை நபி அவர்கள் பொதுவாகத் தடுக்கவில்லை என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.

அடுத்து, மன்னறைகளை தரிசிப்பதன் நோக்கத்தை வைத்துப் பார்க்கும்போது, ஆண்களுக்கு அதன் மூலம் என்ன நோக்கங்கள் நிறைவேருமோ அதே நோக்கம் ‘மறுமையைப் பற்றிய சிந்தனை, உலகத்தின் மீது பற்று குறைவு’ போன்ற விடயங்கள் பெண்கள் விடயத்திலும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. அந்த அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே இந்த சட்டம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

எனவே, பெண்கள் விரும்பினால் அதிகம் அதிகம் மண்ணறைகளை தரிசிக்க செல்லாமல், சாதாரணமாக செல்வதும், அங்கு சென்று தகுதியற்ற வார்த்தைகளைப் பேசாமல் நபிகளார் காட்டித் தந்த பிரகாரம் தரிசிப்பதும் அவர்களுக்கு ஆகுமானது. (அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்) (அல்வாஉல் பயான்)

குறிப்பு:

அறிஞர் இபுனுல் கையிம் அவர்கள் தஹ்தீபு ஸுனனி அபீ தாவுத் என்ற நூலில் ‘பெண்கள் மையவாடிகளை தரிசிப்பது சம்பந்தமாக’ கூறும் போது; { (முன்னர் முன்வைக்கப்பட்ட ஆதாரங்ககள் அடிப்படையில்) ஹராம் தடுக்கப்பட்டது,  (உம்மு அதிய்யா ரலி அவர்கள் கூறினார்கள்: ஜனாஸாக்களை பின்துயர்வதிலிருந்து நாங்கள் தடுக்கப்பட்டோம், ஆனாலும் வன்மையாக தடுக்கப்படவில்லை. என்ற (புகாரி:1278, முஸ்லிமில்) வருகின்ற ஆதாரத்தை வைத்து) மக்ரூஹ் வெறுக்கப்பட்டது  என்ற அஹ்மத் இமாமவர்களின் கூற்று, (முன்னர் பதியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்) முபாஹ் ஆகுமானது,} என்று மூன்று கருத்துக்கள் இருப்பதாக கூறுகின்றார்கள்: மேலும் இமாமவர்கள் பின்வரும் ஆதாரத்தையும் பதிந்தார்கள்;

அப்துல்லாஹிப்னு அபீமுலைகா ரஹ் அவர்கள் கூறினார்கள்: ஒரு தடவை உம்முல் முஃமினீன் ஆயிஷா ரலி அவர்களை நான் கண்டபோது, ‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்க, ‘எனது சகோதரன் அப்துர் ரஹ்மான் உடைய கப்ரை தரிசித்துவிட்டு வருகிறேன்’ என்று கூறினார்கள், அப்போது நான் ‘அல்லாஹ்வின் தூதர் அதனைத் தடுத்தார்களே?’ என்று கூறிய போது, ‘ஆம், ஆரம்பத்தில் தடுத்து விட்டு, பிறகு அனுமதித்தார்கள்.’ என்று கூறினார்கள். (பைஹகீ:7207) இதே அறிவிப்பு திர்மிதியில் (1055, பலவீனமானது, இப்னு ஜுரைஜ் இருக்கின்றார்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (முஸ்னத் அஹ்மத் அடிக்குறிப்பு; ஷுஅய்புல் அர்னாஊத்)

இமாம் பகவி ரஹ் அவர்கள் ஷர்ஹுஸ் ஸுன்னா எனும் நூலில் கூறும் போது; “அறிஞர்களுள் ஒரு சாரார், ‘இப்னு அப்பாஸ் ரலி அவர்களது ஹதீஸில்  தடுக்கப்பட்டிருப்பது,  நபியவர்கள் கப்ர்களை தரிசிப்பதை அனுமதிப்பதற்கு முன்னால் உள்ள செய்தியாகும், நபியவர்கள் கப்ர்களை தரிசிக்க அனுமதி கொடுத்த பிறகு அந்த அனுமதிக்குள் பெண்களும் உள்வாங்கப்பட்டார்கள். என்று கூறினார்கள்’ இன்னும் சில அறிஞர்கள், பெண்களுக்கு கப்ர்களை ஸியாரத் செய்வது தடுக்கப்பட்டதற்கு காரணம் அவர்களிடத்தில் இருக்கும் குறைந்த அளவிலான பொறுமையும், அதிக அளவிலான பதட்டமுமே’ என்று கூறினார்கள்.  (ஷரஹுஸ் ஸுன்னா: 1554)

மேலும் இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள்,  கப்ர்களை அதிகம் தரிசிப்பதை பற்றி இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்ன அபூ ஹய்யான் ரஹ் அவர்களது  கருத்தையும் பதிவு செய்தார்கள். அது பின்வருமாறு:

இந்த வசனத்தின் மூலம் கப்ருகளை அதிகம் தரிசிப்பது கண்டிக்கப்பட்டது, ஆரம்பத்தில் கப்ர்களை தரிசிப்பதை தடுத்த நபி அவர்கள், பிறகு அனுமதித்ததற்கான காரணமே, ‘கப்ருகளில் இருந்து படிப்பினை பெறுவது தான், மாறாக ‘கப்ர்களை வைத்து பெருமை அடிப்பதோ புகழ் தேடுவதோ அல்ல’ பிறகு இப்னு அதிய்யா அவர்களது கருத்தான ‘கப்ர்களை தரிசிப்பதை வளமையாக்கிக் கொண்டு, அதனை கற்களால் கட்டி, நிறம் தீட்டி, விளக்குகளை ஏற்றுகின்ற மனிதர்களைப் போன்று கப்ர்களை நினைவூட்டுவதற்கு அல்ல,’ என்ற கருத்தைக் கூறி விட்டு,’ ‘இப்னு அதிய்யா அவர்கள், ஸ்பெயினில் (உந்துலுஸ்) இருக்கின்ற கப்ருகளைத்தவிர வேறு எந்த கப்ருகளையும் அவர் காணவில்லை, எகிப்து (மிஸ்ர்) மக்கள்  கப்ருகளை வைத்து பெருமைப்பட்ட விடயங்களையும், அதற்காக அவர்கள் செலவிடுகின்ற சொத்துக்களையும் அவர் கண்டிருந்தால் இப்னு அத்தியா அவர்கள் ஆச்சரியப்பட்டிருப்பார்கள் உள்ளத்தில் உதிக்காதவைகளையெல்லாம் கண்டிருப்பார்கள்.’ என்று கூறினார்கள்.

மேலும் இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள்,  கப்ர்களை ஸியாரத் செய்து எப்படியெல்லாம் பெருமைப்படுகின்றார்கள் என்பதை சில உதாரணங்களோடு தெளிவுபடுத்திவிட்டு, இப்படி எல்லாம் கபருகளை நபிவழிக்கு மாற்றமாக தரிசித்து பெருமை அடிப்பதை மக்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும், நபிவழியில் எப்படி கப்ருகளை தரிசிப்பது என்று அறிவைத் தேடும் மாணவர்கள்  தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இப்படி குறிப்பிட்ட கப்ருகளை தரிசிப்பது, நபிகளாருடைய வழிமுறையாக இருக்கவுமில்லை, நேர்வழி பெற்ற கலீபாக்கள், பொதுவாகவே நபி தோழர்கள், நபித் தோழர்களைக் கண்ட தாபிஈன்கள், நான்கு மத்கபுடைய இமாம்கள் யாரிடத்திலும் இருக்கவில்லை, மாறாக அவர்களிடத்தில் இருந்தது, அவர்களுக்கு பக்கத்திலிருந்த பொதுவான கப்ர்களை தரிசித்து, அவர்களுக்காக சலாம் சொல்வதும், அவர்களுக்காக பிரார்த்திப்பதும், மண்ணறைகளிலிருந்து படிப்பினை பெறுவதும், அவர்கள் எந்த கப்ருகளுக்கு சென்றார்களோ அதற்காக தன்னை தயார்படுத்துவதும் தான் என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ‏

كَلَّا     அவ்வாறல்ல,     سَوْفَ تَعْلَمُوْنَۙ‏    நீங்கள் அறிவீர்கள்

அவ்வாறல்ல!  நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (102:3)

 ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ‏

ثُمَّ    பிறகு,     كَلَّا     அவ்வாறல்ல,     سَوْفَ تَعْلَمُوْنَؕ‏     அறிவீர்கள்

பின்னர், அவ்வாறல்ல!  நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (102:4)

இந்த வசனங்கள் மூலம், அதிகம் தேடுவதில் ஈடுபட்டு, அல்லாஹ்வையும் அவனது மார்க்கத்தையும் புறக்கணித்த மக்களுக்கு அப்படி வாழக்கூடியவர்கள் அந்த வாழ்க்கையின் உண்மைத் தன்மையை மறுமை நாளில் கண்டுகொள்வார்கள் என்று கூறிவிட்டு, அதனை மீண்டும் உறுதிப்படுத்த அதே வாசகத்தை அல்லாஹ் திருப்பி சொல்லுகின்றான்.

இன்னும் சில அறிஞர்கள், ‘பின்னால் வரும் வசனம் உறுதிப்படுத்துவதற்காக கூறப்பட்டது அல்ல, மாறாக அலி அவர்கள் கூறியது போன்று ‘முதலில் கூறப்பட்டிருப்பது மண்ணறையில் உண்மை நிலையை கண்டு கொள்வார்கள் என்பதும், இரண்டாவது வசனத்தின் மூலம் மறுமையில் கண்டு கொள்வார்கள் என்பதும் தான்.’ என்று கூறியிருக்கின்றார்கள் அது அறிவுப்பூர்வமான விளக்கமும் தான். இந்த வசனத்தை வைத்து சில அறிஞர்கள் கப்ரின் தண்டனைக்கு ஆதாரம் பிடித்தார்கள். (அல்வாஉல் பயான்)

இந்த வசனத்தை விடவும் மண்ணறைத் தண்டனைக்கு குர்ஆனிலிருந்து மிகத் தெளிவான ஆதாரமாக பின்வரும் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடலாம்.

وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ‌ۚ‏

ஆகவே, அவர்கள் சூழ்ச்சி செய்ததின் தீமைகளை விட்டும் (ஈமானை மறைத்துக்கொண்டிருந்த) அவரை அல்லாஹ் பாதுகாத்துக்கொண்டான், மேலும் ஃபிர் அவ்னைச் சார்ந்தோரை தீயவேதனை சூழ்ந்து கொண்டது.(40:45)

اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ‏

அந்(நரக)நெருப்பு_அதன் மீது காலையிலும், மாலையிலும் அவர்கள் எடுத்துக் காட்டப்படுகிறார்கள், மேலும் மறுமை நாள் நிலைபெற்று விடும் நாளில், “பிர்அவ்னைச் சார்ந்தோரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என மலக்குகளுக்குக் கூறப்படும்). (40:46)

அந்த வசனத்தில் வரும் முதலாவது தண்டனை உலகத்திலும் இரண்டாவது தண்டனை மறுமையிலும் என்பதை புரிந்து கொள்ளலாம் (அல்வாஉல் பயான்)

இந்த இரண்டு வசனங்களுக்கும் விளக்கம் சொன்ன இமாம் ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள்; ‘ஒரு எச்சரிக்கையின் பின் இன்னொரு எச்சரிக்கை விடுவதற்காகவே’ என்று கூறினார்கள். இமாம் ளஹ்ஹாக் ரஹ் அவர்கள் கூறும் போது, முதலாவது வசனம் காபிர்களே இறை மறுப்பாளர்களே நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்றும், இரண்டாவது வசனம், முஃமின்களே இறை விசுவாசிகளே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்என்றும் அர்த்தம் என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

 كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ‏

كَلَّا     அவ்வாறல்ல,     لَوْ      நிபந்தனை இடுவதற்கும், கைசேதப்படுவதற்கும் பாவிக்கப்படும் சொல்,     تَعْلَمُوْنَ     நீங்கள் அறிவீர்கள்/கிறீர்கள்,     عِلْمَ     அறிவு,     الْيَقِيْنِ‏     உறுதியானது

அவ்வாறால்ல! நீங்கள் உறுதியான அறிவாக அறிவீர்களாயின் (நீங்கள் ஈடுபட்டிருக்கும் பயனற்ற செயல் உங்களைப் பராக்காக்கியிருக்காது) (102:5)

இந்த வசனம் மூலம், மனிதர்களாகிய நீங்கள் இந்த உலக இன்பங்களில் மூழ்கி இருப்பதன் விபரீதத்தை உண்மையாகவே உறுதியாக அறிந்து கொண்டால் ஒருபோதும் மண்ணறைகளை சந்திக்கும் வரை  நீங்கள் உலக இன்பங்களில் மூழ்கி இருக்க மாட்டீர்கள் என்பதை உணர்த்துகின்றது. (இப்னு கஸீர்)

உறுதியாக அறிதல்; எனும் போது, குர்ஆன் எந்த சந்தேகமும் இல்லாமல் மறுமையில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பற்றி தெளிவாகச் சொல்லித் தந்திருக்கிறது. அதை ஒரு மனிதன் சரியாக விளங்கிக் கொண்டால் இந்த உலகம், இந்த உலகத்தின் இன்பங்கள் எவ்வளவு போலியானது என்பதை அறிந்து கொள்வதோடு, மண்ணறை வாழ்க்கை, மறுமை வாழ்க்கை ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமானது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இதனையே இந்த வசனம் ‘மிகத் தெளிவாக அறிந்து கொண்டால்’ என்று எங்களுக்கு உணர்த்துகின்றது. (அல்லாஹு அஃலம்)

 لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ‏

لَتَرَوُنَّ     நிச்சயமாகப் பார்ப்பீர்கள்,     الْجَحِيْمَۙ‏     (ஜஹீம்) நரகம்

(அல்லாஹ்வின் மீது சத்தியமாக) நீங்கள் நரகத்தை பார்ப்பீர்கள். (102:6)

 ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ‏

ثُمَّ     பிறகு,    لَتَرَوُنَّهَا     அதை நிச்சயமாகப் பார்ப்பீர்கள்,    عَيْنَ      கண்,     الْيَقِيْنِۙ‏      உறுதியானது

பின்னர், நீங்கள் அதை கண்ணுக்கெதிரில் பார்ப்பீர்கள்.    (102:7)

இந்த வசனங்கள் மூலம் மறுமை நாளில் நரகை நிச்சயமாக மனிதன் காணுவான் உறுதியாகவே கண்டுகொள்வான் என்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தி சொல்கிறான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

فَوَرَبِّكَ لَـنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَــنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَـنَّمَ جِثِيًّا‌ ۚ‏ , ثُمَّ لَـنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا‌ ۚ‏, ثُمَّ لَـنَحْنُ اَعْلَمُ بِالَّذِيْنَ هُمْ اَوْلٰى بِهَا صِلِيًّا

ஆகவே, (நபியே!) உமதிரட்சகன் மீது சத்தியமாக! நாம் அவர்களையும், ஷைத்தான்களையும் நிச்சயமாக ஒன்று திரட்டுவோம், பின்னர் நரகத்தைச் சூழ முழந்தாளிட்டவர்களாக அவர்களை நாம் நிச்சயமாக முன்னிலைப் படுத்தி,68, ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அவர்களில் எவர் ரஹ்மானுக்கு மாறு செய்வதில் மிகக் கடினமானவரோ அவரை நிச்சயமாக நாம் (பிரித்து)கழற்றி எடுப்போம்,69, பின்னர், அதில் நுழைவதற்கு எவர்கள் மிகத் தகுதியுடையோர்  என்பதையும் நிச்சயமாக நாம் அறிவோம்.70,

وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا ‌ؕ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا‌ ۚ‏

இன்னும், உங்களில் எவரும் (ஸிராத் எனும் பாலத்திற்கு மேல் நடப்பதன் மூலம்) அதனிடம் வராமலிருக்கப்போவதில்லை, உமது இரட்சகன்மீது இது கட்டாயமான முடிவாகிவிட்டது.71,

ثُمَّ نُـنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا‏

பின்னர் பயபக்தியுடையோராக இருந்தவர்களை நாம் காப்பாற்றுவோம், அநியாயக்காரர்களை முழந்தாளிட்டவர்களாக அதில் விட்டும் விடுவோம். (19:67-72)

மறுமை நிகழ்வைப் பற்றி நபி ஸல் அவர்கள் கூறுகின்ற போது; ‘மறுமை நாளில் நரகத்திற்கு மேலால் ஒரு பாலம் போடப்படும், அந்தப் பாலத்தை முதலாவது கடக்கின்ற கூட்டம் மின்னல் வேகத்திலும், அடுத்த கூட்டம் காற்றின் வேகத்திலும், அடுத்த கூட்டம் பறவையின் வேகத்திலும் கடந்து செல்வார்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “உங்களில் யாராக இருந்தாலும் அல்லாஹ் அவனுடன் மறுமை நாளையில் பேசியே தீருவான், மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர் இருக்க மாட்டார், அவன் வலது பக்கம் திரும்பிப் பார்ப்பான் அவன் உலகத்தில் செய்து முற்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் கண்டுகொள்ள மாட்டான், இடது பக்கம் திரும்பிப் பார்ப்பான் அவன் உலகத்தில் முற்படுத்தியதைத் தவிர எதையும் கண்டுகொள்ள மாட்டான். அவன் முன்னால் பார்ப்பான் நரகத்தைத் தவிர எதனையும் அவனுடைய கண்ணெதிரே கண்டு கொள்ள மாட்டான். எனவே நீங்கள் ஈத்தம் பழத்தின் ஒரு துண்டையாவது தர்மம் செய்து நரகை அஞ்சிக் கொள்ளுங்கள்.” (புகாரி:6539,7512, முஸ்லிம்)

அறிஞர் ஷன்கீதி அவர்கள் கூறும் போது, ‘நரகத்தை மனிதர்கள் பார்ப்பது இரண்டு விதத்தில் இருக்கின்றது, முதல் வகை; உறுதியாக அந்த நரகத்தை மறுமை நாளையில் பார்ப்பது, இது மறுமையின் ஏனைய நிகழ்வுகளை அகோரங்களை பார்ப்பது போன்றது’ என்று கூறினார்கள். அறிவைக் கொண்டும் நம்பிக்கையின் உறுதியைக் கொண்டும் பார்ப்பது, அதன் மூலம் மறுமையில் நடக்கின்ற காட்சிகளையும் அகோரங்களையும் நேரடியாக பார்ப்பவரை போன்ற இடத்துக்கு ஒரு மனிதன் மாறி விடுவது, ‘நீங்கள் உறுதியான அறிவைக் கொண்டு அறிவீர்களாக இருந்தால்’ என்று இந்த ஸூராவில் கூறப்படுவது போன்று, இதற்கு  சான்றாக,

நபியவர்கள் கூறிய; ‘அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று வணங்குவது’ என்ற செய்தியை குறிப்பிடலாம்,

 மேலும்

‘அபூபக்கர் ரலி அவர்களிடம் ‘முஹம்மத், இஸ்ராஃ பயணம் மேற்கொண்டிருக்கிறாராமே!’ என்று கூறப்பட்ட போது, ‘முஹம்மத் உண்மையை உரைத்து விட்டார்’ என்று அபூபக்ர் ரலி அவர்கள் கூறவே, ‘நீர்தான் அவரிடத்திலிருந்து இந்த செய்தியை கேட்கவில்லையே? அப்படியிருந்தும் உண்மைப்படுத்துகிறீரா?’ என்று கேட்கப்பட்டபோது, ‘நபிகளாரிடத்திலிருந்து நேரடியாக நான் கேட்டிருந்தால் உண்மைப் படுத்துவதை விடவும் இந்த கூற்றை நான் உண்மைப்படுத்துகிறேன்.’ என்று கூறினார்கள்.

இது, நபி அவர்கள் உண்மையான நபி என்பதை நம்பிய அந்த உறுதியான அறிவின் வெளிப்பாடு. அதை கண்டது போன்றும் அதைப் பார்த்தது போன்றும் உண்மைப்படுத்தினார்கள். எனவே நரகத்தை ஒரு முஃமின் கண்டது போன்றும் பார்த்தது போன்றும் இந்த உலகத்தில் நம்புகிறான் என்ற ஒரு அறிவும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது வகை; கண்ணினால் நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது, அதுவும் உறுதியான அறிவுதான் அது மறுமையில் நரகத்தை நேரடியாக கண்ட பிறகு நம்புவது என்ற அறிவும் இருக்கிறது. என்பதை புரிந்து கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் அறிவின் தராதரங்களை, படித்தரங்களை மூன்று வகையாக நோக்கலாம்;

  1. ஆதாரங்களை வைத்து அறியும் உறுதியான அறிவு,
  2. கண்ணால் பார்த்து அறிந்து கொள்ளும் அறிவு,
  3. அனுபவித்துப் பார்த்து அறிந்து கொள்ளும் அறிவு.

உதாரணமாக; கஃபா ஆலயம் இருக்கிறது என்று ஆதாரத்தின் அடிப்படையில் நம்பும் அறிவு (عِلْمُ الْيَقِينِ), அதனை கண்ணால் கண்ட பிறகு வரும் அறிவு (عَيْنُ الْيَقِينِ), அதற்குள்ளே நுழைந்து அனுபவித்த பின்பு வரும் அறிவு (حَقُّ الْيَقِينِ). (அல்வாஉல் பயான்)

குறிப்பு:

இமாமவர்கள் கூற்றைப் பார்க்கும் போது இந்த மூன்று வசனங்களையும்

) كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ, لَتَرَوُنَّ الْجَحِيمَ, ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ (

அந்த அடிப்படையில் (உலகில் இருக்கும் போது ஆதாரங்களை வைத்து நரகம் இருக்கிறது என்று முஃமின்கள் நம்பும் அறிவும், மறுமையில் நரகை கண்ணால் கண்ட பிறகு பாவிகள் நம்பும் அறிவும், நரகில் நுழைந்த பிறகு இறைமறுப்பாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளும் அறிவும் இருக்கிறது என்று) நோக்கலாம் என்பது புரிகின்றது. அல்லாஹு அஃலம்!

ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ‏

ثُمَّ     பிறகு,     لَـتُسْــٴَــلُنَّ     நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்,     يَوْمَٮِٕذٍ     அந்நாளில்,     عَنِ         பற்றி,     النَّعِيْمِ‏     அருட்கொடை

பின்னர், அந்நாளில் அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (102:8)

இந்த வசனத்தின் மூலம் உலகில் ஒரு மனிதன் அனுபவிக்கின்ற அனைத்து சந்தோஷங்கள், மகிழ்ச்சிகள் போன்ற நிஃமத்துக்கள் அருட்கொடைகள் பற்றி மறுமையில் அல்லாஹ் கேள்வி கேட்பான், மனிதர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்பது எடுத்துக்காட்டப்படுகின்றது.

அபூஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், பகல் நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் வெளிப்பட்டு சென்றார்கள், அப்போது அபூபக்ர் உமர் ரலி ஆகியோரை சந்தித்த நபி அவர்கள், “உங்கள் இருவரையும் இந்த நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேற்றியது எது?” என்று கேட்கவே, “பசிதான், அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் கூற, நபியவர்கள், “உங்கள் இருவரையும் எது வீட்டிலிருந்து வெளியேற்றியதோ அதுதான், என்னையும் வெளியேற்றியது, எழுந்து வாருங்கள்.” என்று கூறிவிட்டு, ஒரு அன்சாரி நபித்தோழரின் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே அந்த அன்சாரி நபித் தோழர் வீட்டிலே இருக்கவில்லை, அவர்களைக் கண்ட அன்சாரி நபித்தோழரின் மனைவி, “வருக! வருக! அல்லாஹ்வின் தூதரே” என்று வரவேற்றார்கள். அப்போது நபியவர்கள், “கணவர் எங்கே?” என்று கேட்க, “அவர் மதுரமான தண்ணீர் எடுத்துவர சென்றிருக்கிறார்.” என்று கூறினார். அந்த நேரத்தில் அங்கு வந்த அன்சாரி நபித்தோழர் நபியவர்களையும் இரண்டு தோழர்களையும் கண்டவுடன், “மிகச் சிறந்த விருந்தினரை எனக்குத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்று கூறிவிட்டு, தனது தோட்டத்துக்குச் சென்று, பலவகை ஈத்தம் பலங்களைக் கொண்ட ஒரு ஈத்தம் குலையைக் கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டு, சாப்பிடுங்கள் என்று கூறிக் கொண்டே கத்தியை தனது கையில் எடுத்தார்கள், அப்போது நபியவர்கள், “பால் தருகின்ற மிருகத்தை அறுப்பதை உமக்கு நான் எச்சரிக்கிறேன்” என்று கூறவே, அவர் அவர்களுக்காக ஒரு ஆட்டை அறுத்து, சாப்பிடக் கொடுத்தார். நபிகளாரும் இரண்டு தோழர்களும் அந்த ஆட்டு இறைச்சியையும், ஈத்தம் பழங்களையும் சாப்பிட்டு வயிறு நிரம்பி, தண்ணீரைக் குடித்து தாகமும் தீர்ந்த பின்னர், இரண்டு தோழர்களையும் பார்த்து நபியவர்கள், “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த நிஃமத் அருட்கொடை பற்றியும் மறுமையில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள், உங்களது பசி உங்களுடைய வீட்டில் இருந்து உங்களை வெளியேற்றியது, இந்த நிஃமத் கிடைத்த பிறகு தான் நீங்கள் வீடு திரும்புகின்றீர்கள்’ என்று நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் அருட்கொடைகள் கணக்கெடுக்க முடியாத அளவுக்கு அதிகமானவையே. அல்லாஹ் கூறுகிறான்:

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

மேலும், அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணுவீர்களாயின் அதனை நீங்கள் கணக்கிட்டு எண்ணி வரையறுத்துவிட மாட்டீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையோன். (16:18)

அருட்கொடைகளில் முதன்மையானதும், மிகச்சிறந்ததும் இஸ்லாம் என்ற மார்க்கம் கிடைக்கின்ற பாக்கியமாகும்.  அல்லாஹ் கூறுகிறான்:

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ ‏‏

…. இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன், … (5:3)

குர்ஆனும் சுன்னாவும் சொல்லித்தருகின்ற இன்னும் ஒரு சில அருட்கொடைகளை பின்வருமாறு நோக்கலாம்;

وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏

…. மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான், ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள்,… (3:103)

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏ , وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ‏ , وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏

அவனுக்கு நாம் இரு கண்களையும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் ஆக்கவில்லையா?,  மேலும், (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்துவிட்டோம். (90:8-10)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “இரண்டு நிஃமத்துக்கள் அருட்கொடைகள் இருக்கின்றன, மனிதர்களுள் அதிகமானவர்கள் அவ்விரண்டிலும் பொடுபோக்கு செய்கின்றார்கள்; ஆரோக்கியம், ஓய்வு நேரம்.’ (புகாரி:6412)

ஸூரதுத் தகாஸுர் இறங்கிய போது நபி அவர்கள் அதனை ஓதிக் காட்டவே, “என்ன அருட்கொடைகள் பற்றி நாங்கள் விசாரிக்கப்படுவோம்?  தண்ணீரும் ஈத்தம்  பழமும் எங்கள் அருள்களாக இருக்க, எங்களது தோள்களில் வாழ்கள் இருக்க, விரோதிகள் முன்னே இருக்க, என்ன அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவோம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி அவர்கள் “நிச்சயமாக அது நடக்கும்” என்று கூறினார்கள். (அஹமத்: 1405,23640) இது ஹஸன் தரத்தில் உள்ள செய்தியாகும்.

اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

நிச்சயமாக செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றைப்பற்றியும் (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது. (17:36)

அபூஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களது இறைவனை மறுமையில் நாங்கள் பார்ப்போமா?’ என்று கேட்ட பொழுது நபியவர்கள், “பகல் பொழுதிலே, மேகம் இல்லாத நிலையில் சூரியனைப் பார்ப்பதில் நீங்கள் சந்தேகப்படுவீர்களா?” என்று கேட்க, ‘இல்லை’ என்று நபித்தோழர்கள் கூறவே, “பௌர்ணமி இரவையில் மேகம் இல்லாத நிலையில் சந்திரனைப் பார்ப்பதில் நீங்கள் சந்தேகப்படுவீர்களா?” என்று கேட்க, ‘இல்லை’ என்று நபித்தோழர்கள் கூறவே, “எனது ஆத்மா எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுடைய ரப்பை நீங்கள் பார்ப்பதில் சந்தேகப்பட மாட்டீர்கள். “என்று கூறினார்கள். மேலும் “அந்த நாளையில் அல்லாஹ் ஒரு அடியானை சந்தித்து அவனிடம் உன்னை நான் கண்ணியப்படுத்த வில்லையா?, உனக்கு நான் தலைமைத்துவத்தைத் தரவில்லையா?, உனக்கு நான் மனைவியைத் தரவில்லையா?, உனக்கு நான் ஒட்டகத்தையும் குதிரையையும் கட்டுப்படுத்தித் தரவில்லையா? நீ தலைமை வகித்து, சந்தோசமாக இருப்பதற்கு உன்னை நான் விடவில்லையா? என்று கேட்கின்ற பொழுது, மனிதன் அப்படி எல்லாம் எனக்கு தந்தாய் இறைவா! என்று கூறுவானாம், அந்த நேரத்தில் அந்த மனிதனைப் பார்த்து அல்லாஹ், “நீ என்னை சந்திப்பதை ஆதரவு வைத்து வாழ்ந்தாயா?” என்று கேட்கின்ற பொழுது, இல்லை என்று அந்த மனிதன் கூறவே, “நீ என்னை மறந்தது போன்று இன்று உன்னை நான் மறந்துவிட்டேன்”. என்று அல்லாஹ் கூறுவான்.” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாள் நிகழ்ந்துவிட்டால், ஒரு மனிதன் தனது வயதை எப்படி கழித்தான், அவனது அறிவைக் கொண்டு என்ன செய்தான், அவன் சம்பாதித்த சொத்தை எப்படி சம்பாதித்தான், எதில் செலவழித்தான், அவனது வாலிபத்தை எப்படி கழித்தான்? என்ற ஐந்து விடயங்களைப் பற்றி கேட்கப்படும் வரையில் ஒரு அடியானின் கால் பாதம் ஒரு எட்டையும் எடுத்து வைக்காது. (திர்மிதீ: 2416)

ஸூரா தகாஸுர் விளக்கம் முற்றுப் பெற்றது.

!وأخر دعوانا أن الحمد لله رب العالمين

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *