அகீதா – 18 சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல்

PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!!

சத்தியம் செய்வதும் ஒரு வணக்கமாகும். இதனையும் அல்லாஹ்வைக் கொண்டே, அவன் மீதே செய்யவேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்வது இனைவைப்பதாக அமைந்துவிடும். வல்லாஹி, பில்லாஹி, தல்லாஹி போன்ற வார்த்தைகளைக் கொண்டோ அல்லது அல்லாஹ் என்ற சொல்லோடு சேர்க்கப்பட்ட ஒரு சொல்லைக் கொண்டோ (காபாவின் ரப்பின் மீது, சந்திரனை படைத்தவன் மீது, அல்லாஹின் கலாமின் மீது என்பது போன்று) சத்தியம் செய்யலாம்.

சத்தியம் என்பது ஒரு விடையத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவே பெறும்பாலும் செய்யப்படுகின்றது. எந்த விடையத்தில் சத்தியம் செய்யப்படுகின்றதோ அந்த விடையத்தில் அவன் உண்மையாளனா? பொய்யனா? என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். எனும் மறைவான அறிவோடு சார்ந்த ஒரு விடையம் எனும் போது எப்படி மனிதனின் உண்மைநிலையை எந்த நிலையிலும் அறிந்திராத ஒரு படைப்பினத்தின் மீது சத்தியம் செய்யலாம்? என்பதை மாத்திரம் சிந்தித்தால், அது ஷிர்க் என்பதை தெளிவாக புறிந்துகொள்ளமுடியும்.

இந்த சத்தியத்தை மூன்று வகையாக நோக்கலாம்:

1-   ஷிர்க்கில் இனைவைப்பில் சேர்க்கும் சத்தியம்

இது அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வதாகும். உதாரணமாக குறிப்பிட்ட நல்லடியாரின் மீது சத்தியமாக, பிள்ளையின் தலையின் மீது சத்தியமாக, சந்திரன் சூரியன் மீது சத்தியமாக, மிம்பர் படியின் மீது சத்தியமாக என்று பாவிப்பது போன்று. இப்படி சத்தியம் செய்வது ஷிர்க் ஆகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.  (புஹாரி 4860, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’  இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கின்றவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும். (புஹாரி: 6047, முஸ்லிம்)

இப்னு உமர்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: “சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள்.  (புஹாரி: 3836, முஸ்லிம்)

இப்னு உமர் (றழி) அவர்கள், காபாவின் மீது சத்தியம் செய்து “லாவல்காபா” என்று  ஒரு மனிதர் கூறுவதை செவிமடுத்ததும், அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்யக்கூடாது, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ‘யார் அல்லாஹ் அல்லாதைக் கொண்டு சத்தியம் செய்கின்றாரோ அவர் இணைவைத்துவிட்டார், அல்லது காபிராகிவிட்டார்.’ என்று கூறியதாக கூறினார்கள். (அஹ்மத், திர்மிதீ, அபூதாவுத்)

2-  பொய் சத்தியம் செய்தல்:

இது அல்லாஹ்வின் மீதே செய்யப்படும். ஆனால் பொய்யாக. அநியாயமான முறையில் ஒருவரின் உரிமையை பறிப்பதற்காக செய்யப்படும். உதாரணமாக; பொருளில் உள்ள குறையை மறைப்பதற்காக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்லது என்று கூறுவது போன்று. இது பெறும் பாவமாகும்.

‘ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில் தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை அவன் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), ‘உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, ‘(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!” என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (திருக்குர்ஆன் 03:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.   (புஹாரி: 2416, முஸ்லிம்)

ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை பொய் சத்தியத்தைக் கொண்டு அபகரித்துக் கொள்வானாயின் அல்லாஹ் அவனுக்கு நரகத்தை கடமையாக்கி, சுவனத்தை ஹராமாக்கிவிடுகிறான். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே அற்பமான ஒரு பொருளாக இருந்தாலுமா? என்று கேட்க, அராக் மரத்தின் (மிஸ்வாக் செய்யும்) குச்சிலாக இருந்தாலும். என்று பதிலுரைத்தார்கள்.   (முஸ்லிம்)

3- பராமுகமாக, கவனக்குறைவினால், சத்தியம் செய்யும் எண்ணமின்றி வாய்முந்தி ஏற்படும் சத்தியம்இது பலக்கத்தினால் ஏற்படுவது இதனை அல்லாஹ் குற்றம் பிடிப்பதில்லை.

(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான். இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:225)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்;………….   (5:89)

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 05:89வது) இறைவசனம் ‘லா வல்லாஹி (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!’) என்றும், ‘பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!’ என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகிறவரின் விஷயத்தில் அருளப்பெற்றது. (புஹாரி:4613, அபூதாவுத்)

இந்த அடிப்படையில் தான் இன்று சிலர் ‘சத்தியமாக’ என்று அல்லாஹ்வின் பெயர் கூறாமல் பொதுவாக செய்யும் சத்தியமும் இருக்கும்.

அனுமதிக்கப்பட்ட ஒன்றை ஹரமாக்கிக் கொள்வதற்கு சத்தியம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது கட்டாயம் முறிக்கப்படவேண்டும். மேலும் ஒரு விடையத்தில் சத்தியம் செய்துவிட்டு அதை விட சிறந்த ஒன்றை கண்டால் அந்த நேரத்திலும் சத்தியத்தை முறித்துவிட்டு சிறந்ததை தேர்வு செய்யமுடியும். அதற்காக பரிகாரம் கொடுக்கவும் வேண்டும்.

இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும். என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன். அன்பு மிக்கவன். (24:22)

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(றழி) அவர்களிடம், (அவர்களின் அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும், ஹப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி(ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி(ஸல்) அவர்களிடம் ‘கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே’ என்று கூறிட வேண்டும்.

(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், ‘இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் (அவரின் அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன். நான் சத்தியமும் செய்து விட்டேன்’ என்று கூறிவிட்டு, ‘இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!’ என்றும் கூறினார்கள். (இது குறித்தே 66:1 வது இறைவசனம் அருளப்பெற்றது.)

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.  (66:1)  (புஹாரி: 4912, முஸ்லிம்)

4-       எதிகாலத்தில் நடக்கும் ஒரு விடையத்தில் ஒன்றை செய்வதாகவோ, செய்யாமிலிருப்பதாகவோ சத்தியம் செய்வது.

இப்படி செய்தால் கட்டாயம் நிறைவேற்றவேண்டும். நிறைவேற்றாத பட்சத்தில் அவர்மீது தெண்டக்குற்றம் கடமையாகும். அவர் தனது அன்றாட உணவிலிருந்தோ, அல்லது ஆடைகளையோ பத்து ஏழைகளுக்கு கொடுப்பது அல்லது ஒரு அடிமையை உரிமைவிடுவது, இதனை நிரைவேற்ற முடியாதவிடத்து மூன்று நோன்பு நோட்கவேண்டும்.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிறாவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். (5:89)

ஸஹ்தம் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் அபூ மூசா அல் அஷ்அரீ (றழி) அவர்ளிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறி சாப்பாடு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ரோம நாட்டவரிடையேயிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போல் காணப்பட்டார். அபூமூசா (றழி) அவர்கள் அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு விருப்பமின்மையையுண்டாக்கவே ‘இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்து விட்டேன்’ என்று சொன்னார். இதைக் கேட்ட அபூமூசா (றழி) அவர்கள், ‘இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கிறேன்’ என்று சொல்லி விட்டுக் கூறலானார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் (எனது) அஷ்அரீ குலத்தவர்கள் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் இல்லை என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? என்று கேட்டு விட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட கொழுத்த (மூன்று வயதிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட) ஒட்டகங்களைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்றுக் கொண்டு) சென்று கொண்டிருந்த போது, நாங்கள் எங்களுக்குள், நாம் என்ன காரியம் செய்து விட்டோம்? (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு பரக்கத் (அருள் வளம்) வழங்கப்படாதே என்று பேசிக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். நாங்கள் தங்களிடம், நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள் என்று கேட்டோம். நாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்நு விட்டீர்களா என்று கேட்டோம். அதற்கு அவர்கள், நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ் தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதை விடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில், சிறந்ததையே செய்வேன். சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரம் செய்து விடுவேன் என்று சொன்னார்கள். (புஹாரி:  3133)

முஸ்லிமின் அறிவிப்பில் அவர் சிறந்ததை தேர்வு செய்துவிட்டு, அதற்காக பரிகாரத்தை செய்யட்டும். என்று வந்துள்ளது.

மேலும் சத்தியம் செய்யும் போது அல்லாஹ் நாடினால் என்பதையும் சேர்த்து சொல்லியிருந்தால் அந்த சத்தியத்தை நிறை வேற்றவில்லையானால் பரிகாரம் கடமையாகமாட்டாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது சத்தியம் செய்கின்றார், அப்போது இன்ஷா அல்லாஹ் என்று கூறினால் அவருக்கு தெண்டம் இல்லை.  (அபூதாவுத், திர்மிதீ)

மேலும் ஒரு மனிதர் ஒரு விடையத்துக்காக தன்னை நிரபராதியாக்கும் விதத்தில் சத்தியம் செய்துவிட்டால் அவரை குற்றம் பிடிக்க முடியாது.

பராஃ பின் ஆஸிப்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்.

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2.   ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.

3.தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று) சொன்னால், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது. 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது. 

5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது………. (புஹாரி:1239,2445, முஸ்லிம்)

பொய் சத்தியம் என்ற பகுதியில் வரும் ஹதீஸ்.

 சத்தியம் சார்ந்த இந்த விடையங்களை அறிந்து சரியான முறையில் ஈடுபடுவோம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *