ஸூரத்துல் அலக் விளக்கவுரை !

سُورَةِ العَلَقٍ

ஸூரத்துல் அலக்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரதுல் அலக் (இரத்தக்கட்டி) 

இறங்கிய காலப்பகுதி: மக்கீ

வசனங்கள்: 19

அல்குர்ஆனில் முதலாவதாக இறங்கியது இந்த ஸூராவின் ஆரம்ப ஐந்து வசனங்கள் என்பதே இதன் சிறப்பு.  (புகாரி:3, முஸ்லிம்)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

 اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ   ‏خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ , اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ , الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ , عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْؕ

اِقْرَاْ     நீ படி\ நீ வாசி,      اسْمِ    பெயர்,      رَبِّكَ    உம் இறைவன்,     الَّذِىْ    ஒருவன், எத்தகையவன் என்றால்,     خَلَقَ‌‏     அவன் படைத்தான்,     الْاِنْسَانَ    மனிதன்,     مِنْ ‏    இருந்து,       عَلَقٍ   இரத்தக்கட்டி,    الْاَكْرَمُ‏   மிகவும் கண்ணியமானவன்\ சங்கைக்குரியவன்,     عَلَّمَ   அவன் கற்பித்தான்,      بِالْقَلَمِ   எழுதுகோல் மூலம்,     مَا      ஒரு விடயம்,      لَمْ يَعْلَمْ   அவன் அறியவில்லை

படைத்தவனான, உம்முடைய இரட்சகனின் பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! 1, மனிதனை (அட்டைப்பூச்சி போன்று) ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான்.2, மேலும் உமதிரட்சகன் மிக்க சங்கையானவனாக இருக்கும் நிலையில் நீர் ஓதுவீராக!3, அவன் எத்தகையவனென்றால், எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான்.4, அவனே மனிதனுக்கு அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.  (96:1-5)

அல்லாஹ்வின் வஹியான (அல்குர்ஆனின்) முதல் ஐந்து வசனங்களான இவைகள், அல்லாஹ் அடியானுக்கு செய்த பெரும் அருளாகும், மனித படைப்பின் துவக்கம் ஒரு இரத்தக்கட்டியிலிருந்து உண்டானது, அப்படிப்பட்ட மனிதனை அறிவைக் கொடுத்து கண்ணியப்படுத்தியுள்ளான், அந்த அறிவைப் படிப்பதும், எழுதுவதும், வாசிப்பதும், ஆய்வுசெய்வதுமே மனிதனை கண்ணியப்படுத்தும், அந்த அறிவு ஞானம் தான் வானவர்களை விடவும் ஆதம் அலை அவர்களின் சந்ததியை உயர்த்தியது. அறிவு என்பது உள்ளத்தில் இருப்பதாகவோ, நாவால் மொழிவதாகவோ, விரல்களால் எழுதுவதாகவோ இருக்கலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ,‏ قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏ , قَالَ يٰٓـاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ‏

(ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்று கொடுத்துவிட்டு, அவற்றை (அந்த) வானவர்களின் மீது எடுத்துக்காட்டி, நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், இவற்றின் பெயர்களை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறவே, 31, அவர்கள் “நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்” எனக் கூறவே.32,  “ஆதமே! நீர் அவற்றின் பெயர்களை அவர்களுக்குத் தெரிவிப்பீராக” எனக் கூறினான்; அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களைத் தெரிவித்தபோது, அவன் “வானங்கள், மற்றும் பூமியில் மறைந்திருப்பதை நிச்சயமாக நான் நன்கறிவேன்” நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்தீர்களே அதையும் நான் நன்கறிவேன்’ என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.  (2:31-33)

அறிவைக் கொண்டு உயர்த்தியடைந்த மனிதன், அறிவை அல்லாஹ் சொன்ன அடிப்படையில் பயன்படுத்தவில்லை யென்றால் அதுவே அவனை கேவலப்படுத்தும். அல்லாஹ் கூறுன்கிறான்:

وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ ‌ۖ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ‌ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ‏

நிச்சியமாக ஜின்களிலும், மனிதர்களிலும் அநேகரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம், (அவர்கள் எத்தகையோரென்றால்,) அவர்களுக்கு இதயங்களிருக்கின்றன, அவற்றைக்கொண்டு (நல்லவற்றை) அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள், அவர்களுக்கு கண்களுமுண்டு, (எனினும் அவற்றைக் கொண்டு (இவ்வுலகிலுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள், அவர்களுக்குக் காதுகளுமுண்டு, அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லவற்றைச்) செவியேற்கமாட்டார்கள், அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள், ஏன் (அவற்றைவிட) அவர்கள் மிக அதிகமாக வழிகெட்டவர்கள்; அவர்களேதாம் (நம் வசனங்களை அலட்சியம் செய்து) பராமுகமானவர்களாவர்.  (7:179)

அறிஞர் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும் போது இப்னு தைமிய்யா ரஹ் அவர்களின் கூற்றாக பின்வருமாறு கூறினார்கள்: இந்த வசனங்கள் மூலம் நபியவர்களை அல்லாஹ் வாசிக்க சொல்கின்றான், அதே நேரம் நபியவர்கள் எழுத, வாசிக்க தெரியாத உம்மி நபி என்பது அல்குர்ஆன் தெளிவாக சொல்லும் ஒருவிடயமாகும், ஆனாலும் இங்கு நபியவர்களை வாசிக்குமாறு, ஓதுமாறு விழிப்பது எந்தவகையிலும் முரணாகாது, ஏனெனில் வாசித்தல் என்பது தானாக வசிப்பதையும் குறிக்கும், ஒருவர் சொல்லிக்கொடுத்ததை வாசிப்பதையும் குறிக்கும். இங்கு அந்த அடிப்படையிலேயே விழிக்கப்படுகின்றது. அல்லாஹ் ஜிப்ரீல் அலை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க, அவர்கள் நபிகளாருக்கு சொல்லிக்காட்டவே நபியவர்கள் அப்படியே எடுத்துறைத்தார்கள். அது அல்லாஹ் நபியவர்களுக்கு செய்த அற்புத அருளாகும். ஏன் நேற்றுவரை எழுத வாசிக்க தெரியாதவராக இருந்தவர், இன்று ஆசானாக மாறிவிட்டார். அதனால்தான் அல்லாஹ் ‘அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஓதுவீராக, வாசிப்பீராக’ என்று கூறியுள்ளான். இதுவே வஹியை பாதுகாப்பதற்கு அல்லாஹ் வைத்த வழிமுறையாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَا كُنْتَ تَـتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِيَمِيْنِكَ‌ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ‏

மேலும் (நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் ஓதுபவராக இருக்கவில்லை, உமது வலக்கையால் நீர் அதனை எழுதுபவராக (இருக்க)வும் இல்லை. (அவ்வாறு இருந்திருக்குமானால்,) அப்பொழுது இப்பொய்யர்கள் (அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று) திடமாக சந்தேகம் கொண்டிருப்பர்.  (29:48)

هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏

அவன் எத்தகையவனென்றால், எழுத்தறிவில்லாத (அரபி) சமூகத்தார்களில், அவர்களிலிருந்தே ஒரு தூதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், தீர்க்கமான அறிவை (சுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார், நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.  (62:2)

அடுத்து எதனை வாசிக்க வேண்டும்  என்று இங்கு தெளிவாக கூறப்படவில்லை, அடுத்த ஸூராவான ‘இன்னா அன்ஸல்னாஹு’ வின் வசனங்கள், மற்றும் ஸூரா துகானின் ஆரம்ப வசனங்கள் அதனை தெளிவுபடுத்துகின்றன. பின்வரும் வசனமும் எடுத்துரைக்கின்றது.

وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ‌ؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏

….. மேலும், அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான், இன்னும், நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான், மேலும், உம்மீது அல்லாஹ்வுடைய பேரருள் மகத்தானதாகவே இருக்கின்றது.  (4:113)

அடுத்து ‘இக்ரஃ பிஸ்மி ரப்பிக, உமது இறைவனின் நாமத்தைக் கொண்டு ஓதுங்கள்’ என்பதன் மூலம், ‘நபியே நீங்கள் ஓதுவது உமது இறைவனின் கூற்று, அதனை நீங்கள் மக்களுக்கு எத்திவைக்கின்கிறீர்கள்’ என்பது போன்ற அறிவுரை இதற்குள் இருப்பது தெளிவாகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ , اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ‏‏

அவர் தன் மன இச்சையின் படி (எதையும்) பேசுவதுமில்லை.3, இது அறிவிக்கப்படும் (வஹீயாகிய) அறிவிப்பே தவிர (வேறு) இல்லை.  (53:3,4)

مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ‌ ؕ

(நம் தூதை) எத்திவைப்பதைத் தவிர இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை, ….  (5:99)

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ ‌ؕ

இன்னும், அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப கீழ்ப்படியப் படுவதற்காகவே தவிர, (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பி வைக்கவில்லை,….  (4:64)

அடுத்து ‘படைத்தவனான உமது இறைவன்’ என்று விழித்திருப்பதிலிருந்து, படைப்பாளன் என்ற பண்பு அல்லாஹ்வின் அதிகாரத்தை அப்படியே எடுத்துக்காட்டுகின்றது, அடுத்து அல்லாஹ்வுக்கு நிகராக பல கடவுள்களை ஏற்படுத்திக்கொண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ‘படைப்பாளன் அல்லாஹ்தான்’ என்று ஏற்ற நிலையிலேயே இணைவைப்பில் ஈடுபட்டனர். எனவேதான் அல்லாஹ்வின் வஹியான அவன் கட்டளையின் துவக்கத்தை அந்த அதிகாரத்தைக் கூறி எடுத்துரைக்கின்றான்.

وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ

மேலும் வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவன் யார்? என்று (நபியே!) நீர் அவர்களைக் கேட்பீராயின் அ(தற்க)வர்கள், “அல்லாஹ்” என்று நிச்சயமாக கூறுவார்கள்,…  (31:25)

وَلَٮِٕنْ سَاَلْـتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ ‏

மேலும் (நபியே!) அவர்களைப் படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அல்லாஹ் தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்,…..  (43:87)

படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் படைப்பாளன் அவசியமே!

اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏

அல்லது, அவர்கள் எப்பொருளுமின்றி (தாமகாவே) படைக்கப்பட்டு விட்டனரா? அல்லது அவர்கள்தான் படைக்கின்றவர்களா?  (52:35)

எனவே முன்னால் குறித்துக்காட்டப்பட்ட மூன்று விடயங்களும் நபித்துவத்தின் அடிப்படைகளாகும்; ‘வாசியுங்கள் என்பது ‘தூதுத்துவத்தை சுமப்பதற்கான கட்டளை’, ‘உமது இறைவனின் பெயர் கொண்டு என்பது கட்டளையிட்டவனை உணர்த்தும், அவனே படைத்தவன் எனும் போது, படைக்கப்பட்டவர்கள் தூதுத்துவத்தை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்பது சுருக்கமான சான்றாகும். (அல்லஹ்வினால்) வழங்கப்பட்ட தூதுத்துவம், (அதனை எத்திவைக்கும்) தூதர்,(ஏற்கவேண்டிய) மனித சமூகம்.

இறை கட்டளையை ஏற்கவேண்டிய, இறைவனால் படைக்கப்பட்ட மனித சமூகம் அதனை ஏற்க மறுத்தபோது, படைத்தவன் என்று பொதுவாக சொன்ன அல்லாஹ், ‘மனிதர்களை அவனே படைத்தான்’ என்று தெளிவாக சொல்கின்றான் தொடர்ந்து. அதனையும் ‘அலக் எனும் இரத்தக்கட்டியிலிருந் படைத்ததாக’ கூறுகின்றான், சாதாரண அறிவுள்ள மனிதனும் தாயின் கருவறையில்தான் மனிதன் வளர்ந்து பிறக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்வான், (அதிலும் ஆச்சர்யம் இந்த நூற்றாண்டு மனிதன் அதனை ஆய்வுகள் மூலம் கண்கூடாக காணுகின்றான்.)

இங்கிருந்து இன்னுமொரு பாடத்தையும் அல்லாஹ் உணர்த்துகின்றான்,ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த மனிதனை ஒரு இரத்தக்கட்டியிலிருந்து படைக்க முடிந்த அல்லாஹ்வுக்கு, வாசிக்கத் தெரியாத உங்களை வாசிக்க வைப்பான்,’ என்பதும், ‘இரத்தைக் கட்டியை அது மனிதனாக பிறக்கும் வரையில் பாதுக்காக்கும் அல்லாஹ், இந்த தூதுத்துவத்தை பொறுப்பெடுத்துள்ளான், அவன் அதனை பாதுகாப்பான் என்பதுமாகும்.

இதனை இன்னும் விரிவாக இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.   (அல்வாஉல் பயான்)

  كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰٓىۙ‏ اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىؕ‏ , اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىؕ

كَلَّاۤ  அவ்வாறல்ல,       اِنَّ  அதற்கு எழுவாயும், பயணிலையும் வரும், பயனிலையில் இருப்பது எழுவாய்க்கு இருப்பதாக உழுதிப்படுத்தும்,    الْاِنْسَانَ     மனிதன்,       لَ   இன்னும் உறுதிப்படுத்துவதற்காக பயனிலையில் சேர்ந்து வரும்,     يَطْغٰٓىۙ‏   அவன் வரம்பு மீறுகிறான்\வான்,       اَنْ   அன்ன என்பதே அன் என்று இலேசாக்கப்பட்டுள்ளது, இதற்கும் எழுவாயும், பயணிலையும் வரும்,   رَّاٰهُ    தன்னை அவன் கருதினான்\ எண்ணினான்,     اسْتَغْنٰىؕ‏  தேவையற்றவனாக இருந்தான்,       اِلٰى    பக்கம்\அளவில்,      رَبِّكَ    உம் இறைவன்,      الرُّجْعٰىؕ‏   மீழுதல், திரும்பி செல்லல்

நிச்சியமாக மனிதன் தன்னை (இரட்சகனிடமிருந்து) தேவையற்றவன் என  கருதியதனால்  வரம்பு மீறுகிறான்6, நிச்சயமாக உமதிரட்சகனின் பக்கமே (அவன்) மீள வேண்டியிருக்கின்றது. (என்பதை மறந்தான்)  ( (96:6-8)

அல்லாஹ்வால் அறிவு கொடுக்கப்பட்டு படைக்கப்பட்ட மனிதன் தன்னை அல்லாஹ்வை விட்டும் தேவையற்றவனாக கருதுவதும், தான் இந்த உலகத்திற்கே வந்தவன் என்று கருதுவதும் இந்த உலகில் அவன் கெட்டவனாக வாழ்வதற்கு காரணமாகிவிடுகின்றது என்பதையே இங்கு அல்லாஹ் எடுத்துரைப்பதோடு, மறுமையை நினைவூட்டி எச்சரிக்கையும் விடுகின்றான்.

فَاَمَّا مَنْ طَغٰىۙ , ‏وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا , فَاِنَّ الْجَحِيْمَ هِىَ الْمَاْوٰىؕ

எனவே, எவர் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக நரகமே (அவர்) ஒதுங்குமிடமாகும். (79:37-39)

وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ‏ , اۨلَّذِىْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ , يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ‌ , كَلَّا‌ لَيُنْۢبَذَنَّ فِى ‏الْحُطَمَةِؗۖ

(பிறரைக்) குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்.1, இத்தகையவன் பொருளைச் சேகரித்து அதனை எண்ணி வைத்துக்கொண்டு,2 நிச்சயமாக, தன் பொருள் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான்.3, அவ்வாறன்று! நிச்சியமாக ஹூதமாவில் அவன் எறியப்படுவான். (104:1-4)

இதற்கு சிறந்த உதாரணமாக அல்குர்ஆன் கூறும் காரூனின் வரலாற்றை எடுத்து நோக்கலாம்: (28:76- 83)

اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ‌ ……قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِىْ‌ؕ ……فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ……..‏

நிச்சயமாக காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தான்; அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்;…………அ(தற்க)வன், “அது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் என்னிடம் இருக்கும் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான்” என்று (பதில்) கூறினான். ……….. எனவே, அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமிக்குள் நாம் உள்வாங்க செய்தோம் ……. (28:76- 83 சுருக்கமாக)

மாறாக அல்லாஹ் கொடுத்த அறிவை வைத்தே நான் இந்த உலகில் செல்வந்தவனாக இருக்கின்றேன், நான் எப்போதும் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவன் என்ற உணர்வோடும், ஒரு நாள் நான் மரணித்து மறுமையில் அல்லாஹ்வின் பக்கமே திரும்பி செல்வேன் என்ற உணர்வோடு வாழ்ந்தால் நல்லவனாக வாழலாம்.

அதற்கு சிறந்த உதாரணமாக பனூ இஸ்ரேலிய சமூகத்தில் இருந்த (குருடன், குஷ்டரோகி, வழுக்கைத் தலையுடையவன்) மூன்று மனிதர்களின் வரலாறை குறிப்பிடலாம். (புகாரி:3464, முஸ்லிம்)

அதேபோன்று இந்த உலகில் அதிகம் செல்வம் கொடுக்கப்பட்ட நபி ஸுலைமான் அலை அவர்களின் வரலாறு சிறந்த உதாரணமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِىِّ الصّٰفِنٰتُ الْجِيَادُ ۙ‏

மூன்று கால்களிலும், நான்காவது காலின் குழம்பிலும் நின்று, துரிதமாகச் செல்லும் (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்டபொழுது,

فَقَالَ اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْ‌ۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ

(அதன் மேல் கவனம் கொண்டதனால், சூரியன் அஸ்தமித்து, அவருடைய தியான நேரம் தவறிவிட்டது, அதற்கவர்) ”நிச்சயமாக நான் (சூரியன்) திரையினுள் மறைந்துவிடும் வரை என் இரட்சகனை நினைவுகூர்வதைவிட்டும் இந்த நல்ல பொருள்களை அதிகமாக அன்பு கொண்டுவிட்டேன் என்று கூறினார்.

رُدُّوْهَا عَلَىَّ ؕ فَطَفِقَ مَسْحًۢا بِالسُّوْقِ وَ الْاَعْنَاقِ‏

“அவற்றை என்னிடம் திரும்பக்கொண்டுவாருங்கள்” எனக் கூறி அவைகளின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் (கையால்) தடவிக்கொடுத்தார்.

وَلَقَدْ فَتَنَّا سُلَيْمٰنَ وَاَلْقَيْنَا عَلٰى كُرْسِيِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ‏

இன்னும் நிச்சயமாக, நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதித்தோம், மேலும், அவருடைய சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை நாம் போட்டோம், பின்னர் அவர், (நம்மளவில்) திரும்பினார்.

قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏

(ஆகவே) “என் இரட்சகனே! என்னை மன்னித்து விடுவாயாக! எனக்குப் பின்னர், எவருக்குமே கிடைக்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ அன்பளிப்புச் செய்வாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்” என்று (பிரார்த்தனை செய்து) அவர் கூறினார்.  (38:31-35)

قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏

……. “இது என் இரட்சகனின் பேரருளில் உள்ளதாகும், நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா, அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக (இவ்வாறு வழங்கியுள்ளான்.) மேலும், எவர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் (அதன் பலன்) அவருக்கே. இன்னும், எவர் (நன்றி செய்யாது) நிராகரிக்கிறாரோ (அது அவருக்கே கேடாகும், காரணம்) நிச்சயமாக என் இரட்சகன் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன், கண்ணியமுள்ளவன்” என்று கூறினார்.  (27:40)

அடுத்து இப்படி பெருமை கொண்டு நபியவர்களுக்கு எதிராக செயற்பட்ட ஒரு நிகழ்வையே இந்த ஸூராவின் தொடர் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

 اَرَءَيْتَ الَّذِىْ يَنْهٰىؕ‏ , عَبْدًا اِذَا صَلّٰىؕ‏

اَ  கேள்வி கேட்க பாவிக்கும் எழுத்து\ஆ உருபு,     رَءَيْتَ  நீ பார்த்தாய்,     الَّذِىْ     ஒருவன் \எத்தகையவன் என்றால்,     يَنْهٰىؕ‏    தடுக்கிறான்\தடுப்பான்,    عَبْدًا    ஓர் அடியான்,      اِذَا     நிபந்தனையிடுதல்\ஆல் உருபு,       صَلّٰىؕ‏    அவன் தொழுதான்

ஓர் அடியாரை அவர் தொழுது கொண்டிருக்கும்பொழுது, தடுக்கின்றானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா,  (96:9,10)

இந்த வசனத்தின் மூலம் நபியவர்களை, படைத்தவனை வணங்குவதிலிருந்து (தொழுவதிலிருந்து) தடுக்கும் மனிதனைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கும் விதத்தில் கேட்கின்றான். அவன் தான் அபூஜஹ்ல் என்று விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். (இப்னு கஸீர்)

ஸபபுன் னுஸூல்:

அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: அபூ ஜஹ்ல் ஒரு தடவை மக்களை நோக்கி, ‘முஹம்மத் ஸல் உங்களுக்கு முன்னால் பூமியில் முகத்தை வைக்கிறாரா (ஸுஜூத் செய்கிறாரா)? என்று கேட்க, ஆம் என்று கூறப்பட்டபோது, ‘லாத், உஸ்ஸாவின் மீது சத்தியமாக அவர் அப்படி செய்வதை கண்டால் அவரது பிடரியை மிதிப்பேன்’ என்று சபதம் செய்தான்,  பிறகு நபியவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அவர்களிடம் வந்தவன், அவர்களை மிதிக்க முற்பட்டான், அப்போது திடீரென கையால் பாதுகாத்துக் கொண்டவனாக பின்னோக்கி சென்றான், அதற்கு காரணம் கேட்கப்பட்டபோது,’எனக்கு அவருக்கும் இடையில் நெருப்புக்கு கிடங்கு ஒன்று இருந்தது’ என்று கூறினான். நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அவன் என்னை நெருங்கி இருந்தால் அவனை வானவர்கள் பிடித்து உறுப்புறுப்பாக கழட்டியிருப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது தான் ஸூரதுல் அலகின் 6 வது வசனம் முதல் இறங்கியது என்று அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰٓىۙ , اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۙ‏‏

اَرَءَيْتَ     நீர் பார்த்தீரா?,     اِنْ     நிபந்தனையிடுவதற்கு பாவிக்கப்படும் எழுத்து\ ஆல் உருபு,     كَانَ   ஆகிவிட்டான் என்று பொருள், இதற்கு ஒரு எழுவாய், பயனிலை வரும், பயனிலையில் இருக்கும் நிலையில் எழுவாய் இருக்கிறது என்று அருத்தம்,    عَلَى    மீது,      الْهُدٰٓىۙ‏    நேர்வழி,      اَوْ    அல்லது,     اَمَرَ   அவன் ஏவினான்\கட்டளையிட்டான்,       التَّقْوٰىۙ‏    நன்மை\இறையச்சம்

அவர் நேர்வழியின் மீதிருந்துகொண்டு,11, அல்லது பயபக்தியைக் கொண்டு ஏவுகிறவராக இருந்தும், (தடுக்கின்றான்.)  (96:12)

இந்த வசனத்தின் மூலம் இறைத்தூதரை தடுக்க முயற்சிபவனுக்கு அல்லாஹ் சிந்திக்க கற்றுக்கொடுக்கின்றான், ஆனாலும் அத்தனையும் மீறி தடுக்கின்றபோது அல்லாஹ் பின்வரும் வசனங்களில் கண்டித்து எச்சரிக்கின்றான்.

اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىؕ , اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ‏‏

اَرَءَيْتَ   நீர் பார்த்தீரா,      كَذَّبَ  அவன் பொய்ப்பித்தான்,     وَتَوَلّٰىؕ‏  இன்னும் அவன் புறக்கணித்தான்,     اَلَمْ يَعْلَمْ  அவன் அறியவில்லையா?,    اَنَّ  நிச்சயமாக,     اللّٰهَ     அல்லாஹ்,     يَرٰىؕ‏   அவன் பார்க்கிறான்\பார்ப்பான்

அவன் (அவரைப்) பொய்யாக்கி, முகத்தையும் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?13,  நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்)பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?.   (96:13,14)

அவன் பெருமை பிடித்தவனாக, நபியவர்களை பொய்ப்பித்து புறக்கணித்தமைக்கு காரணமே அவன் அல்லாஹ்வை மறந்ததுதான், எனவேதான் அல்லாஹ் பார்ப்பதை அவன் அறிந்திருக்கவில்லையா என்று கேட்கின்றான். அல்லாஹ்வை மறந்தவனின் செயற்பாடுகள் மோசமானதாகவே இருக்கும். அதனால்தான் நல்லவனாக வாழ்வதற்கு அடிப்படை சொல்லிக்கொடுத்த நபியவர்கள், ஜிப்ரீல் அலை அவர்களின் ‘இஹ்ஸான், நல்லவனாக வாழ்வதற்கான வழி என்ன?’ என்ற கேள்விக்கு பதில் கூறும்போது;

‘நீ அல்லாஹ்வை பாப்பதுபோன்று அடிமைப்பட்டு வாழ்வது, நீ அவனை பார்க்காவிட்டாலும், அவன் உன்னை பார்க்கின்றான் என்ற உணர்வோடு வாழ்வதாகும்’ என்று கூறினார்கள். (புகார்:50,4777, முஸ்லிம்)

كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ‏ , نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌

كَلَّا  அவ்வாறல்ல,    لَٮِٕنْ  நிபந்தனையிடுதல், அதனை உறுதிப்படுத்த لَ     சேர்ந்துள்ளது,     لَّمْ يَنْتَهِ  அவன் விலகவில்லை\தவிர்ந்திருக்கவில்லை,    لَ   நிபந்தனைக்கான பதிலில் வரும்,       نَسْفَعًۢا  நிச்சியமாக பிடிப்போம்,    النَّاصِيَةِۙ‏     நெற்றி முடி,    كَاذِبَةٍ   பொய் கூறுபவள்,     خَاطِئَةٍ‌      குற்றம் புரியக்கூடியவள்

விஷயம் அவ்வாறல்ல! அவன் விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக அவனது தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி உரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம்.  (96:15,16)

சத்தியத்தை விட்டு தடுக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை செய்தியே இது, அல்லாஹ்வின் பிடி கடுமையானது, தப்பவேமுடியாது. அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ‏

(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் பிடி மிகக் கடுமையானது.  (85:12)

فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ, وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ‏

எனவே, அந்நாளில் (அல்லாஹ்வாகிய) அவன் செய்யும் வேதனையைப் போல், மற்றெவனும் வேதனை செய்யமாட்டான்.25,  இன்னும், அவன் கட்டுவதுபோல் வேறு எவனும் கட்டமாட்டான்.  (89:25.26)

அடுத்து இந்த வசனத்தில் ‘முன்நெற்றி ரோமம்’ என்பதைக்கொண்டு நாடப்படுவது அதனை சுமந்திருக்கும் மனிதன்தான், ஒரு பகுதியை கூறி முழுவதையும் நாடுவது. அல்லாஹ் கூறுகின்றான்;

تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ‏

அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக!  (111:1)

இந்த வசனத்தில் கையைக் கொண்டு அபூ லஹப் என்பவனே நாடப்படுகின்றான்.

فَلْيَدْعُ نَادِيَهٗ , سَنَدْعُ الزَّبَانِيَةَ‏

فَ    ஆகவே,    ليَدْعُ   அவன் அழைக்கட்டும்\படர்கை ஏவல் வினை,    نَادِيَهٗ  ‏    அவனது சபையோர்,     سَنَدْعُ  நாம் அழைப்போம்,    الزَّبَانِيَةَ ‏   நரகத்தின் காவலாளிகள்

ஆகவே, தனது சபையோரை அவன் அழைக்கட்டும்.17, நாமும்  (அவனுக்கு தண்டனை தரும்) காவலர்களை அழைப்போம்.  (96:17,18)

இந்த வசனங்கள் மூலம் பாவிகள் சந்திக்கும் கேவலத்தை அல்லாஹ் எடுத்துரைக்கின்றான், அதில் ஒன்றுதான் நடக்கமுடியாததை அல்லாஹ் மறுமையில் சவாலாக விடுவான். இது அவர்கள் செய்யும் தீமையின் கொடூரத்தை எடுத்துக்காட்டி உலகில் திருத்துவதற்கே. சில நேரங்ககளில் உலகிலும் அல்லாஹ் அவனது வானவர்களை அனுப்பி அல்லாஹ் அவர்களைப் பிடிக்கலாம். முன்னால் பதியப்பட்ட புகாரி, முஸ்லிமின் அறிவிப்பைப் போன்று.

உலகில் உருவப்படம் வரைந்தவர்கள், வடித்தவர்கள் மறுமையில் அதற்கு உயிர் கொடுக்குமாறு ஏவி தண்டிக்கப்படுவார்கள், அது அவர்களால் முடியாது என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி: 3224,5181,7042, முஸ்லிம்)

யார் தான் காணாத கனவை கண்டதாக பொய் சொல்கின்றாரோ அவர், இரண்டு கோதுமை வித்துக்களை முடிச்சு போடுமாறு மறுமையில் கட்டாயப்படுத்தப்படுவார், அதனை அவர் செய்யமாட்டார். என்று நபியவர்கள் கூறினார்கள்.  (புகாரி:7042)

كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ‏

كَلَّا   அவ்வாறல்ல,    لَا تُطِعْهُ  அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டாம்,    وَاسْجُدْ    இன்னும் சிரம் பணித்து ஸுஜூத் செய்,     وَاقْتَرِبْ‏    இன்னும் நெருங்கு

அவ்வாரல்ல! நபியே! நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர், (உமதிரட்சகனுக்குச்) சிரம் பணிவீராக! இன்னும்,நெருங்குவீராக!

இப்படி இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தவிடாமல் தடுப்போருக்கு கட்டுப்படக்கூடாது என்பதே இறைக் கட்டளை. மாறாக அவனுக்கே அடிபணிய வேண்டும், அவனுக்கு ஸுஜூத் செய்து நெருங்கவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்.

يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۙ‏

நபியே! நீர் அல்லாஹ்வை பயந்துகொள்வீராக! நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாபிக்குகளுக்கும் கீழ்ப்படியாதிருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.  (33:1)

وَّاتَّبِعْ مَا يُوْحٰٓى اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ۙ‏

இன்னும், (நபியே!) உமதிரட்சகனிடமிருந்து உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கிறான்.  (33:2)

அடுத்து சோதனைகளின் போது வணக்கவழிபாடுகள் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதே நல்ல மனிதனுக்கு இஸ்லாம் காட்டும் வழியாகும். அதிலும் ஸுஜூத் மிகவும் அவசியமானது.

وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا‏

இன்னும், இரவில் அவனுக்கு (ஸுஜூத் செய்து) சிரம் பணிவீராக! இரவில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டுமிருப்பீராக!  (76:26)

مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌ سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ

முஹம்மது, அல்லாஹ்வின் தூதராவார்; அவருடன் இருப்பவர்களோ, நிராகரிப்போர் மீது மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள், (குனிந்து) ருகூஉ செய்பவர்களாகவும், (சிரம் பணிந்து) ஸுஜுத் செய்கிறவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர், அல்லாஹ்விடமிருந்து பேரருளையும், (அவனுடைய) பொருத்தத்தையும் தேடுவார்கள், அவர்களுடைய அடையாளம், சிரம் பணிவதன் அடையாளத்தினால் அவர்களுடைய முகங்களில் இருக்கும், …….  (48:29)

وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏

நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இரட்சகனிடத்தில்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அது உள்ளச்சம் கொண்டவர்களுக்கன்றி, ஏனையோருக்கு மிகப் பாரமானதாக இருக்கும்.  (2:45)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் அல்லாஹ் அளவில் மிக நெருக்கமாக இருப்பது. அவன் ஸுஜூத் செய்யும் நிலையிலாகும், எனவே அவர் பிரார்த்தனையை அதிகப்படுத்தட்டும். (முஸ்லிம்)

فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ‏

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குச் சிரம்பணியுங்கள், மேலும் (அவனேயே) வணங்குங்கள்.  (53:62)

அடுத்து நபியவர்கள் ஸுஜூத் செய்யுங்கள் என்ற கட்டளையை ஏற்று இந்த வசனத்தின் பின்னாலும், இன்னும் சில இடங்களிலும் ஸுஜூத் செய்துள்ளார்கள்.

அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாரோடு ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத், இக்ரஃ ஸூரா விலும்’ ஸுஜூத் செய்திருக்கிரோம்.  (புகாரி:1074, முஸ்லிம், இது முஸ்லிமின் அறிவிப்பு)

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் ஸூரா நஜ்மை ஓதி ஸுஜூத் செய்தார்கள், அவர்களோடு முஸ்லிம்களும் செய்தார்கள்.  (புகாரி:1071,4862, முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் ஸூரா ஸாத் ஓதி ஸுஜூத் செய்தார்கள். (புகாரி:1069)

அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘ஆதமின் மகன் ஸஜ்தாவை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் ஒதுங்கி சென்று அழுகின்றான், அவன் ‘கைசேதமே! ஆதமின் மகன் ஸுஜூத் செய்யுமாறு ஏவப்படடான், அவன் ஸுஜூத் செய்தான், அவனுக்கு சுவனம் இருக்கின்றது, நானும் ஸுஜூத் செய்யுமாறு ஏவப்பட்டேன், நான் மறுத்தேன், எனக்கு நரகம் இருக்கின்றது’ என்று கூறுவான். (முஸ்லிம்)

இந்த நபி மொழியை வைத்து ஸுஜூத் செய்யுமாறு வலியுறுத்தும் வசனங்களில் பொதுவாகவே ஸுஜூத் செய்யலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் ஸுஜூத் செய்வது கட்டாயமில்லை, விரும்பினால் செய்யலாம் என்பதும் அறிந்துவைத்திருக்க வேண்டியதே.

ஸைத் பின் ஸாபித் ரலி அவர்கள் கூறினார்கள்: நான் நபியவர்களுக்கு ஸூரா நஜ்மை ஓதிக்காட்டினேன், அவர்கள் ஸுஜூத் செய்யவில்லை. (புகாரி: 1073, முஸ்லிம்)

உமர் ரலி அவர்கள் மிம்பர் மேடையில் ஸூரா நஹ்லை ஒரு வாரம் ஓதிவிட்டு, இறங்கி ஸுஜூத் செய்தார்கள், இன்னொரு வாரம் ஓதிவிட்டு ஸுஜூத் செய்யவில்லை, பிறகு கூறினார்கள்: யார் ஸுஜூத் செய்கிறாரோ அவர் சரியை அடைந்தார், ஸுஜூத் செய்யாதவருக்கு குற்றமில்லை. இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்; ஸுஜூதை அல்லாஹ் கட்டாயமாக்கவில்லை. நாம் விரும்பி செய்வதே  (புகாரி: 1077)

ஸூரா அலக் விளக்கம் முடிவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *