ஸூரது ஸில்ஸால் விளக்கவுரை !

سُورَةِ الزِلْزَال

ஸூரது ஸில்ஸால்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரது ஸில்ஸால்(அதிர்ச்சி, உசும்புதல்)

இறங்கிய காலப் பகுதி: மக்கீ

வசனங்கள்: 8

அது பற்றிய சிறப்புக்கள்:

அம்ருப்னுல் ஆஸ் ரலி அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஓதிக்காட்டுங்கள் என்று கூறவே ‘அலிப் லாம் ரா வகையில் மூன்றை ஒதுங்ககள்’ என்று கூற, எனக்கு வயது போய்விட்டது, எனது நாவு கனத்துவிட்டது, என்று கூறவே, ‘ஹாமீம் வகையில் உள்ளதை ஓதுங்கள்’ என்றதும், அவர் ஏற்கனவே கூறியது போன்று கூறினார், பிறகு நபியவர்கள் ‘ஸப்பிஹ் என்று ஆரம்பிப்பவற்றை ஓதுங்கள்’ என்று கூற, அல்லாஹ்வின் தூதரே அனைத்தையும் சேர்த்துக்கொள்ளும் ஒரு ஸூராவை சொல்லித் தாருங்கள் என்றதும் நபியவர்கள்; ‘ஸூரா ஸில்ஸாலை ஓதுங்கள்’ என்கிறார்கள். அதற்கு அவர், உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது சத்தியமாக இதனைவிட நான் அதிகப்படுத்தமாட்டேன்’ என்று கூறவே, நபியவர்கள் ; ‘ அந்த மனிதர் வெற்றி பெறுவார், அந்த மனிதர் வெற்றி பெறுவார்’ என்று கூறினார்கள். (அஹ்மத்:6575, அபூதாவூத்:1399) இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ளதாகும் இதில் ‘ஈஸப்னு ஹிலாலுஸ் சதபி’ இருக்கிறார். இமாம் அல்பானி அவர்கள் பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘குல்யா அய்யுஹல் காபிரூன் அல்குர்ஆனில் நான்கில் ஒன்றாகும், இதா ஸுல்ஸிலத் நான்கில் ஒன்றாகும், இதா ஜாஅ நஸ்ருல்லாஹ் நான்கில் ஒன்றாகும்’ (அஹ்மத்:12488) இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஸலமதுப்னுல் வர்தான்‘ என்ற பலவீனர் இடம் பெற்றுள்ளார். இவர் ‘முன்கர்’ என்றும் ‘அனஸ் ரலி அவர்களைத் தொட்டு நம்பகமானவர்களுக்கு முரணாகவே அறிவித்துள்ளார்‘ என்றும் விமர்சிக்கப்பட்டவர். அடுத்து ‘அப்துல்லாஹிப்னுல் வலீத்’ என்பவரும் இடம்பெற்றுள்ளார்’ அவரும் பலவீனமானவர் எனும் அளவுக்கு விமர்சிக்கப்பட்டவர்’

இதே அறிவிப்பு திர்மிதியில்:2893. ‘யாராவது இதா ஸுல்ஸிலத்தை ஓதினால் அவருக்கு அல்குர்ஆனின் அரைவாசி ஓதிய நன்மை கிடைக்கும்’, யாராவது ‘குல்யா அய்யுஹல் காபிரூன் ஓதினால், அவருக்கு அல்குர்ஆனில் நான்கில் ஒன்றாக கிடைக்கும்’ யாராவது ‘குல் ஹுவல்லாஹ்’ ஓதினால் அல்குர்ஆனில் மூன்றில் ஒன்றின் நன்மை கிடைக்கும்’ என்று பதியப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான செய்தியாகும், இதில் ‘ஹஸன் பின் ஸல்ம்’ என்ற அறியப்படாதவர் ‘மஜ்ஹஹூல்’ இடம்பெற்றுள்ளார். அடுத்து ‘முஹம்மத் பின் மூஸல் ஹரஸீ’ என்ற பலவீனரும் இடம்பெற்றுள்ளார்.

இதே போன்று திர்மிதியில்:2894 இப்னு அப்பாஸ் ரலி வழியாக, ‘அரைவாசிக்கு நிகர், காபிரூன் நான்கில் ஒன்றுக்கு நிகர், அஹத் மூன்றில் ஒன்றுக்கு நிகர்’ என்று பதியப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமாகும். இதில் ‘யமான் பின் முகீரா’ என்ற பலவீனர் இடம்பெறுள்ளார். இவர் ‘முன்கருல் ஹதீஸ்‘ ‘அடிப்படையற்ற செய்திகளை அதாஃ அவர்களை தொட்டு அறிவித்துள்ளார்‘ போன்ற வாசகங்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

எனவே ஸூரா ஸில்ஸால் பற்றி வரும் இந்த செய்தி மிகவும் பலவீனமானதாகும். (அல்லாஹு அஃலம்)

அடுத்து அனஸ் ரலி வழியாக ‘திருமணம் முடிக்க வசதியற்ற ஒருவருக்கு நபியவர்கள் ‘உங்களுக்கு குல் ஹுவல்லாஹ்’ தெரியாதா? அது மூன்றில் ஒன்று’, ‘இதா ஜாஅ தெரியாதா? அது நான்கில் ஒன்று, ‘அல்காபிரூன் தெரியாதா? அது நான்கிலொன்று’ ‘ஸுல்ஸிலத் தெரியாதா? அதுவும் நான்கிலொன்று’ என்று கூறியதாக திர்மிதியில் பதியப்பட்டுள்ளது. அதிலும் ‘ஸலமதுப்னு வர்தான்‘ என்பவர் இடம்பெற்றுள்ளார். அதுவும் பலவீனமானதே.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا , وَاَخْرَجَتِ الْاَرْضُ اَ ثْقَالَهَا‏

اِذَا  போது\நிபந்தனையிடுதல்,     زُلْزِلَتِ     அது நடுங்க வைக்கப்பட்டது\உசுப்பப்பட்டது,     الْاَرْضُ  பூமி,       زِلْزَالَ‏    உசுப்பப்படுத்தல்,     هَا    அது\அவை,     وَاَخْرَجَتِ     இன்னும் அது வெளிப்படுத்தியது,     الْاَرْضُ    பூமி,     اَ ثْقَالَهَا    அதன் சுமைகள்

பூமி கடுமையாக அசைக்கப்பட்டு, அதன் சுமைகளை அது வெளிப்படுத்திவிடும்போது, (99:1,2)

உலக அழிவின் போது பூமி உசுப்பப்படுவது ஒரு நிகழ்வாகும். இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: பூமி அதன் அடிப்பாகத்திலிருந்து ஆடும். (இப்னு கஸீர்)

‘பூமி வெளிப்படுத்தும்’ என்றால் ‘அதில் இருக்கும் மரணித்தவர்களின் சடலங்கள்’என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அல்லாஹ் கூறுகின்றான்:

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ‏

மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனை பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மகத்தானதாகும்.  (22:1)

وَاِذَا الْاَرْضُ مُدَّتْؕ , وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ‏

பூமி விரிக்கப்பட்டு, அது தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்தி அது வெறுமையாகியும் விடும்போது, (84:3,4)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: தங்கம், வெள்ளித் தூண்களைப் போன்ற உள்ளிருப்புக்களை பூமி வெளிப்படுத்தும், அப்போது உலகில் கொலை செய்தவன் ‘இதற்காகவே கொலைசெய்தேன்’ என்று கூற, உறவை துண்டித்தவன், ‘இதற்காகவே துண்டித்தேன்’ என்று கூற, திருடன் ‘இதற்காகவே திருடினேன்’ என்று கூறுவான், பிறகு அவர்கள் அதில் எதனையும் எடுக்காமல் விட்டுவிடுவார்கள். (முஸ்லிம்)

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ , وَحُمِلَتِ الْاَرْضُ وَ الْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً‏

ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால், (69:13,14)

اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا , وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا , فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَـثًّا

பூமி, அசைவாக அசைக்கப்பட்டு, மலைகளும் தூள் தூளாக ஆக்கப்பட்டுவிட்டால், அவைகள் பரத்தப்பட்ட புழுதிகளாக ஆகிவிடும்.  (56:4-6)

يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ , تَتْبَعُهَا الرَّادِفَةُ , قُلُوْبٌ يَّوْمَٮِٕذٍ وَّاجِفَةٌ

(முதல் முறை குழல் ஊதப்பட்டபின் பூமியை) கடுமையாக நடுக்கக் கூடியது நடுக்கும் நாளில் 6, அடுத்து வரக்கூடியது (இரண்டாவது முறை குழல் ஊதுவது) தொடரும்7, அந்நாளில் இதயங்கள் கலக்கமுடையவையாக இருக்கும்.  (79:6-8)

وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌ ؕ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ‏

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.  (39:68)

பூமி வெளிப்படுத்தும் விடயங்கள் என்ன என்பதில் ‘மரணித்து அடக்கம்செய்யப்பட்ட உடல்கள்‘ என்பதுடன், ‘அதன் பொக்கிஷங்கள்‘ என்றும், ‘மனிதர்களின் செயற்பாடுகளை பேசுவது’ என்றும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த கருத்தை பதிந்த அறிஞர் ஷன்கீதி ரஹ் அவர்கள் முதலாவதே பொருத்தமானது என்று கூறிவிட்டு, ‘ஏனெனில் பொக்கிஷங்களை வெளிப்படுத்தல் என்பது ஸூர் ஊதப்படுவதற்கு முன்னர் நடக்கும், மனித செயல்களை பேசுவதென்பது, குறிப்பிட்டு (பின்னால்) சொல்லப்பட்டுள்ளது, அது இங்கு நாடப்படவில்லை’ என்று கூறி பின்வரும் வசனத்தை கூறினார்கள்:

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا , اَحْيَآءً وَّاَمْوَاتًا‏

உயிரோடிருப்போரையும், மரணித்தோரையும், அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?  (77:25,26)

மேலும் கூறினார்கள்: ‘மனிதர்களும் ஜின்களும் பூமிக்கு மேல் சுமக்கப்பட்டவர்களாகும் அதுவே அதற்கு மேலும் சுமக்கப்பட்டது, அதற்கு உள்ளேயும் சுமக்கப்பட்டது, அதனால் தான் ‘சகலைன்’ என்று அவர்களுக்கு பெயர் வைக்கப்பட்டது. இதனை இமாம்களான பக்ருர் ராஸீ, இப்னு ஜரீர் போன்றோர் கூறியுள்ளனர்’ என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏

وَقَالَ  இன்னும் அவன் கூறினான்,     الْاِنْسَانُ    மனிதன்,     مَا     என்ன\கேள்வி எழுப்புதல்,   لَ   க்கு,      هَا‌      அது\அவை,         مَا لَهَا‌‏   இதற்கு என்ன நேர்ந்தது)

இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது, (99:3)

இந்த வசனம் மூலம் உலக அழிவின்போது நடக்கும் காட்சிகளைப் பார்த்து மனிதன் ஆசச்ரியத்தில் ஆழ்ந்துவிடுவான் என்பது தெளிவாகின்றது. அவனுக்கு திடுக்கத்தை ஏற்படுத்திவிடும் காட்சிகளே நடக்கும். அதுவே மறுமை நிகழ்வு. அல்லாஹ் கூறுகின்றான்:

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ‏

மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனை பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மகத்தானதாகும்.  (22:1)

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏

அதனை நீங்கள் காணும் அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை மறந்து விடுவாள், கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் சுமையை வைத்து (பெற்றெடுத்து) விடுவாள், மேலும் மனிதர்களை  போதை பிடித்தவர்களாக நீர் காண்பீர், அவர்கள் (மதுவினால்) போதைப்பிடித்தவர்கள்  அல்லர், மாறாக அல்லாஹ்வுடைய வேதனை மிகக் கடினமானதாகும். (22:2)

இந்த வசனத்தில் மனிதர்கள் என்பதைக் கொண்டு வெளிப்படையில் அனைத்து மனிதர்களும் நாடப்படுகின்றனர் என்றாலும், இப்படி சொல்வது இறைமறுப்பாளன்தான் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றது. முஃமினை பொறுத்தவரை ‘இது ரஹ்மானாகிய அல்லாஹ் அளித்த வாக்குறுதியும், இறைத் தூதர்கள் உண்மைப்படுத்தியதும்’ என்று கூறுவார்கள், அல்லாஹ் கூறுகின்றான்:

وَنُفِخَ فِى الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰى رَبِّهِمْ يَنْسِلُوْنَ‏

மேலும், (ஸுர் எனும்) குழல் ஊதப்பட்டதும், அவர்கள் சமாதிகளிலிருந்து (வெளியேறி) தங்கள் இரட்சகன்பால் விரைந்து நடப்பார்கள். (36:51)

قَالُوْا يٰوَيْلَنَا مَنْۢ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَاۘؔ ٚ هٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ‏

எங்களுடைய நாசமே! எங்களை, எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எழுப்பியவர் யார்?” இது ”அர்ரஹ்மான் வாக்களித்ததும், தூதர்கள் உண்மைப் படுத்தியதும் “ என்று கூறுவார்கள். (36:52)

இறைமறுப்பாளனோ நாசமே, கைசேதமே என்று கதறுவான், முஃமின் இறைவிசுவாசி அல்லாஹ்வின் வாக்குறுதிகளை நம்பி அமைதியாக இருப்பான். (அல்வாஉல் பயான்)

يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏

يَوْمَٮِٕذٍ   அந்நாளில்,     تُحَدِّثُ   அது\அவள் அறிவிக்கும்\ப்பாள்,     اَخْبَارَ ‏      செய்திகள்,    هَا      அது\அவை

அந்நாளில் (பூமி) தனது செய்திகளை அறிவிக்கும்.  (99:4)

இந்த வசனம் மூலம் பூமி மறுமை நாளில் பேசும் என்பது தெளிவாகின்றது, ஒரு முஃமின் அதில் ஆச்சர்யப்படமாட்டான், ஏனெனில் அல்லாஹ் அனைத்திலும் ஆற்றல் மிக்கவன் என்பதே அடிப்படை நம்பிக்கை. அதேநேரம் இன்றைய உலகில் ஒரு நாத்தீகனாக இருந்தாலும் மறுக்க முடியாது எனும் அளவுக்கு தொழில்நுற்பம் வளர்ந்து போயிருக்கின்றது. சாதாரண மனிதனின் கண்டுபிடிப்புகளான கருவிகள் எல்லாம் தகவல்களை எதோ ஒரு அடிப்படியில் வெளிப்படுத்தும் போது, மனிதனுக்கு அறிவை கொடுத்த அல்லாஹ்வால் பூமியை பேச வைக்க முடியாதா?

அதன் தகவல்கள் என்றால் மனிதன் பூமிக்கு மேல் செய்த செயற்பாடுகள் என்பது தான் நாடப்படுகின்றது.

அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் , இந்த வசனத்தை ஓதிவிட்டு ‘அதன் செய்திகள் என்றால் என்னவென்று தெரியமா?’ என்று கேட்க, ‘அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவார்கள்’ என்று தோழர்கள் கூற, ‘அதன் செய்திகள் என்றால் ஒவ்வொரு அடியானும் இதற்கு மேல் என்ன செய்தார்கள் என்பதை அறிவித்து, அவன் இப்படி இப்படி செய்தான் என்று கூறும், அதுவே அதன் செயதிகள்’ என்று கூறினார்கள். (திர்மிதி:2429) அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘யஹ்யப்னு அபீ சுலைமான்‘ என்பவர் ‘முன்கருல் ஹதீஸ்‘ என்று விமர்சிக்கப்பட்டவர், எனவே இது பலவீனமாகும்.

தப்ரானியின் அறிவிப்பில்;4596) ‘பூமியிடமிருந்து பாதுகாப்பு எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அதுவே உங்கள் தாயாகும், யாராவது அதன் மீது ஒரு நல்லதை அல்லது தீயதை செய்தால் அதனை அது அறிவித்துவிடும். என்று வந்துள்ளது. அதன் அறிவிப்பில் ‘இப்னு லஹீஆ‘ இடம்பெற்றுள்ளார், அவர் பலவீனமானவரே.

 ஆனாலும் இன்னும் சில நபிமொழிகள் அதனை தெளிவுபடுத்துகின்றன.

اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ

நிச்சயமாக நாமே, மரணித்தோரை உயிர்ப்பிக்கிறோம், அவர்கள் முற்படுத்தியவற்றையும், அடிச்சுவடுகளையும் நாம் எழுதுகிறோம், ஒவ்வொரு பொருளையும்,  தெளிவான ஏட்டில் அதைக்கணக்கெடுத்து வைத்திருக்கின்றோம்.  (36:12)

ஜாபிர் ரலி அவர்கள் கூறினார்கள்: பனூ ஸலிமா கூட்டத்தார் மஸ்ஜிதுக்கு நெருக்கமாக (வீடு எடுத்து) வர விரும்பிய போது, நபியவர்கள்: ‘பனூ ஸலிமாவே! உங்களது வீட்டை பற்றிக்கொள்ளுங்கள், உங்களது எட்டுக்கள் பதியப்படும், உங்களது வீட்டை பற்றிக்கொள்ளுங்கள், உங்களது எட்டுக்கள் பதியப்படும்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

அபூ ஸஈத் அல்குத்ரீ ரலி அவர்கள் நபி ஸல் அவர்கள் கூறியதாக கூறினார்கள்: தொழுகைக்காக அழைப்பவரின் அழைப்பை செவிமடுக்கும் மனிதன், ஜின் மற்றுமுள்ள அனைத்தும் மறுமையில் அவருக்காக சாட்சி சொல்லும், சில அறிவிப்புக்களில் ‘கற்கள், மரம் என்றும் பதியப்பட்டுள்ளது. (புகாரி:609, இப்னு மாஜா:723)

بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏

اَنَّ நிச்சயமாக,  رَبَّكَ உம் இறைவன்,  اَوْحٰى  அவன் கட்டளையிட்டான்\ அறிவித்தான்,     لَ     க்கு,     هَا     அது, அவை

நிச்சயமாக உமதிரட்சகன் அதற்கு (க்கட்டளையிட்டு) வஹீமூலம் அறிவித்ததன் காரணமாக! (99:5)

‘அல்லாஹ் பூமிக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டதற்கு இணங்க அது தகவல்களை அறிவிக்கும்.’ என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள். (இப்னு கஸீர்)

இந்த வசனத்தில் அவ்ஹா என்பதன் அர்த்தம் அறிவித்துக் கொடுத்தான் என்பதே, அல்லாஹ் கூறுகின்றான்:

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ‏ , ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ ؕ ‏

உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படியம்,பிறகு நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழிகளில் ஒடுங்கிச் செல் என்றும் அறிவித்தான். (16:68,69)

يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا  ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏

يَوْمَٮِٕذٍ     அந்நாளில்,     يَّصْدُرُ     அவன் வெளியேறுவான்,     النَّاسُ     மக்கள்,     اَشْتَاتًا     பலபிரிவுகளாக,     لِّ     க்கு,   يُرَوْا      அவர்கள் காண்பிக்கப்படுவார்கள்,    اَعْمَالَهُمْؕ‏     அவர்களின் செயல்கள்

அந்நாளில் மனிதர்கள், அவர்களின் செயல்கள் காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக வெளிப்பட்டு வருவார்கள். (99:6)

பூமிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட மனிதன், பூமி தனது நடத்தைகள் பற்றி பேசும் அந்த நாளில், உலகில் தான் செய்தவைகள் என்ன என்பதை பார்வையிடுவதற்காக கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏

فَ     எனவே,   مَنْ     யார்\ஒருவன்,     يَّعْمَلْ     அவன் செய்வான், றான்,     مِثْقَالَ     அளவு,     ذَرَّةٍ    ஓர் அணு,     خَيْرًا     நன்மை\நல்லது,     يَّرَ‏     அவன் கண்டுகொள்வான் \கிறான்

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் அதனைக் கண்டு கொள்வார்.  (99:7)

 وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

وَمَنْ     இன்னும் யார்,     يَّعْمَلْ     அவன் செய்வான்,     مِثْقَالَ     அளவு,     ذَرَّةٍ     ஓர் அணு,     شَرًّا     தீமை\கெட்டது,     يَّرَه‏     அதை கண்டுகொள்வான்\கிறான்

இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் அதனைக் கண்டு கொள்வார்.  (99:8)

முந்தைய வசனங்களில் மறுமை நிகழ்வின் போது நடப்பவற்றையும், மறுமையில் மனிதனின் நிலை பற்றியும் சொன்ன அல்லாஹ், இந்த இரண்டு வசனங்கள் மூலம் உலகில் மனிதன் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் மறுமையில் அதனை கண்டுகொள்வான் என்று எச்சரிப்பதன் மூலம், மறுமைக்காக நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதை மறைமுகமாக ஆர்வமூட்டுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:

يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا

(அல்லாஹ் எச்சரிக்கும் நாள்) மனிதன் தன் இருகரங்கள் முற்படுத்தியதைக் காணும் நாள்; இன்னும் நிராகரித்தவனோ “நான் மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே” என்று கூறும் நாள். (78:40)

அடுத்து இந்த வசனங்கள் மூலம் அமல்கள் அனுவளவாக இருந்தாலும் அல்லாஹ் அதனை காட்டுவான் என்று கூறுவதன் மூலம் அனுவளவானதை கொண்டுவர முடிந்த அல்லாஹ்வால் பெரியவற்றை கொண்டுவருவது கஷ்டமான காரியமல்ல என்பதை உணர முடியும்,

அடுத்து சிறியது தானே என்று பாவம் செய்கிற மனிதன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சிறிய பாவங்களே மனிதனை அளிக்கப்போதுமானது.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: குதிரை மூன்றுக்காக இருக்கின்றது; ஒரு மனிதனுக்கு நற்கூலி பெற்றுத்தரும், ஒரு மனிதனுக்கு தன்னை மறைக்கக் கூடியதாக இருக்கும், ஒரு மனிதனுக்கு பாவத்தை பெற்றுத்தரக் கூடியதாக இருக்கும். கூலி பெறுகின்ற முதலாமவரை பொறுத்தவரை; அவன் அதனை அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காக வளர்க்கின்றான், அவன் அதனை நீண்ட கயிற்றினால் கட்டி, புல்வவெளியில் மேய விடுகின்றான், அது அதிலிருந்த சாப்பிடும் போதெல்லாம் அவனுக்கு நன்மையாக அமையும், அதன் கயிறு அறுந்து, அது மலை மேடுகளை நோக்கி ஓடினாலும் அதன் எட்டுக்களும், அது விடுகின்ற விட்டைகளும் அவனுக்கு நன்மையாகும், அது ஒரு ஆற்றங்கரையை நோக்கி ஓடி, அதிலிருந்த நீரை அருந்தினாலும் அவன் நீர் அருந்த கொண்டுவரவில்லை, (அவனது நல்ல எண்ணத்திற்காக) அது அவனுக்கு நன்மையாக அமையும், இரண்டாவது மனிதர், (ஏழ்மையுடன் இருந்தாலும் மக்களிடம் தேவையுள்ளவராக காட்டாமல்)அதனை, தன்னை தன்னிறைவானவர் என்றும், (மக்களிடம் தேவைகளை கேற்காமல்) பேணுதலுடையவர் என்றும் காட்டும் நிலையில் வைத்திருந்தவர், அதேநேரம் அல்லாஹ்வுக்கு கொடுக்கவேண்டியதையும் நிறைவேற்றி, அதனை (அல்லாஹ்வின் பாதையில் பயன்படுத்த) முதுகில் ஏறுவதையும் நிறைவேற்றினார். அது அவருக்கு அவரது ஏழ்மையை மறைக்கக் கூடியதாக இருக்கும். மூன்றாமவர், பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் வைத்திருந்தவர், அது அவருக்கு பாவத்தை பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும். அப்போது நபிகளாரிடம் கழுதை பற்றி கேட்கப்பட்டது, அதற்கு நபியவர்கள்: இந்த பரிபூரணமான வசனத்தைத் தவிர வேறு எதுவும் இறங்க வில்லை என்று கூறினார்கள். (புகாரி: 3646,2860)

அடுத்து ஒரு மனிதன் சிறிய பாவமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,  சிறிய நன்மையாக இருந்தாலும் அதில் கவனம் செலுத்த வேண்டும்

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஒரு ஈத்தம் பழத்தின் ஒரு துண்டையாவது தர்மம் செய்து நரகத்திலிருந்து நீங்கள் பாதுகாப்பு எடுத்துக் கொள்ளுங்கள், அது கிடைக்காதவர்கள் ஒரு நல்ல வார்த்தையை கொண்டாவது தர்மம் செய்து கொள்ளட்டும்.  (புகாரி: 3595,6023, முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: பெண்களே நீங்கள் ஒரு ஆட்டின் மாமிசம் குறைந்த ஒரு எலும்புப் பகுதியாக இருந்தாலும் அதை தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்மணிக்கு அன்பளிப்புச் செய்வதை கேவலமாக கருதவேண்டாம். (புகாரி: 2566,6017, முஸ்லிம்)

அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சில செயல்களை செய்கிறீர்கள், உங்களுடைய பார்வையில் முடியை விடவும் சிறியதாக இருக்கிறது, ஆனாலும் நபிகளார் காலத்தில் அவற்றை நாங்கள் மனிதனை அழித்து விடக்கூடிய பெரும் பாவமாக பார்த்தோம். (புகாரி:6492)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நல்லது என்று வந்துவிட்டால் எதனையும் நீ சிறியதாக கருதாதே அது உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்முறுவல் பூப்பதாக இருந்தாலும் சரியே. (முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஆஇஷாவே பாவங்களில் சிறியவைகளை உனக்கு நான் எச்சரிக்கின்றேன் ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அதுவும் வேண்டப்படக் கூடியதாக இருக்கிறது. (இப்னு மாஜாஹ்: 4243, அஹ்மத்:24415)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஷைதான், மனிதர்கள் அவனை வணங்குவார்கள் என்பதிலிருந்து நம்பிக்கை இழந்து விட்டான் ஆனாலும் நீங்கள் சிறியதாக கருதுகின்ற அந்த பாவங்களின் ஊடாக அவனுக்கு நீங்கள் கட்டுப்படுவீர்கள், அதை அவன் விரும்பி பொருந்திக் கொள்வான். (இப்னு மாஜாஹ்: 3055)

எனவே இந்த ஸூராவை படிக்கின்ற நாங்கள் மறுமை என்று ஒன்று வரவிருக்கின்றது, என்ற சிந்தனையோடு மறுமையை பயந்து வாழ்வோம், உலகத்தில் வாழுகின்ற பொழுது நன்மையான காரியங்களை, சிறியவை பெரியவை என்று பார்க்காமல் அதில் கவனம் செலுத்துவோம். பாவம் என்று வந்துவிட்டால் அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். அதனூடாக மறுமையில் வெற்றி பெற தகுதியான மனிதர்களாக மாற நாங்கள் முயற்சி செய்வோம்.

அடுத்து இங்கு அணுவளவு என்று கூறிய அல்லாஹ் மற்றோரு வசனத்தில் அதனைவிட சிரியதையும் அல்லாஹ் அறிவான் என்பதன் மூலம். அணுவைப் பிரிக்கமுடியாது என்று கூறிக்கொண்டிருந்த மனிதனுக்கு அது பிரிக்க முடியுமானது என்று ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலே கூறிவிட்டான். இது இஸ்லாத்தை மறுத்து, மறுமையை மறந்து வாழும் மனிதனுக்கு  அல்லாஹ் இஸ்லாம் உண்மை மார்க்கம், மறுமை வாழ்வு உண்மை என்பதை  உணர்த்துவதன் சிறந்த எடுத்துக்காட்டாக இறுக்கப் போதுமானது. அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை. (10:61)

சுருக்கம் பூமியில் வாழுகின்ற மனிதனுக்கு மறுமையை நினைவூட்டும் அல்லாஹ், இந்த அறிவியல் உண்மையை எடுத்துக்காட்டுவதன் மூலம் இஸ்லாம்தான் உண்மை மார்க்கம் என்பதையும், பூமியால் பேசவும் முடியும் என்பதையும் எடுத்துக்கூறி நேர்வழி காட்டுகின்றான்.

இத்தோடு ஸூரா ஸில்ஸாலின் விளக்கம் முற்றுப் பெறுகின்றது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *