سُورَةِ التِّينِ

ஸூரதுத் தீன்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரதுத் தீன் (அத்தி மரம் )

இறங்கிய காலப்பகுதி: மக்கீ

வசனங்கள்: 8

பராஃ பின் ஆஸிப் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் ஒரு பயணத்தின் போது இரண்டு ராக்அத்களில் ஒன்றில் வத்தீனி வஸ்ஸைதூன் ஸூராவை ஓதினார்கள், அவர்களைவிட அழகான ஓசை அல்லது ஓதல் உடைய ஒருவரை நான் செவிமடுத்ததில்லை.  (புகாரி:4952, முஸ்லிம்)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏ , وَطُوْرِ سِيْنِيْنَۙ‏ , وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ

وَ    சத்தியம் செய்வதற்கு பாவிக்கும் ஒரு எழுத்து\சத்தியமாக,       التِّيْنِ     அத்தி மரம்,     الزَّيْتُوْنِۙ‏     ஸைதூன் ஒலிவ் மரம்,     طُوْرِ سِيْنِيْنَۙ‏     சினாய் மலை,     وَ     சத்தியமாக,    هٰذَا     இது,     الْبَلَدِ     நகரம்\ஊர்,     الْاَمِيْنِۙ‏     அபயமளிக்கபட்டது,\பாதுகாப்பானது

அத்தியின்மீதும் ஸைதூனின் (ஒலிவத்தின்) மீதும், ஸினாய் மலையின்மீதும், (மக்காவாகிய) அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக! (95:1-3)

அத்தீன் என்பதைக்கொண்டு என்ன நாடப்படுகின்றது என்பதில் பல கருத்துக்களை அறிஞர்கள் கூறியுள்ளனர், சிலர் அத்தி மரம் என்றும், சிலர், ‘திமஸ்கில் இருக்கும் மஸ்ஜித்’ என்றும், இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ‘ஜூதி மலையில் இருக்கும் மஸ்ஜித் நூஹ்’ என்றும், முஜாஹித் அவர்கள் ‘ அத்திக்காய்’ என்றும் கூறினர். (இப்னு கஸீர்)

ஸைதூன் என்றால் ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ என்று கதாதா, ஸைத், கஃபுல் அஹ்பார் போன்றவர்களும், ‘ ஸைதூன் பலம்’ என்று முஜாஹித் இக்ரிமா போன்றவர்களும் கூறினர்.

தூரி சீனீன் என்றால் ‘மூஸா நபியவர்கள் அல்லாஹ்வோடு பேசிய மலை’ என்று கஃபுல் அஹ்பார் அவர்களும் மற்றவர்களும் கூறினர்.

அல்பலதுல் அமீன் என்றால் ‘மக்கமா நகர்’ என இப்னு அப்பாஸ், முஜாஹித், இக்ரிமா, ஹஸனுல் பஸரி போன்ற அறிஞர்கள் கூறினர், அதில் கருத்துவேற்றுமையும் இல்லை. (இப்னு கஸீர்)

சில அறிஞர்கள் ‘இவை மூன்று இடங்களாகும், அவ்விடங்கள் ஒவ்வொன்றிலும் மார்க்கம் வழங்கப்பட்ட நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான், முதலாவது; இடம், அத்தி, ஸைதூன் சார்ந்த இடம், அதுவே பைதுல் மக்திஸ் அமைந்துள்ள ஈஸா நபி அனுப்பப்பட்ட இடம், இரண்டாவது; தூர் சீனாஃ மலை, அதன் மீதிருந்தே மூஸா நபியவர்கள் அல்லாஹ்வோடு பேசினார்கள், மூன்றாவது; மக்கா, அதுவே அபயமளிக்கும் நகரம், அங்குதான் நபி முஹம்மத் ஸல் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். என்று கூறினர். (இப்னு கஸீர்)

அறிஞர் ஷன்கீதி ரஹ் அவர்கள் பின்வறுமாறு கூறினார்கள்:

‘அத்தீனும், ஸைதூனும் அறியப்பட்ட இரண்டு பழங்கள்’ என்று இப்னு அப்பாஸ், இக்ரிமா, ஹஸனுல் பஸரீ, முஜாஹித் போன்றோர் கூறினர்,

அத்தீன் என்றால் மஸ்ஜித் தமஸ்கஸ், ஸைதூன் என்றால் பைதுல் மக்திஸ் என்று கஃப் இப்னுல் அஹ்பார் அவர்கள் கூறினார்கள். இவ்வாறே கதாதா அவர்களும் கூறினார்கள், அவர்கள் இவ்விரண்டைக் கொண்டும் அவைகளின் இடத்தை நாடியுள்ளனர், பின்னால் வரும் தூர், பலதில் அமீன் என்பதைப் போன்று.  அத்தி, ஸைதூன்  ஈஸா நபி அவர்களுக்கும், தூர் சீனாஃ மலை மூஸா நபியவர்களுக்கும், மக்கா நபி முஹம்மத் ஸல் அவர்களுக்கும்  என்ற அடிப்படையில் கூறினர்.

ஆனாலும் அவ்விரண்டைக் கொண்டு அவற்றின் இடத்தை நாடுவதற்கு எந்த சான்றும் இல்லை, மாறாக, அதன் அடிப்படை கருத்தில் வைப்பதே சிறந்தது என்று இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள். (அல்வாஉல் பயான்)

ஸைதூன் என்ற சொல் அல்குர்ஆனில் பல இடங்களில் பரகத் செய்யப்பட்ட அந்த மரம் என்ற கருத்தில் வந்திருக்கின்றது;

وَهُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا‌ ۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ‌ ؕ اُنْظُرُوْۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَيَنْعِهٖ ؕ اِنَّ فِىْ ذٰ لِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏

மேலும், அவன் எத்தகையவனென்றால், வானத்திலிருந்து மழையை அவன் இறக்கி வைக்கின்றான், பின்னர் அதைக் கொண்டு ஒவ்வொரு பொருளின் புற்பூண்டுகளையும் நாம் (முளைக்க வைத்து) வெளிப்படுத்தினோம், பின்னர் அதிலிருந்து பசுமையான (பயிர்கள் உள்ள)தை நாம் வெளிப்படுத்தினோம், பின்னர், அதிலிருந்து ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்துள்ள (கதிர்களைப் போன்று) வித்துக்களை வெளிப்படுத்துகிறோம், பேரீச்ச மரத்திலிருந்து-அதன் பாளையிலிருந்து (பறிப்பவர்களுக்கு வளைந்து) அருகில் தொங்கும் பழக்குலைகளுமிருக்கின்றன, (அவற்றையும் நாமே வெளிப்படுத்துகின்றோம்) திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலும் ரசனையில் வெவ்வேறாகவும் உள்ள ஜைய்த்தூன் (-ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் நாமே (வெளிப்படுத்துகின்றோம்.) அவற்றின் கனிகளை – அவை (பூத்துக்) காய்க்கும்போதும், பின்னர், அது கனிந்து பழமாகும் விதத்தையும் நோக்குவீர்களாக! விசுவாசங்கொள்ளும் சமூகத்தினர்க்கு நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.  (6:99)

وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَآءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ‏

தூர் ஸைனாவிலிருந்து (முளைத்து) வெளிப்படும் ஒரு மரத்தையும் (நாம் படைத்தோம்.) அது எண்ணையையும், புசிப்போருக்கு (சுவைமிக்க) குழம்பையும் கொண்டு முளைக்கிறது.  (23:20)

فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا , وَّ عِنَبًا وَّقَضْبًا , وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ‏ ۙ‏ ۙ‏

80:27. பின்னர் அதிலிருந்து தானியத்தையும், திராட்சையையும், காய்கறிகளையும், ஸைதூனையும், பேரீத்தம் மரத்தையும் நாம் முளைக்கச் செய்தோம்.  (80:27-29)

اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏

அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான், அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம்: அதில் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும், அவ்விளக்கு கண்ணாடியினுள் இருக்கிறது, நிச்சயமாக அக்கண்ணாடி பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தைப் போன்றதாகும், (அது) பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப்படுகிறது, (அது) கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று, மேல் திசையைச் சேர்ந்ததுமன்று, அதன் எண்ணெய், அதை நெருப்பு தொடாவிடினும் பிரகாசிக்கவே முற்படும், (இவை யாவும் இணைந்து) ஒளிக்குமேல் ஒளியாகும், அல்லாஹ் தான் நாடியவர்களைத் தன் பிராகாசத்தின் பால் செலுத்துகிறான், மேலும், மனிதர்களுக்கு அல்லாஹ் இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிந்தவன்.  (24:35)

எனவே இவ்வளவு சிறப்பு கொண்ட ஸைதூன், அதன் மீது சத்தியம் செய்யப்படுவதற்கு தகுதியான ஒன்றாக இருக்கின்றது.

இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் அத்தி பற்றி கூறும் போது; ‘அது மக்கா, மதீனா பகுதிகளில் இல்லாமையினால் அதனைப்பற்றி நபிவழியில் எதுவும் வரவில்லை, ஆனாலும் அல்லாஹ் அவனது வேதத்தில் அதன் மீது சத்தியம் செய்துள்ளான், அதில் இருக்கும் அதிக பயன், பிரயோசனங்கள் காரணமாக இருக்கும்’ என்கிறார்கள்.

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும் போது, அவ்வாறே குர்ஆனிலும் இந்த இடம் தவிர்த்து அது கூறப்படவில்லை, அது மக்கா, மதீனா பகுதிகளில் அதற்கு ஒத்துப்போகாத காலநிலை காரணமாக இருக்கவில்லை, தற்போது அது அங்கு இருந்தாலும் அதன் சிறந்த தன்மையில் இல்லை’ என்று கூறினார்கள்.(அல்வா உல்பயான்)

தூர் சீனாஃவைப் பொறுத்தவரை; அதுவும் அல்குர்ஆனில் பல இடங்களில் பதியப்பட்டுள்ளது. எனவே அதுவும் சத்தியம் செய்யப்படும் அளவுக்கு கண்ணியமானதே.

وَنَادَيْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِيًّا‏

இன்னும் தூர்(ஸினாய்) மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை நாம் கூப்பிட்டோம், இரகசியம் பேசுகிறவராக அவரை நாம் (நமக்கு) நெருக்கமாக்கியும் வைத்தோம்.  (19:52)

وَالطُّوْرِ, وَكِتٰبٍ مَّسْطُوْرٍ, فِىْ رَقٍّ مَّنْشُوْرٍ‏

52:1. தூர் என்னும் மலையின் மீதும், விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக! (52:1-3)

அல்பலதில் அமீன் எனும் மக்கமா நகரைப் பொறுத்தவரை அதுவும் குர்ஆனில் பல இடங்களில் வந்திருக்கின்றது;

فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார்……  (3:97)

اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ‌

(இந்த மக்காவை) அபயமளிக்கும் இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் இறாஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்படுகின்றனர்.  (29:67)

அல்லாஹ்வின் படைப்புக்களில் சிறந்த, மனிதர்களுடன் தொடர்புபட்ட பலவற்றில் சத்தியம் செய்த அல்லாஹ் அந்த சத்தியத்திற்கான பதிலை பின்வருமாறு கூறுகின்றான்;

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ

لَ   சத்தியத்திற்கான பதிலில் சேர்ந்து வரும்,     قَدْ      நிச்சியமாக\உறுதிப்படுத்த வரும் சொல்,     خَلَقْنَا    நாம் படைத்தோம்,     الْاِنْسَانَ   மனிதன்,     فِىْۤ     இல்\லே,     اَحْسَنِ    மிக அழகியது,       تَقْوِيْمٍ     கட்டமைப்பு

நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.  (95:4)

பலவற்றில் சத்தியம் செய்த அல்லாஹ் மனிதனை அழகிய வடிவத்தில், தோற்றத்தில் படைத்துள்ளதாக கூறுகின்றான், உண்மையில் ஏனைய படைப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது மனிதன் சிந்திக்கும் திறனுடன், அழகாக பேசும் ஆற்றலுடன், நேர்த்தியாக, நிமிர்ந்து நிட்கும் நிலையில், உறுப்புக்கள் ஒருங்கமைப்போடு படைக்கப்பட்டுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:

اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ , ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ , فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىؕ , اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْـىَِۧ الْمَوْتٰى‏

அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்கவில்லையா?37, பின்னர், அவன் கருவாக (இரத்தக்கட்டியாக)மாறினான்,பிறகு அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கி,38, ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து ஆக்கினால் 39,  (இவ்வளவெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா?  (75:37-39)

يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ , الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ , فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ , كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ‏‏‏

மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றிவிட்டது எது?6, அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னை படைத்து மேலான விதத்தில் மிக நேர்த்தியாக உன்னை அமைத்து 7, அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன்னுடைய அவயங்களைப் பொறுத்தினான் 8, எனினும், (மனிதர்களே!) கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகின்றீர்கள்.  (82:6-9)

முன்னைய இரண்டு வசனத் தொடர்களையும் நன்றாக சிந்தித்தால், மனிதன் உடல் கட்டமைப்பிலும், உள்ரங்கத்திலும் (சிந்திக்கும் திறன், சுயபுத்தி) நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளான் என்பதை புரியலாம், ஏனெனில் மனிதனது படைக்கோலத்தை பேசுகின்ற அல்லாஹ் (அவனால் ஒன்றுமில்லாதிருந்த உன்னை அழகாக படைக்க முடியுமென்றால், இருந்து அழிந்து போகும் உன்னை அவனால் ஏன் திரும்ப எழுப்பமுடியாது’ என்று  மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றான். அதேபோன்றுதான் இந்த ஸூராவின் கடைசியிலும் [கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (மனிதா!) இதற்குப் பின்னர், உன்னை எது பொய்யாக்க முடியும்?95:7) என்று சிந்திக்க தூண்டுகின்றான். எனவே மனிதன் அனைத்து விதத்திலும் பூர்த்தியானவன் என்பதை புரியலாம். அல்லாஹ் கூறுகின்றான்:

وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَهٗ‌ ؕ قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ‏

(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக்கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னை படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று (ஓர் எலும்பை எடுத்து அதனை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான். 78.

قُلْ يُحْيِيْهَا الَّذِىْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ‌ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمُ ۙ‏

(நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: “முதல் முறையில் அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.  (36:79)

அடுத்து, இப்படி சிந்திக்கும் ஆற்றலுடனும், பூர்த்தியான, நேர்த்தியான உடல் கட்டமைப்புடனும் படைக்கப்பட்ட மனிதன் படைத்தவனுக்கு கட்டுப்பட்டால் என்ன நிலை, மாறுசெய்தால் என்னை நிலை என்பதை பின்வருமாறு தொடர்ந்து கூறுகின்றான்;

ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ‏

ثُمَّ   பிறகு,     رَدَدْنٰهُ   அவனைத் நாம் திருப்பினோம்,     اَسْفَلَ   மிகத் தாழ்ந்தவன்,     سَافِلِيْنَۙ‏     தாழ்ந்தவர்கள்

(அவனுடைய தீய நடத்தையின் காரணமாக) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகின்றோம்.  (95:5)

இந்த வசனம் மூலம் கண்ணியமாக, நேர்த்தியாக படைக்கப்பட்ட மனிதன் கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்படுகின்றான். என்பது தெளிவாகின்றது.

‘கீழ்த்தரமான நிலை’ எனும் போது சிலர் ‘உடல் பலவீனம், சிந்தனைக்கோளாறு, வயோதிபம், முதுமை போன்ற நிலைக்கு தள்ளப்படல்’ என்று கூறினர், பின்வரும் அல்குர்ஆன் வசனம் கூறுவது போன்று;

وَمَنْ نُّعَمِّرْهُ نُـنَكِّسْهُ فِى الْخَـلْقِ‌ؕ اَفَلَا يَعْقِلُوْنَ‏

நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?  (36:68)

اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً  ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ‏

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.  (30:54)

وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْــٴًـــا‌ ؕ ‏

(அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (22:5)

இந்த கருத்தே  இப்னு அப்பாஸ் ரலி அவர்களைத் தொட்டு இப்னு ஜரீர் ரஹ் அவர்கள் பதிந்துள்ளார்கள்.

மேலும், அதற்கு ‘மனிதர்களின் இறைமறுப்பின் காரணமாக நரகம் என்ற கீழ்த்தரமான இடத்திற்கு தள்ளப்படுவார்கள்’ என்று சிலர் கூறினர், இது முஜாஹித், ஹஸனுல் பஸரீ அவர்கள் கூற்றாக பதியப்பட்டுள்ளது.

முதல் விளக்கத்தையே இப்னு ஜரீர் இமாமவர்கள் முன்னால் சொல்லப்பட்ட குர்ஆன் வசனங்களை வைத்து தேர்வு செய்தார்கள்,  மேலும் இந்த ஸூராவின் 7 வது வசனமான ‘இதன் பிறகு மறுமையை பொய்ப்பிக்க வைத்தது எது?’ என்ற வசனத்தை ஆதாரமாக காட்டினார்கள், என்றால்; இல்லாதிருந்து படைக்கப்பட்டு, நல்ல நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் கீழ்த்தரமான பலவீனமான நிலைக்கு தள்ளப்படுவதை பார்க்கின்ற மனிதன் எப்படி மறுமையை பொய்ப்பிக்கலாம், இதுவே அவர்களுக்கெதிரான சாட்சியாகும்.

நரகம் என்ற கீழ் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது அவர்கள் காணாத, ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகும், அவர்களுக்கு எதிர் சாட்சியமாக அதனை வைப்பது பொருந்தாது என்று கூறினர். இது உலக வாழ்க்கைக்கு அல்லாஹ் கூறும் உதாரணத்தைப் போன்றதாகும்,

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண்பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குக் களிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதைக் காண்கின்றான். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை.  (57:20)

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَـكَهٗ يَنَابِيْعَ فِى الْاَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَ لْوَانُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَـرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهٗ حُطَامًا‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ

(நபியே!) “நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதனைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கின்றான். பின்னர், அதனைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகின்றான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கின்றீர்கள். பின்னர், அதனைக் காய்ந்த சருகுகளாக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடைய வர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது.”  (39:21)

இந்த கருத்துப்படி அடுத்த வசனத்தில் விதவிலக்கழிக்கப்படுவதானது; “உண்மை முஃமின்கள் தள்ளாடும் வயதுக்கு சென்றாலும் பயப்படமாட்டார்கள், ஏனெனில் எவ்வளவுதான் வயது முதிர்ந்தாலும் அவர் அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் இருப்பார், அல்லாஹ்வை நினைப்பதில் பூர்த்தியான சிந்தனை உள்ளவராக இருப்பார்” என்பதாகும்.

அவர்களுக்கு துண்டிக்கப்படாத கூலி இருக்கின்றது; என்பது முதல் கருத்துப்படி; ‘நன்மை என்பதாகும், ஒன்றில்; அவர்களது தொடர் வணக்கங்கள் காரணமாக, அல்லது; அல்லாஹ் வானவர்களை ‘அவர்களது சக்திவாய்ந்த காலத்தில் செயற்பட்டமைக்கான கூலியை தொடர்ந்து எழுதுமாறு’ ஏவுவதாகும். அது ஹதீஸில் வந்திருப்பது போன்று;

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஆரோக்கியமான நிலையிலும், ஊரில் இருக்கும் நிலையிலும் செய்துவந்த நற்கருமங்களை, நோயின் காரணமாக, பிரயாணத்தின் காரணமாக செய்யமுடியாது போனால் அல்லாஹ் கூலியை வழங்குகின்றான். (புகாரி:2996)

இரண்டாவது கருத்தின் படி ‘கூலி என்றால் சுவனத்தில் இன்பம் கிடைப்பது, அது துண்டிக்கப்படவேமாட்டாது என்று பொருள்படும். அல்குர்ஆன் பிவருமாறு கூறுகின்றது:

مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ ؕ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ ؕ اُكُلُهَا دَآٮِٕمٌ وَّظِلُّهَا‌ ؕ تِلْكَ عُقْبَى الَّذِيْنَ اتَّقَوْا‌ ‌‏

இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையோ அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அங்கு (அவர்களுக்குக்) கிடைக்கும் உணவுகள் (என்றுமே) நிலையானவை. அதன் நிழலும் (அவ்வாறே நிலையானது.) இதுதான் இறை அச்சமுடையவர்களின் முடிவாகும். (13:35) (கீழ்த்தரமான நிலை பற்றிய விளக்கம்;அல்வாஉல் பயான்)

அதே நேரம் இப்னு கஸீர் இமாமவர்கள் இரண்டாவது கருத்தையே சரிகண்டு, பின்வருமாறு கூறினார்கள்; ‘இப்னு ஜரீர் ரஹ் அவர்கள் ஏற்றதுபோன்று முதல் கருத்தை ஏற்றால் அதிலிருந்து முஃமின்களை விதிவிலக்கு செய்வது பொருத்தமாகாது, ஏனெனில் வயோதிபம் என்பது அவர்களில் சிலரை பிடித்துக் கொள்ளும், மாறாக; கீழ்த்தரமான நிலை என்பது நாங்கள் கூறியது போன்றாகும்.(இரண்டாவது கருத்து) இது அல்லாஹ்வின் கூற்றைப் போன்றதாகும்;

وَالْعَصْرِۙ‏     காலத்தின் மீது சத்தியமாக! 1    اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏     மனிதன் (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்.2, اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ   ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).  (103:3)  (இப்னு கஸீர்)

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍؕ‏

اِلَّا    தவிர\ விதிவிலக்கு செய்வதற்காக பாவிக்கப்படும் ஒரு சொல்,     الَّذِيْنَ      சிலர்\ எத்தைகையோர் என்றால்,     اٰمَنُوْا     அவர்கள்  நம்பினார்கள்,     وَعَمِلُوا     இன்னும் வேலை செய்தார்கள்,     الصّٰلِحٰتِ     நற்செயல்கள்,      فَ   எனவே,     لَهُمْ   அவர்களுக்கு,     اَجْرٌ  நன்மை\ கூலி,  غَيْرُ  வேறு\ தவிர,  مَمْنُوْنٍؕ‏     முடிவுற்றது\துண்டிக்கப்பட்டது

விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோரைத் தவிர, அவர்களுக்கு முடிவடையாத (நற்) கூலியுண்டு.  (95:6)

தள்ளாடும் நிலைக்கு சென்று கேவலப்படும் மனிதர்கள், அல்லது நரகில் நுழையும் கெட்டவர்களிலிருந்து பாதுகாக்கப்படும் மனிதர்கள் நற்கருமங்கள் புரியும் உண்மை முஃமின்களே என்று அல்லாஹ் விதிவிலக்களித்து கூறுகின்றான். அவர்கள் ஒன்றில் தள்ளாடும் வயதை அடைந்தாலும் ஆரோக்கியத்தில் செய்த நற்செயல்களின் நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும் அல்லது மறுமையில் நிலையான சுவர்க்கம் கூலியாக கிடைக்கும்.

ஈமான் என்பது, {அல்லாஹ்வையும், வானவர்களையும், நபிமார்களையும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களையும், மறுமை வாழ்க்கையையும், நன்மை, தீமை யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் எனும் கலா கத்ர் விதியையும் நம்புதல்} உள்ளத்தினால் உறுதிகொண்டு, நாவினால் மொழிந்து, உடலுறுப்புக்களால் நடைமுறைப்படுத்துவதாகும், நற்கருமங்கள், நல்லுபதேசங்கள் கொண்டு அதிகரிக்கும், பாவங்கள், தீய நடத்தைகள் மூலம் குறையும், குறையும் ஈமானை பாவமன்னிப்பு, அறிவுரை மூலம் கூட்டிக்கொள்ளலாம். இதுவே வெற்றிபெறும் கூட்டமான, அஹ்லுஸ் சுன்னாவின் நிலைப்பாடாகும்.

நல்லமல்கள் எனும் போது; அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த, குர்ஆன் சுன்னா அடிப்படையில் வந்தவையாகும். நாமாக ஒன்றை உருவாக்கி நல்லது என்று சொல்வதானால் அது நல்லமலாக ஆகாது, மாறாக அது பித்அத்தாக நூதன செயலாக கருதப்படும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யாராவது இந்த மார்க்கத்தில் இல்லாததை புதிதாக உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும். (புகாரி:2697, முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யாராவது எங்களது ஏவல் இல்லாத ஒரு அமலை (செயலை) செய்தால் அது நிராகரிக்கப்படும். (முஸ்லிம்)

எனவே அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படும் பாக்கியம் யாருக்கு கிடைக்குமோ அவரே ஈருலகிலும் வெற்றிபெறுவார் என்ற பாடத்தை பெறவேண்டும், அவர்களுக்கே முடிவில்லாத கூலியும் கிடைக்கும் என்பதை நன்மாராயமாக பெற்று செயல்பட வேண்டு. அல்லாஹ் எங்களுக்கு அந்த பாக்கியத்தை தருவானாக!

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏

فَ    எனவே\ ஆகவே,      مَا   ஒருவன்\ எது\யார்,    يُكَذِّبُكَ  அவன் உம்மை பொய்ப்பிப்பான்\ றான்,     بَعْدُ    பின்னர்,    الدِّيْنِ‏    மார்க்கம்\ மறுமை

கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (ஆதமின் மகனே) இதற்குப் பின்னர், உன்னை  எது  பொய்யாக்கவைத்தது?  (95:7)

இந்த வசனத்தின் மூலம் ஒன்றுமில்லாமல் இருந்த நிலையில் சாதாரண இந்திரியத் துளியிலிருந்து மிகவும் அழகான, நோர்த்தியன மனிதனைப் படைத்த அல்லாஹ்வால் மறுமையில் மீட்டி எழுப்பமுடியாது’ என்று நினைக்கும் மனிதனிடமே’ ஆச்சர்யமான இந்த கேள்வி கேட்க்கப்படுகின்றது.

இந்த வசனத்தில் ‘உன்னை’ என்பதைக்கொண்டு யார் நாடப்படுவது? ‘நபியவர்களா?’ என்று முஜாஹித் அவர்களிடம் கேட்க்கப்பட்டபோது, ‘அல்லாஹ் பாதுகாக்கட்டும், மனிதனே நாடப்படுகின்றான்’ என்று கூறினார்கள். இப்படியே இக்ரிமா, மற்றவர்களும் கூறினர். (இப்னு கஸீர்)

اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏

اَ   ஆ உருபு\ வினா எழுப்புவதற்கு பாவிக்கும் எழுத்து,     لَيْسَ    இதற்கு எழுவாயும், பயணிலையும் வரும், பயனிலையில் இருப்பதை எழுவாய்க்கு இல்லை என்று நிராகரிக்கும். (அவன் அறிஞனாக இல்லை),     اللّٰهُ    அல்லாஹ்,     اَحْكَمِ     மிகவும் தீர்ப்பளிப்பவன்,     الْحٰكِمِيْنَ‏    தீர்ப்பளிப்பவர்கள்

தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக இல்லையா?  (95:8)

இந்த வசனம் மூலம் படைத்தவன் அல்லாஹ்வின் ஆற்றல்களை, வழிக்காட்டல்களை மறுக்கும் மனிதர்களுக்கும், அல்லாஹ்வை முறையாக ஏற்ற மனிதர்களுக்குமிடையில் நீதமாக தீர்ப்பளிக்கவே மறுமை என்று ஒன்று இருக்கின்றது, என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தி, அல்லாஹ் நீதமாக தீர்ப்பளிப்பவன் என்பதை வெளிப்படையாக உறுதிப்படுத்தி எடுத்துரைக்கின்றான் அல்லாஹ். அதனால்தான் கேள்வியின் தோரணையில் கேட்டிருக்கின்றான்.

நபி ஸல் அவர்கள், அல்லாஹ் கூறுவதாக (ஹதீஸூல் குத்ஸியில்) கூறினார்கள்: ‘அல்லாஹ் கூறுகின்றான்: ‘என் அடியார்களே அநியாயம் செய்வதை எனக்கு நான் தடைசெய்துள்ளேன், எனவே நீங்களும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யவேண்டாம்’  (முஸ்லிம்)

ذٰ لِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‌ۚ‏

அது “உங்கள் கைகள் முற்படுத்தி வைத்த காரணத்தினாலாகும், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநியாயமும் செய்பவனல்ல”  (3:182) இதே வசனம் அல்குர்ஆனில் இன்னும் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளது. (8:51,22:10)

وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‏

. …. உமதிறட்சகன் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்பவனே அல்லன்!  (41:46)

مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ

“(என்னுடைய) அச்சொல் என்னிடம் மாற்றப்படமாட்டாது, மேலும், என்னுடைய அடியார்களுக்கு நான் சிறிதும் அநியாயம் செய்பவனில்லை” (50:29)

அடுத்து இந்த வசனத்தையும் இது போன்ற சில வசனங்களையும் ஓதினால் அதற்காக பதில் சொல்லவேண்டும் என்று சிலர் கூறி அதற்காக பின்வரும் நபிமொழியை ஆதாரமாக காட்டுகின்றனர்.

அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறியதாக ஒரு நாட்டு புற அரபி கூறினார்: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது ஸூரா தீனை ஓதி முடித்தால், அவர்,‘بَلَى، وَأَنَا عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدَيْنِ பலா வஅன அலா தாலிக மினஷ் ஷாஹிதீன், ஆம் நான் அதற்கு சாட்சி பகிர்கிறேன்’ என்றும், ஸூரா கியாமாவை ஓதி முடித்தவர், ‘ பலா, ஆம் அல்லாஹ் சக்தியுள்ளவன்’ என்றும், ஸூரா முர்ஸலாத்தை ஓதி முடித்தவர், ‘آمَنَّا بِاللَّهِ. நாங்கள் அல்லாஹ்வை நம்புகின்றோம்’ என்றும் கூறட்டும். (அஹ்மத்:7391,திர்மிதி:3347,அபூதாவூத்:887) இந்த அறிவிப்பாளர் தொடரில் அபூஹுரைரா ரலி அவர்களிடமிருந்து அறிவிக்கும் நபர், யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூல்’ ஆவார், எனவே இது பலவீனமான செய்தியாகும், அதனை திர்மிதி இமாமவர்களும் கூறுகின்றனர். அடுத்து இதே செய்தி ஹாகிமில் (3882) ‘வத்தீன் சூராவை ஓதினால் பலா’ என்று சொல்லவேண்டும் என்று வந்துள்ளது, அதில் அந்த நபர் ‘அபுல் யஸஃ‘ என்று வந்துள்ளது, அவரும் அறியப்படாத ‘மஜ்ஹூல்‘ என அஹ்மத் ஷாகிர் அவர்களும், தஹபி, இப்னு ஹஜர் போன்றவர்களும் ‘அவர் அறியப்படாதவர்‘ என்று கூறியுள்ளனர். (லிஸானுல் மீஸான்)

அதே போன்று அபூதாவூதின் அறிவிப்பில் (884) ‘ஸூரா தீனை ஓதினால் ஸுப்ஹானக ‘ என்று கூறியதாக வந்துள்ளது, அந்த செய்தியை நபிகளாரிடமிருந் கேட்டதாக ஒருவர் கூறினார் என்று அறிவிக்கும், ‘மூஸப்னு ஈஸா என்பவர் நம்பகமானவராக இருந்தாலும், அவர் எந்த நபித்தோழரிடமிருந்தும் அறிவித்ததில்லை, அவரது அறிவிப்புக்கள் தாபிஈன்களிடமிருந்தே வந்திருக்கின்றது  என்று அஹ்மத் ஷாகிர் அவர்கள், அவர்களது முஸ்னத் அஹ்மதின்  ஹதீஸ் ஆய்வில் குறிப்பிட்டுள்ளதோடு, அது முள்தரிப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று கதாதா அவர்கள் வழியாக ஸூரா கியாமாவின் கடைசியில் ஸுப்ஹானக பலா’ என்று கூறியதாக தபரியில் வந்திருப்பதும் முர்ஸல் வகையை சேர்ந்த பலவீனமான செய்தியாகும். எனவே இப்படி சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை. அடுத்து இது அறிவிப்பாளர் தொடரிலும், கருத்திலும் முரண்பட்டிருக்கும் முள்தரிப் என்பதுடன் ஒன்றை ஒன்று பலப்படுத்த முடியாத மிகவும் பலவீனம் என்ற தரத்தில் வரக்கூடியது என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.

அடுத்து இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ‘ஸூரா கியாமாவை ஓதி முடித்தால் ஸுப்ஹானக பலா என்று கூறுவார்கள்’ என்று இப்னு அபீ ஹாதிம் அவர்கள் பதிந்துள்ளார்கள். அதன் அறிவிப்பாளர் தொடர் நம்பகமான அறிவிப்பாளர்களைக் கொண்டிருந்தாலும், ஸுப்யானுஸ் சவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ‘அபூ அஹ்மத் அஸ்ஸுபைரீ அவர்கள்’ ‘ஸுப்யான் விடயத்தில் அதிகம் தவறுவிடுபவர்’ என்று அஹ்மத் இமாமவர்களும், ‘அவருக்கு பல சந்தேகத்திற்கிடமான செய்திகள் இருக்கின்றன’ என்று அபூ ஹாதிம் அவர்களும் கூறியுள்ளனர். (தஹதீபுல் கமால்)

எனவே இது இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் ஒரு செயலாக இருப்பதோடு அதிலும் எதோ ஒரு குறைபாடு இருப்பது தெரிகின்றது. (அல்லாஹு அஃலம்)

ஸூரதுத்  தீனின் விளக்கம் முடிவுற்றது அல்ஹம்து லில்லாஹ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *