بسم الله الرحمن الرحيم

سورة البلد

ஸூரதுல் பலத்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்:    பலத்(நகரம்)

இறங்கிய காலப்பகுதி:    மக்கீ

வசன எண்ணிக்கை:    20

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

 لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ‏

 لَاۤ     இது ஒரு எதிர்கால செயலை மறுப்பதற்கு பாவிக்கப்படும் ஒரு எழுத்து, ஆனால் இங்கு அதிகப் படுத்தப்பட்டுள்ளது        اُقْسِمُ     சத்தியம் செய்கிறேன்,      هٰذَا  ‏   இது     الْبَلَدِ     நகரம்  

(நபியே!) இந்த (மக்கா) நகரத்தின்மீது நான் சத்தியம் செய்கிறேன். (90:1)

  • இந்த வசனத்தில் வரக்கூடிய லா என்பது இந்த இடத்தில் எதிர்கால வினையை மறுப்பதற்காக வந்ததல்ல, மாறாக சத்தியத்தை உறுதிப்படுத்துவதற்காக அதிகப்படியாக கொண்டுவரப்பட்டதாகும். இது அல்குர்ஆனில் பல இடங்களில் பாவிக்கப்பட்டுள்ளதாகும்.

فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِۙ‏‏    நட்சத்திரங்கள் (விழுந்து) மறையுமிடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.75,    وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ‏     நீங்கள் அறிந்திருந்தால், நிச்சயமாக இது மகத்தானதொரு சத்தியமென்பதைத் தெரிந்துகொள்வீர்கள். (56:75,76)

அடுத்து, இந்த வசனத்தில் இந்த நகரம் என்பதன் மூலம் நாடப்படுவது ‘மக்கா’ என்ற நகரமாகும், ஏனெனில் நபியவர்கள் மக்காவில்தான் பிறந்து வளர்ந்தார்கள். அந்த நகரமே அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட நகரமாகும்.

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏   (இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான். பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர்வழியாகவும் இருக்கின்றது. (3:96)

اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِىْ حَرَّمَهَا      “நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் இரட்சகனை நான் வணங்குவதைத்தான்; அவன் எத்தகையவனென்றால், இதை அவன் புனிதமாக்கிவைத்துள்ளான்; …… (27:91)

‘அபூ ஷுரைஹ்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  ‘இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித(நகர)மாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே இரத்தத்தை ஓட்டுவதோ, இதன் மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது. இறைத்தூதர் இங்கு (ஒரு சிறு) போரிட்டதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், (அவர் தெரிந்து கொள்ளட்டும்) நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டுமே) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதிக்கவில்லை என்று அவரிடம் கூறுங்கள். எனக்குக் கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. (இச்செய்தியை இங்கே) வராதிருப்பவர்களுக்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’  (புஹாரி:104, முஸ்லிம்)

 وَاَنْتَ حِلٌّ ۢ بِهٰذَا الْبَلَدِۙ‏

وَاَنْتَ    நீர்,       حِلٌّ     அனுமதிக்கப்பட்டவர், தங்கியிருப்பவர்,     بِهٰذَا الْبَلَدِۙ‏    இந்நகரத்தில்

இந்நகரத்தில் (போர்செய்வது சற்று நேரம் உமக்கு ஆகுமாக்கப்பட்டதாக இருக்க) நீர் தங்கியிருக்கும் நிலையில், (90:2)

இந்த வசனத்தில் ‘ஹில்லுன்’ என்ற  சொல்லைக் கொண்டு என்ன நாட்டப்படுகின்றது என்பதில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன; சிலர் ‘அனுமதிக்கப்பட்டவர்’ என்றும், சிலர் ‘தங்கியிருப்பவர்’ என்றும் கூறுகின்றனர். அதிகமான குர்ஆன் விரிவுரையாளர்கள் அனுமதிக்கப்பட்டவர் என்ற கருத்தையே கூறுகின்றனர். என்றால் ‘யுத்தம் செய்து, இரத்தம் ஓட்டப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டிருந்த மக்கமா நகரம்,  நபியவர்களுக்கு சிறிது நேரம் யுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டது’ என்று அருத்தம், இது ஆதாரத்திற்கு உற்பட்டதே. (முன்னால் பதியப்பட்ட புஹாரி 104 வது இலக்க நபிமொழி)

சில விரிவுரையாளர்கள், தங்கியிருப்பவர் என்று கூறுகின்றனர், என்றால் நபியவர்கள் மாக்கவில்தான் பிறந்து தங்கியிருந்து நபித்துவத்தை பெற்று, அழைப்புப் பணியிலும் ஈடுபட்டார்கள். இந்த ஸூரா மக்கா காலப்பகுதி ஸூராவும் கூட.

முதல் கருத்துப்படி ‘எதிர்காலத்தில் நபியவர்கள் மக்காவை யுத்தம் புரிந்து வெற்றிகொள்வார்கள் என்ற முன்னறிவிப்பும், நபிகளாருக்கு ஆறுதல் கூறும் ஒரு செய்தியாகவும் இருக்கும்.

இரண்டாவது கூற்றுப்படி, மக்காவின் சிறப்பை அதிகரிக்கச் செய்யும், ஏனெனில் மக்காவில் அல்லாஹ்வின் முதல் ஆலையம் ‘கஃபா’ இருப்பதும், அடுத்து நபியவர்கள் அங்கு இருந்தார்கள் என்பதும்.

இந்த இரண்டு கருத்துக்களையும் பதிவு செய்த இமாம் ஷன்கீதி அவர்கள், இரண்டாவது கருத்தையே தேர்வு செய்கிறார்கள், அதற்கு அவர்கள் பல காரணங்களையும் பதிவு செய்கிறார்கள்.

நபியவர்கள் மக்காவில் இருப்பதென்பது மக்காவின் சிறப்பைக் கூட்டும், அதுவே மக்காவாசிகள் தண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும் காரணியாகும்.

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏    நீர் அவர்களுக்கு மத்தியிலிருக்கும் நிலையில், அல்லாஹ் அவர்களை (ஒரு போதும்) வேதனை செய்பவனாக இல்லை, இன்னும் அவர்கள் பாவமன்னிப்பைக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. (8:33)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூ ஜஹ்ல், ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!’ என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! அறியமாட்டார்கள்’ எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன. (புஹாரி:4649,முஸ்லிம்)

அடுத்து, நபியவர்கள் அங்கு இருக்கும் போதே பல சோதனைகளை சந்தித்து, பொறுமையும் காத்தார்கள், கஃபாவுக்கு பக்கத்தில் தொழ முடியவில்லை,தாயிபுக்கு அழைப்புப் பணிக்காக சென்றார்கள், சோதனைகளுக்கு முகம் கொடுத்து, பொறுமை காத்தார்கள், அல்லாஹ் மலக்கை அனுப்பி உதவி செய்தான், இந்த செய்திகளே பின்னால் வரும் ‘மனிதனை நாங்கள் கஷ்டத்தில் படைத்துள்ளோம் (90:4) ஆகிய வசனத்திற்கு மிக பொருத்தமாக இருக்கும். உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றான் என்றிருந்தாலும், சத்தியம் செய்து சொல்லும் அளவுக்கு நபிகளார் சந்தித்த கஷ்டங்கள் தகுதியானதாக இருக்கும்.அல்லாஹ் மிக அறிந்தவன் (அல்வாஉல் பயான்)

 وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏

وَ      சத்தியம் செய்வதற்காக பாவிக்கப்படும் ஒரு எழுத்து,     وَالِدٍ     தந்தை,    مَا  ஒன்று என்று அருத்தம்,          وَلَدَ ۙ‏     அவர் பெற்றெடுத்தார்

தந்தையின்மீதும் பிறந்தோ(ராகிய சந்ததியின)ரின் மீதும் சத்தியமாக, (90:3)

இந்த  வசனத்தில்  வரும் ‘மா’ என்ற எழுத்து ‘மறுக்கும்’ கருத்தில் பாவிக்கப்பட்டதா, அல்லது ‘ஒன்று’ என்ற கருத்தில் பாவிக்கப்பட்டதா என்று கருத்துவேற்றுமை பட்டுள்ளனர்.

முதல் கருத்துப்படி, பெர்றேடுத்தவர், பெர்றேடுக்காத ஒவ்வொருவர் மீதும் சத்தியமாக’ என்று வரும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த கருத்திலேயே விளக்கம் செய்தார்கள்.’குழந்தை பாக்கியம் உள்ளவரும், பாக்கியம் இல்லாதவரும்’ என்று அருத்தம். (இப்னு கஸீர்)

இரண்டாவது கூற்றுப்படி, ‘பெற்றோரின் மீதும் பிறந்தவர்கள் மீதும் சத்தியமாக’ என்று வரும்.

இந்த அடிப்படையில் ‘ஆதம் நபியும், அவரது சந்ததிகளும் நாட்டப்படும்’ என்று சிலரும் (இதனையே இப்னு கஸீர் ரஹ் அவர்கள் பொருத்தமானது என்று கூறுகின்றார்கள். ‘ஏனெனில் இந்த அத்தியாயத்தில் வசிப்பிடம் (உம்முல் குரா) மக்காவை கூறிய அல்லாஹ் அடுத்து வசித்தவரான (அபுல் பஷார்) மனித இனத்தின் தந்தை ஆதாமையும் அவரது பிள்ளைகளையும் குறிப்பிடுகின்றான்’,

அடுத்து, ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளும் நாடப்படுவர் என்று கூறியுள்ளனர். இந்த கருத்தை இப்னு ஜரீர் ரஹ் அவர்கள் தேர்வு செய்தர்கள், இதுவும் இடம்பாடானதே. (இப்னு கஸீர்)

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْ كَبَدٍؕ‏

لَقَدْ   நிச்சியமாக, உறுதியாக,     خَلَقْنَا    நாம் படைத்தோம்,    الْاِنْسَانَ     மனிதன்,     فِىْ كَبَدٍؕ‏     சிரமத்தில்

திட்டமாக நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். (90:4)

இந்த வசனத்தில் ‘கபத்’ என்ற சொல்லைக் கொண்டு நாடப்படுவது என்ன என்பதில் பல கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.

‘தாயின் வயிற்றில் நிலைத்திருப்பவனாக’ என்றும், ‘நேர்த்தியான, உறுதியானவனாக’ என்றும், பதியப்பட்டுள்ளது. இந்த கருத்துப்படி பின்வரும் வசனங்களை போன்று விளங்கலாம்.

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ       நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (95:4)

يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏     மனிதனே!  கொடையாளனாகிய உமதிரட்சகனுக்கு மாறு செய்ய உன்னை ஏமாற்றியது எது?6,     الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ‏       (உமதிரட்சகனாகிய) அவன் எத்தகையவனென்றால், உன்னைப் படைத்து பின்னர் உன்னை ஒழுங்காக அமைத்து (உன் தோற்றத்தை) சரியாக ஆக்கினான். (82:6,7)

அதேபோன்று, ‘கஷ்டப்படும் நிலையில்’ என்றும் சிலர் கூறுகின்றனர், இந்த கருத்தையே இப்னு ஜரீர் போன்றவர்கள் தேர்வு செய்தார்கள். (இப்னு கஸீர்)

இந்த கருத்துப்படி பின்வரும் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் புரியலாம். (அல்வாஉல் பயான்)

يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِ‌ۚ‏     மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றாய்; பின்னர் (மறுமையில்) அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய். (84:6)

பின்வரும் வசனங்களை பார்க்கும் போது இந்த கருத்து மிகவும் பொருத்தமாக விளங்குகின்றது, ஏனெனில் தான் நினைத்த அடிப்படையில் கஷ்டப்பட்டு பல காரியங்களில் ஈடுபடும் மனிதன், தன்னை தட்டிக்கேற்க யார்தான் இருக்கின்றான் என்ற மமதையிலேயே வாழுகின்றான். அந்த மனிதனது சிந்தனைப் போக்கே பின்னால் கண்டிக்கப்படுகின்றது. (அல்வாஉல் பயான்) (அல்லாஹு அஃலம்)

اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ‌ ۘ‏

اَ    கேள்வி கேட்பதற்காக பாவிக்கும் ஒரு எழுத்து,      يَحْسَبُ    எண்ணுகின்றான்,     اَنْ لَّنْ يَّقْدِرَ     ஆற்றல் பெறவே மாட்டான்,      عَلَيْهِ         தன்மீது         اَحَدٌ         ஒருவன்

 ‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா? (90:5)

يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ؕ‏

يَقُوْلُ    கூறுகின்றான்,      اَهْلَكْتُ    நான் அழித்தேன்,    مَالًا     செல்வம்,    لُّبَدًا ؕ‏     அதிகமான

 “ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான். (90:6)

 اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗۤ اَحَدٌ ؕ‏

اَيَحْسَبُ    எண்ணுகின்றானா,      لَّمْ يَرَهٗۤ     அவனைப் பார்க்கவில்லை,    اَحَدٌ ؕ‏    ஒருவன்

யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா?  (90:7)

இந்த வசனங்கள் மூலம் மனிதனது பலவீனமும், அவன் தவறு செய்வதற்கான காரணமும் எடுத்துக்காட்டப்படுகின்றது, அதுதான், ‘என் மீது யாரும் அதிகாரம் செலுத்த முடியாது, என்னைப் பார்க்க யாரும் இல்லை’ என்ற சிந்தனை, மாறாக மனிதன் மீது அதிகாரம் செலுத்த, அவனை கண்காணிக்க, மறுமையில் அவனை விசாரிக்க அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கின்றான், என்பதை மனிதன் உணர வேண்டும். இதற்காகவே அடுத்த வசனங்களில் ‘மனிதன் நினைத்த அடிப்படையில் வாழ, நடக்க மனித உறுப்புக்களில் எது காரணமாக இருந்ததோ அதனை படைத்தவனையும், வாழ வழிகாட்டிக் கொடுத்தவனையும் நினைவூட்டுகின்றான்.

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏

اَلَمْ نَجْعَلْ     நாம் ஆக்கவில்லையா?,    لَّهٗ     அவனுக்கு,    عَيْنَيْنِۙ‏    இரு கண்கள்

அவனுக்கு நாம் இரு கண்களையும்  (90:8)

 وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ‏

وَلِسَانًا    இன்னும் ஒரு நாவு,    وَّشَفَتَيْنِۙ‏     இன்னும் இரு உதடுகள்

ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? (90:9)

இந்த வசனங்கள் மூலம் மனிதனுக்கு பார்ப்பதற்கு இரண்டு கண்கள், நினைத்ததையெல்லாம் பேசுவதற்கு ஒரு நாவு, இரண்டு உதடுகள் என்று கூறி மனிதனுக்கு அல்லாஹ் செய்த அருற்கொடைகளை நினைவூட்டுகின்றான்.

 وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏

وَهَدَيْنٰهُ    இன்னும் அவனுக்கு வழி காட்டினோம்,     النَّجْدَيْنِ‌ۚ‏     இரு பாதைகள்

மேலும், (நன்மை, தீமையின்) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம்.  (90:10)

உலகில் பிறந்து வாழும் மனிதனை சோதிப்பதற்காக அல்லாஹ் நல்வழி, தீய வழி, என்ற இரண்டு வழிகளை மனிதனுக்கு காட்டிக் கொடுத்திருக்கின்றான். இதற்கு நிகரான வசனங்களாக பின்வரும் வசனங்களை நோக்கலாம்;

اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ  نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًۢا بَصِيْرًا‏    நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.      اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا‏   நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம், அல்லது நன்றி மறுப்பவனாகவும் இருக்கலாம்.  (76:2,3)

فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا ۙ‏   பின்னர், அதற்கு அதன் தீமையையும் அதற்குரிய நன்மையையும் உணர்த்தினான். (91:8)

மனிதன் மீதுள்ள கடமை என்னவெனில் ‘சிந்திக்கும் திறனை வைத்து படைத்தவனைப் புரிந்து, தனக்கு விரும்பிய பிரகாரம் வாழாமல், படைத்தவனுக்கு விருப்பமான முறையில் வாழ்வதே. அதற்காகத்தான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி மனிதனுக்கு நல்வழி அடிப்படையில் வாழக் கற்றுக்கொடுத்தான்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வந்த எந்த நபியாக இருந்தாலும் அவர் மீதுள்ள கடமை ‘தனது சமூகத்துக்கு நல்லது என்று அவர் அறிந்ததை கற்றுக் கொடுப்பதும், தீயது என்று அறிந்ததை எச்சரிப்பதுமாகும்’ (முஸ்லிம்)

எனவே இந்த அத்தியாயத்திலும் நல்லவனாக வாழ்வது எப்படி என்பதனை சில உதாரணங்கள் கொண்டு அல்லாஹ் தொடர்ந்து தெளிவுபடுத்துகின்றான்;

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ‏

فَلَا اقْتَحَمَ    அவன் கடக்கவில்லை,    الْعَقَبَةَ ۖ‏     அகபா (பாதை, மலை)

எனினும், அவன் “அகபா”வைக் கடக்கவில்லை. (90:11)

இந்த வசனத்தில் வரும் ‘அகபா’ என்ற சொல் ‘மலைகளில் காணப்படும் கஷ்டமான பாதை’ என்பதை குறிக்கும், அதேநேரம் இதனைக் கொண்டு நாடப்படுவது என்ன என்பதில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன; சிலர் ‘நரகில் காணப்படும் மலை’ என்றும், சிலர், ‘நரகில் உள்ள எழுபது படித்தரங்கள்’ என்றும், சிலர், ‘நரகில் உள்ள பாதை’ என்றும், சிலர், ‘வெற்றியினதும், நலவினதும் பாதை’ என்றும், சிலர், ‘அதனை அடுத்த வசனங்கள் தெளிவுபடுத்தும் காரியங்கள்’ என்றும் கூறுகின்றனர். (இந்த கூற்றுக்கள் இப்னு கஸீரில் பதியப்பட்டுள்ளன)

இவற்றில் கடைசியான கருத்தையே இமாம் ஷன்கீதி அவர்கள் அல்வாஉல் பயான் என்ற நூலில் தேர்வுசெய்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்; ‘அகபாவைக் கொண்டு என்ன நாடப்படுகின்றது என்பதனை ‘வமா அத்தராக மல் அகபா’ என்ற வசனம் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்தி, பின்னர் விரிவாக்கிவிட்டான், மேலும் அல்குர்ஆனில் வந்திருக்கும் ஒவ்வொரு ‘வமா அத்தராக’ என்ற வசனமும், பின்னால் தெளிவுபடுத்தப்பபட்டுள்ளன.

وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏      (நபியே!) தட்டக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?3,    يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏       அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப்போல் ஆகிவிடுவார்கள்.4,     وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏      இன்னும் மலைகள் கொட்டப்(பட்டு சாயம் ஏற்றப்)பட்ட பஞ்சைப்போன்று ஆகிவிடும். (101:3,4,5)

اَلْحَـآقَّةُ ۙ‏     உறுதியாக நடந்தேறக்கூடியதா(ன மறுமைநாளா)னது-1,      مَا الْحَـآقَّةُ‌ ۚ‏     உறுதியாக நடந்தேறக்கூடியது என்ன?2,    وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحَــآقَّةُ ؕ‏      உறுதியாக நடந்தேறக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?3,    كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌۢ بِالْقَارِعَةِ‏     ஸமூது (கூட்டத்தினரும், ஆது) கூட்டத்தினரும் (இதயங்களைத்) திடுக்கிடச் செய்யக்கூடியதை (மறுமைநாளை)ப் பொய்யாக்கினர். (69:1-4)

மேலும், இங்கே ‘அகபா’ என்பதற்கு விளக்கமாக ‘அடிமையை விடுதலை செய்வது, அநாதை, ஏழைக்கு உணவளிப்பது போன்றவை குறிப்பிடப்படுவதில், கட்டாயம் செலவழிக்க வேண்டிய அவசியத்திற்கான வழிகாட்டல் இருக்கின்றது, மாறாக,(“ஏராளமான பொருளை நான் அழித்திருக்கிறேன்”90:6) என்ற வசனத்தில்  மனிதன் உண்மைக்கு புறம்பாக வாதிடுவது போன்றல்ல. (அல்வாஉல் பயான்)

وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْعَقَبَةُ ؕ‏

وَمَاۤ     இங்கே எது? என்ற கருத்தில் பாவிக்கப்பட்டுள்ளது,   اَدْرٰٮكَ    உமக்கு அறிவித்தது,     مَا      என்ன?,     الْعَقَبَةُ ؕ‏      அகபா  (பாதை, மலை)

(நபியே!) “அகபா” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?  (90:12)

அடுத்த வசனங்களில் அகபாவுக்கான விளக்கங்கள் வருகின்றன.

 فَكُّ رَقَبَةٍ ۙ‏

فَكُّ    விடுதலை செய்தல்,    رَقَبَةٍ ۙ‏     ஓர் அடிமை,   

(அது தான்) ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும். (90:13)

 اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ ۙ‏

اَوْ    அல்லது,     اِطْعٰمٌ     உணவளித்தல்,     فِىْ يَوْمٍ     ஒரு நாளில்,     ذِىْ ‏           உடைய என்ற கருத்து கொண்டது,      مَسْغَبَةٍ     பசி

அல்லது பசியுடைய நாளில் உணவளித்தலாகும். (90:14)

 يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ ۙ‏

يَّتِيْمًا     ஓர் அனாதை,    ذَا       உடைய,      مَقْرَبَةٍ    ‏    உறவினர்

 நெருங்கிய உறவுடைய ஒரு அநாதைக்கு. (90:15)

اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ‏

اَوْ     அல்லது,    مِسْكِيْنًا     ஓர் ஏழை,     ذَا ‏      உடைய,        مَتْرَبَةٍ     வறுமை, தேவை

அல்லது வறுமை உடைய  ஏழைக்கு (உணவளிப்பதாகும்.) (90:16)

இந்த வசனங்களில்   கூறப்பட்டுள்ள நற்காரியங்களுள் முதன்மையானது ‘அடிமையை உரிமை விடுவதாகும்’, நபிகளார் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்கு வந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றே அடிமை முறைமையாகும். யுத்த களங்களில் கைதுசெய்யப்படுவோர் இப்படி பயன்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்வதை இஸ்லாம் மிக முக்கிய வணக்கமாகவும், சில குற்றங்களுக்கு பரிகாரமாகவும், நரக விடுதலைக்கான வழியாகவும் காட்டுகின்றது, அந்த வகையில் அது முக்கியமான ஒரு அகபா என்பதை புரியலாம், அதற்கான சில ஆதாரங்கள் வருமாறு;

சத்தியத்தை முறித்தவருக்கும் (5:79), தன் மனைவியை வெறுத்த நிலையில் தன் தாய்க்கு ஒப்பாக்கி (ளிஹார்) செய்யும் கணவருக்கும் (58:03), தவறுதலாக ஒருவரை கொலை செய்தவருக்கும்(4:92) குற்றப்பரிகாரமாக (காப்பாராவாக) இஸ்லாம் ஆக்கியுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அடிமையை எவர் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான். அவருடைய மர்ம உறுப்புக்கு பதிலாக இவருடைய மர்ம உறுப்பையும் விடுதலைசெய்யும் அளவுக்கு விடுதலை செய்வான்.  (புஹாரி: 6715, முஸ்லிம்)

அடுத்த ஒன்றாக ஏழைகளுக்கு உணவளிப்பதை இந்த அத்தியாயம் கூறுகின்றது, இதுவும் சுவன வாசிகளின் பண்பாக கூறப்பட்ட ஒன்றாகும்.

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏    மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (76:8)

இந்த நல்ல செயலும் சத்தியத்தை முறித்தவருக்கு பரிகாரமாகவும் (5:79), மக்காவின் புனித எல்லையில் வேட்டையாடியவருக்கு பரிகாரமாகவும் (5:95), நோன்பு பிடிக்க முடியாத வயோதிபர்கள், குணப்படுத்த முடியாத நோயாளிகள் நோன்புக்கு பகரம் கொடுக்கவேண்டிய ஒன்றாகவும்  (2:184), தன் மனைவியை வெறுத்த நிலையில் தன தாய்க்கு ஒப்பாக்கி (ளிஹார்) செய்யும் கணவருக்கு (58:03) பரிகாரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

அடுத்து அனாதைக்கு உணவளிப்பதும் ஒரு அகபா (வழியாக) கூறப்பட்டுள்ளது, அநாதை எனும் போது; தந்தையை இழந்த, வயதுக்கு வராத பிள்ளைகளை குறிக்கும். அவர்கள் இளமை பருவத்தை அடைந்துவிட்டாலோ, அல்லது தந்தை இருக்க, தாயை இழந்தாலோ அநாதை என குறிக்கப்படமாட்டார்கள்.

அடுத்து இந்த வசனத்தில், ‘நெருங்கிய உறவாகிய அநாதை; என்று குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது, பொதுவாக தர்மங்களை உறவுகளுக்கு செய்வதில் இரண்டு நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது, ஒன்று தர்மம் செய்தல், மற்றது, குடும்ப உறவை சேர்ந்து நடத்தல் என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் அவர்களுக்கு  கூறினார்கள்: உனது கணவரும், பிள்ளைகளுமே நீ தர்மம் செய்வதற்கு மிகவும் தகுதியானவர்கள்.‘ (புஹாரி:1462)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார்கள். நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால்(ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி(ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது’ எனக் கூறினார்கள். (புஹாரி:1466, முஸ்லிம்)

அடுத்து மிஸ்கீன், பகீர் என்பதைக் கொண்டு நாடப்படுவது என்ன என்பதை நோக்குவோம்; இந்த இரண்டு சொற்களும் வெவ்வேறாக பாவிக்கப்படும் போது ‘ஏழை’ என்ற பொது கருத்தில் பாவிக்கப்படும், அவ்விரண்டும் ஒரே இடத்தில் பாவிக்கப்பட்டால் சிறிய வித்தியாசம் ஏற்பாடும், இரண்டில் ஓன்று பாவிக்கப்பட்டால் அடுத்ததையும் சேர்த்துக்கொள்ளும். எனவே இங்கு இரண்டும் நாடப்படும்.இரண்டும் ஒரே இடத்தில் பாவிக்கப்பட்டால்; ‘மிஸ்கீன் என்பது; போதிய வருமானம் இல்லாதவர்’ என்றும், ‘பகீர் என்பது; வருமானமே இல்லாதவர்’ என்றும் பொருல்படும். இதற்கு சிறந்த ஆதாரமாக பின்வரும் செய்தியை நோக்கலாம்

; اَمَّا السَّفِيْنَةُ فَكَانَتْ لِمَسٰكِيْنَ يَعْمَلُوْنَ فِى الْبَحْرِ     அந்தக் கப்பலைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது கடலில் கூலி வேலை செய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது..(18:79)  இங்கு வருமான வழி உள்ளவர்களுக்கே மிஸ்கீன் என்று பாவிக்கப்பட்டுள்ளது, மேலும் நபிகளாரின்;  ‘இறைவா என்னை மிஸ்கீன்களுடன் வாழவைத்து, அவர்களுடனே மரணிக்க செய்வாயாக (திர்மிதி, இப்னு மாஜா விமர்சனத்திற்குறியது), இறைவா பக்ர் எனும் ஏழ்மையில் இருந்து நான் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன்.’ என்ற இரண்டு பிரார்த்தனைகளை எடுக்கலாம்,

இந்த நிலைப்பாடே மாலிக் இமாம் தவிர்ந்த அதிகமான அறிஞர்களின் நிலைப்பாடாகும். அல்லாஹு அஃலம் (மிஸ்கீன் பற்றிய விளக்கம்: அல்வாஉல் பயான்)

ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ‏

ثُمَّ     பிறகு,    كَانَ     அவன் ஆகிவிட்டான்,    الَّذِيْنَ          எப்படிப்பட்டவர்கள்     اٰمَنُوْا      நம்பிக்கை கொண்டார்கள்,       وَتَوَاصَوْا     இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்,    بِالصَّبْرِ     பொறுமையை கொண்டு,    وَتَوَاصَوْا     இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்,     بِالْمَرْحَمَةِ ؕ‏     கருணையை கொண்டு

பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும். (90:17)

 اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏

اُولٰٓٮِٕكَ    இவர்கள்,     اَصْحٰبُ ‏  உடையவர்கள், தோழர்கள்,     الْمَيْمَنَةِ    வலது பக்கம்

இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார். (90:18)

முன்னால் சொல்லப்பட்ட நல்ல பண்புகளுடன் இறை  நம்பிக்கை கொண்டவர்களாகவும் அவர்கள் இருப்பதுடன்,என்ன சோதனை ஏற்பட்டாலும் நமிக்கையை இழக்கக்கூடாது, கொள்கையில் உறுதியும் பொறுமையும் இருப்பதுடன், முஃமின்களுக்கிடையில் அன்பையும் பன்பையும் பேணவேண்டும், அதனை அடுத்தவர்களுக்கு போதிக்கவும் வேண்டும்.  என்பதே இந்த வசனத்தின் படிப்பினை, இப்படிப்பட்டவர்கள் மறுமையில் சுவனவாசிகளுடன் இருப்பார்கள். இறை நம்பிக்கையுடனே நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை, அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا‏   இன்னும், எவர் மறுமையை நாடி அவர் விசுவாசியாக இருக்க, அதற்குரிய முயற்சியையும் அதன் பொருட்டு முயன்றாரோ அத்தகையோர் – அவர்களின் முயற்சி (அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்பட்டதாகும். (17:19)

مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏      ஆண் அல்லது பெண் – அவர் விசுவாசஙகொண்டவராக இருக்க யார் நற்செயலைச் செய்தாரோ, நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம், இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம். (16:97)

 அடுத்து, முஃமின்கள் அவர்களுக்கிடையில் அன்பு காட்டுவதும், அதனை பரிமாறிக்கொள்வதுமே அல்லாஹ்வின் அன்பை பெற்றுத்தரும், மறுமையில் ‘அகபா’ வை கடக்க உதவும் என்பதும் தெளிவாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பு செலுத்துபவர்களுக்கே அல்லாஹ் அன்புகாட்டுகின்றான், (எனவே) நீங்கள் பூமியில் உள்ளவர்களுக்கு அன்பு செலுத்துங்கள், வனத்தில் உள்ளவன் (அல்லாஹ்) உங்களுக்கு அன்புகாட்டுவான். (அஹ்மத்:6494, திர்மிதி: 1924, இந்த அறிவிப்பில் அபூ காபூஸ் என்பவர் இடம் பெற்றுள்ளார்)

யார் மனிதர்களுக்கு அன்பு காட்டவில்லையே அவர்களுக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான். (புஹாரி: 7376,5997, முஸ்லிம்)

وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ؕ‏

وَالَّذِيْنَ      எப்படிப்பட்டவர்கள்      كَفَرُوْا       அவர்கள் நிராகரித்தனர்,     بِاٰيٰتِنَا      நம் வசனங்களை,     هُمْ     அவர்கள்,     اَصْحٰبُ ‏     உடையவர்கள், தோழர்கள்,     الْمَشْــٴَــمَةِ ؕ      இடது பக்கம்

மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார். (90:19)

 عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ

عَلَيْهِمْ     அவர்கள் மீது,     نَارٌ     நெருப்பு,     مُّؤْصَدَةٌ      மூடப்பட்டிருக்கும்

அவர்கள் மீது (எல்லாப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கும்.   (90:20)

இந்த வசனங்கள் மூலம், காபிர்கள் இறைமறுப்பாளர்கள், அவர்கள் இடதுபக்க அணியினர், மறுமைநாளில் அகபாவை கடக்கவும் முடியாது, அவர்கள் நரகில் நுழைவார்கள், அவர்களை நெருப்பு சூழ்ந்து கொள்ளும், அந்த நிலையில் தண்டிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகின்றது,

எனவே இறைநம்பிக்கை இல்லையென்றால் அவர்களது நற்கருமங்கள் மறுமையில் பயனளிக்கப்போவதில்லை என்பது தெளிவு. அதேநேரம் ஒரு இறைமறுப்பாளன் நற்காரியங்கள் பலவற்றை செய்து, மரணத்திற்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவன் இறைமறுப்பில் செய்த அனைத்து செயல்களுக்கும் நன்மை கிடைக்கும், அவன் செய்த தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. இது அல்லாஹ்வின் பெரும் அருளாகும்.

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்க நபிகளாரிடம்; ‘ஜாஹிலிய்ய காலத்தில் பல நல்ல காரியங்களை செய்துள்ளேன், அவைகளுக்கு ஏதும் நன்மை கிடைக்குமா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் : ‘நீ இஸ்லாத்தை ஏற்கும் போது முன்னால் செய்த நற்காரியங்களுடனேயே இஸ்லாத்தில் நுழைகிறாய்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாரிடம்; ‘இப்னு ஜுத்ஆன் அவர்கள் ஜாஹிலிய்ய காலத்தில் விருந்துபசாரம் செய்பவராகவும், இரத்த உறவை சேர்ந்து நடப்பவராகவும், பாதுகாப்பு தேடிவந்தவரை  அனுசரிப்பவராகவும், இருந்துள்ளாரே என்று அவரை புகழ்ந்து, அவருக்கு அது பயனளிக்குமா என்று  கேட்க, நபியவர்கள்; ‘இல்லை, ஏனெனில் அவர் ஒரு போதும் ‘அல்லாஹ்வே மறுமைநாளில் என்னை மன்னித்துவிடு’ என்று கேட்கவில்லையே.’ என்று கூறினார்கள்.  (அஹ்மத்:24892)

அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்திருந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே எனது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் வரை நான் இஸ்லாத்தை ஏற்க உறுதிமொழி வழங்க மாட்டேன்’ என்று கூற, நபியவர்கள்: ‘அம்ரே! இஸ்லாம் என்பது அதற்கு முந்தைய  பாவங்களை போக்கிவிடும் என்பதும்,ஹிஜ்ரத் (அல்லாஹ்வுக்காக சொந்த நாட்டை விட்டு செல்வது) என்பதும் முந்தைய பாவங்களை போக்கும் என்பதும் உமக்கு தெரியாதா?’ என்று கேட்டார்கள். (அஹ்மத்:17827)

ஸூரா பலத் விளக்கவுரை முற்றும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *