ஸூரத்துல் காஷியா விளக்கவுரை

بسم الله الرحمن الرحيم

سورة الغاشية

ஸூரத்துல் காஷியா

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: அல்காஷியா  மூடிக்கொள்ளக்கூடியது (மறுமை நாளின் பெயர்களுள் ஒன்று)

வசனங்கள்: 26

இறங்கிய காலப் பகுதி: மக்கீ

அதன்  சிறப்புகள்:

நபியவர்கள் வெள்ளிக்கிழமை பெருநாட்களில் தொழுகையில் ஓதினார்கள்.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْغَاشِيَةِؕ‏

சொல் விளக்கம்: 

هَلْ   கேள்வி கேட்பதற்காக பாவிக்கும் ஒரு சொல், (ஆ உருபு சத்தம்)  اَتٰٮكَ      உம்மிடம் வந்து விட்டது,   حَدِيْثُ  ஒரு செய்தி,   الْغَاشِيَةِؕ‏   சூழ (மூட)க்கூடியது

சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? (88:1)

இந்த வசனம் மூலம் மனிதர்களை நன்மையைக் கொண்டு அல்லது தீமையைக் கொண்டு சூழ்ந்து கொள்ளும் மறுமைநாள் பற்றிய தகவல் வந்துவிட்டதா என்று அல்லாஹ் நபிகளாரை விழிக்கின்றான், உண்மையில் பல சூராக்களில் மறுமையைப் பற்றி வந்திருக்கும் போது இப்படி கேள்வியாக விழிப்பதென்பது; ‘மறுமையைப் பற்றி வந்திருக்கும் செய்திகளை நினைவுபடுத்தி மறுமையை மறந்து வாழும் மனிதனை எச்சரிப்பதற்கேயாகும். அல்காஷியா என்பதைக் கொண்டு நாடப்படுவது என்ன?  நரகமா, அல்லது பாவிகளை சூழ்ந்து கொள்ளும் தண்டனையா என்று பல கருத்துக்கள் விரிவுரையாளர்கள் மத்தியில் இருந்தாலும், அனைத்து மக்களையும் சூழ்ந்துகொள்ளும் நிகழ்வு என்பதே பொருத்தமானது, ஏனெனில் இந்த சூராவில் நல்லவர்கள் கெட்டவர்கள் இரு சாராரின் மறுமை நிலை பற்றி பேசப்பட்டுள்ளது. (அல்வாஉல் பயான்)

பாவிகளின் மறுமை நிலை;

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ‏

சொல் விளக்கம்: 

وُجُوْهٌ   முகங்கள்,    يَّوْمَٮِٕذٍ    அந்நாளில்,   خَاشِعَةٌ ۙ‏    இழிவடைந்ததாக இருக்கும்.

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். (88:2)

 عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ‏

சொல் விளக்கம்: 

عَامِلَةٌ   வேலை செய்யக்கூடியது ,   نَّاصِبَةٌ ۙ‏    கஷ்டப்படக்கூடியது

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் கஷ்டப்பட்டவையுமாகும். (88:3)

இந்த வசனத்தில் நாடப்படுவது உலகில் கஷ்டப்பட்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்தல் என்பதா, அல்லது உலகில் செய்தவற்றிற்காக மறுமையில் கஷ்டப்படும் என்பதா என்பதில் விரிவுரையாளர்கள் இரு கருத்துக்களை கொண்டுள்ளார்கள்.

உலகில் கஷ்டப்பட்டு வேலை செய்த  முகங்கள்  என்ற வாதப்படி, அவர்களது உலக கஷ்டங்களுக்கு மறுமையில் பயன் கிடைக்காது என்ற அருத்தம் வரும். பின்வரும் குர்ஆன் வசனம் போன்று,

وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا‏  இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம் (25:23)

மறுமையில் கஷ்டப்பட்டு வேலைசெய்யும் முகங்கள் என்ற வாதப்படி தாழ்ந்த முகங்கள் நரகில் கஷ்டப்பட்டு வேலை செய்துகொண்டிருக்கும் என்று அருத்தம் வரும். பின்வரும் குர்ஆன் வசங்களைப் போன்று;

سَاُرْهِقُهٗ صَعُوْدًا ؕ‏   அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன். (74:17)

وَمَنْ يُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۙ‏   ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான். (72:17)

இந்த இரண்டு கருத்துக்களிலும் மறுமையில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் என்பதே இந்த இடத்திற்கு பொருத்தமானது, என பல காரணங்களை முன்வைத்து (அல்வாஉல் பயானில்) இமாம் ஷன்கீதி அவர்கள் பின் வருமாறு கூறுகின்றார்கள்: (சில காரணிகள் மட்டும்)  ஏனெனில் பின்னால் சுவன வாசிகள் பற்றி சொல்வதற்கு இணங்கிப் போகும் நிலை அப்போது தான் வரும். {என்றால் சுவனவாசிகள் கிடைப்பதை பொருத்திக்கொள்ள, பாவிகளோ நரகில் கஷ்டப்படுவார்கள் என்ற வசன உடன்பாடு வரும்}

அடுத்து முந்தைய வசனம், ‘யவ்ம இதின்’ அந்த நாளையில் என்று வந்திருப்பதால் மறுமையில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் என்பதே பொருத்தம்.

அடுத்து இதுவே பல குர்ஆன் வசனங்களுக்கு ஒத்துப் போகின்றது,

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ‏   அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.22,  اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ‌ ۚ‏   தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.23,  وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ‏   ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.24,  تَظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ‏  இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். (72:22-25)

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏  அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். 38,  ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ‏   சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.39,  وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ‏  ஆனால் அந்நாளில் – (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.40,  تَرْهَقُهَا قَتَرَةٌ ؕ‏    அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.41,  اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ   அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.(80:38-42)

………. அல்லாஹு அஹ்லம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆமிலதுன் நாஸிபா என்றால் நஸாறாக்கள் என்று  கூறினார்கள் (புஹாரி)

تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ‏

சொல் விளக்கம்: 

تَصْلٰى    அது நுழையும்,   نَارًا    நெருப்பு,   حَامِيَةً ۙ‏   கடும் சூடானது

கடும் சூடான  நெருப்பில் அவை நுழையும். (88:4)

تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍؕ‏

சொல் விளக்கம்: 

تُسْقٰى அது புகட்டப்படும்,   مِنْ   இருந்து,   عَيْنٍ   ஊற்று,   اٰنِيَةٍؕ‏   கொதிக்கக்கூடியது

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.  (88:5)

அல்லாஹ் கூறுகின்றான்:   هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ‌ۘ‏  அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்). يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍ‌ۚ‏   அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.  (55:43,44)

لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ‏

சொல் விளக்கம்: 

لَـيْسَ    இல்லை,   لَهُمْ   அவர்களுக்கு,   طَعَامٌ   உணவு,  إلا   தவிர,   مِنْ     இருந்து,   ضَرِيْعٍۙ‏    முட்கள் நிறைந்த செடி

அவர்களுக்கு முட்கள் நிறைந்த செடியைத் தவிர, வேறு உணவில்லை. (88:6)

குர்ஆன் விரிவுரையாளர் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: லரீஃ என்பது ஷிப்ரக் என்று அரபியில் அழைக்கப்படும் ஒரு தாவரம், அதனை ஹிஜாஸ் வாசிகள் அது காய்ந்துவிட்டால் லரீஃ என்று அழைப்பார்கள் , அது நச்சுத் தன்மை கொண்டது.

குறிப்பு; நரகம் அது கடும் உஷ்ணமானது என்றால் அதில் எப்படி மரம் முளைக்கும், அது எப்படி பாதுகாப்பாக வளரும், என்ற ஒரு குதர்க்க கேள்வி கேட்கப்படலாம். அப்படி கேட்கப்பட்டால்;

முதல் விடயம், நாம் கண்ணால் காணாத அல்லாஹ்வையே நம்புகிறோம், அவன் சொல்வதை ஏன் நம்பக்கூடாது!

அடுத்து, நரகில் பாவிகளை, அழிந்து உக்கிப்போய்விடாமல் பாதுகாப்பாக தண்டிக்கும் அல்லாஹ்வுக்கு அதில் மரத்தை பாதுகாப்பது பெரிதல்ல,

அடுத்து, இந்த உலகில் இப்ராஹீம் நபியவர்களை அல்லாஹ் நெருப்பில் வைத்தே பாதுகாத்தான் அந்த அல்லாஹ்வுக்கு இது பெரிதல்ல. அல்லாஹ் கூறுகின்றான்:

قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏    “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சாந்தமானதாகவும் ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். (21:69)

அடுத்து, அல்லாஹ்வே, இது இறை மறுப்பாளர்களான அநியாயக்காரர்களுக்கு சோதனை என்று  தெளிவாக கூறிவிட்டான்:

اَذٰ لِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ‏   அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?62,  اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ‏   நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.63,   اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىْۤ اَصْلِ الْجَحِي   மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.64,   طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ‏  அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.65,  فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمٰلِـــٴُـــوْنَ مِنْهَا الْبُطُوْنَ ؕ‏    நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள். (37:62-66)

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍؕ‏

சொல் விளக்கம்: 

لَّا يُسْمِنُ   கொழுக்க வைக்காது,   وَلَا يُغْنِىْ  இன்னும் அது தேவையற்று வைக்காது, مِنْ இருந்து, விட்டும்   جُوْعٍؕ‏    பசி

அது அவர்களைக் கொழுக்கவும் வைக்காது;  பசியையும் தணிக்காது.  (88:6)

நரகவாசிகளுக்கு கொடுக்கப்படும் உணவு அவர்களது பசியை போக்கவுமாது, கொழுக்கச் செய்யவும் மாட்டாது, அதுவே ஒரு தண்டனைதான். அல்லாஹ் கூறுகின்றான்:

مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏  அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.16,    يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏ அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது; ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)

எனவே தான் இந்த நரகிலிருந்து பாதுகாப்பு எடுத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தந்தார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْن اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏ முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.(66:6)

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸிஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.  (புஹாரி:1377, முஸ்லிம்)

மறுமையில் பாவிகளின் நிலைகளையும், அவர்களை மூடிக்கொள்ளும் அம்சங்களையும் சொன்ன அல்லாஹ், நல்லவர்கள் நிலை பற்றியும், அவர்களை சூழவிருக்கும் இன்பங்கள் பற்றியும் சொல்லித் தருகின்றான்.

நல்லவர்களின் மறுமை நிலை (8- 16)

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ‏

சொல் விளக்கம்: 

وُجُوْهٌ    முகங்கள்,    يَّوْمَٮِٕذٍ     அந்நாளில்,   نَّاعِمَةٌ ۙ‏    இன்புற்றிருக்கும்

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். (88:8)

 لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ‏

சொல் விளக்கம்: 

لِّسَعْيِهَا   தன் முயற்சிக்காக,   رَاضِيَةٌ ۙ‏    திருப்தியடைந்திருக்கும்

தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும். (88:9)

 فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏

சொல் விளக்கம்: 

فِىْ جَنَّةٍ     சோலையில்,   عَالِيَةٍۙ‏    உயர்வான

உயர்வான  சுவர்க்கச் சோலையில்-  (88:10)

நல்லவர்களின் முகங்கள் மகிழ்ச்சியுற்றிருக்கும், உலகில் செய்த நலவுகளுக்கு கிடைக்கும் கூலிகளை பொருந்திக்கொண்டதாக, உயர்ந்த சுவனச் சோலைகளில் இருக்கும்.

 لَّا تَسْمَعُ فِيْهَا لَاغِيَةً ؕ‏

சொல் விளக்கம்: 

لَّا تَسْمَعُ   செவியுறாது,    فِيْهَا    அதில்,   لَاغِيَةً ؕ‏    வீணானது

அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை. (88:11)

அந்த சுவனம் எப்படிப்பட்டது, அதில் வீணான பேச்சுக்களை கேட்க முடியாது, ஏனெனில் அது அந்த இடத்துக்கு பொருத்தமற்றது போன்று, நல்லவர்கள் விரும்பவும் மாட்டார்கள் என்பதே, அல்லாஹ் இன்னும் ஒரு இடத்தில் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்;

 لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَاْثِيْمًا ۙ‏,  அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.25,  اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا‏    “ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). (56:25,26)

 فِيْهَا عَيْنٌ جَارِيَةٌ‌ ۘ‏

فِيْهَا    அதில் இருக்கும்,   عَيْنٌ    ஊற்று,    جَارِيَةٌ‌ ۘ‏    ஓடக்கூடிய

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு. (88:12)

 فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ‏

فِيْهَا    அதில் இருக்கும்,    سُرُرٌ   கட்டில்கள் ,   مَّرْفُوْعَةٌ ۙ‏    உயர்வான

அதில் உயர்ந்த கட்டில்கள் உண்டு. (88:13)

 وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۙ‏

சொல் விளக்கம்: 

وَّاَكْوَابٌ   இன்னும் குவளைகள்,    مَّوْضُوْعَةٌ ۙ‏     வைக்கப்பட்டிருக்கும்

(அருந்தக்) குவளைகளும் வைக்கப்பட்டிருக்கும். (88:14)

 وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۙ‏

சொல் விளக்கம்: 

وَّنَمَارِقُ    இன்னும் தலையணைகள்,    مَصْفُوْفَةٌ ۙ‏   வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்

மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள தலையணைளும்-  (88:15)

 وَّزَرَابِىُّ مَبْثُوْثَةٌ ؕ‏

சொல் விளக்கம்: 

وَّزَرَابِىُّ    இன்னும் உயர்ரக விரிப்புகள்,    مَبْثُوْثَةٌ ؕ‏    விரிக்கப்பட்டிருக்கும்

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு. (88:16)

அந்த சுவனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நீர் உற்றுகளும், அதற்கு சூழலாக சாய்ந்திருக்க கட்டில்கள் வேண்டுமா, அல்லிப் பருக குவளைகள் வேண்டுமா,  சாய்ந்து கொள்ள தலையணைகள், கம்பளங்கள் வேண்டுமா ஒரு மனிதனின் உள்ளதை சந்தோஷப்படுத்தும் அனைத்தும் அங்கு இருக்கும் என்பதை அல்லாஹ் சில உதாரணங்கள் கொண்டு சொல்லிக்காட்டுகின்றான்.

சுருக்கம்; கண்ணுக்குக் குளிர்ச்சி சுவன தோப்புக்கள், காதுக்கு இனிமை நீரோடும் ஓசை, நல்ல பேச்சு, உடலுக்கு அமைதி சாய்மானங்கள், நாவுக்கு ருசிக்கும் ஊற்று நீர், அனைத்தையும் கொண்ட உள திருப்தி இப்படி அனைத்தையும் கொண்டதே சுவனம், இன்னும் ஒரு வார்த்தையில் சுவன இன்பத்தை பற்றி சொல்வதானால்; அது உலகில் எந்த நாவாலும் வர்ணிக்க முடியாத, எந்த கண்ணும் கண்டிராத, எந்த காதுகளும் ரசித்திடாத, எந்த உள்ளத்திலும் ஊசலாட்டம் பெறாத  இன்பங்களாகும். மனிதன் எதை வரும்புவானோ, எதை கேட்பானோ அதுவெல்லாம் கிடைக்கும் இடம்.  அல்லாஹ் கூறுகின்றான்:

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏   அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

 نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ لَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ ؕ‏     “நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது – அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.31 “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (41:31,32)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ‘எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்’ என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். (புஹாரி:3244)

அடுத்து அல்லாஹ், மனிதர்கள், குறிப்பாக இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் பொருட்டு, சிந்திக்க தூண்டுகின்றான். படைத்தவன் அல்லாஹ்வை புரிந்துகொள்வதற்காக இஸ்லாம் காட்டும் மிகவும் சிறந்த வழிமுறையே படைப்பினங்களில் சிந்தனையை செலுத்துவதுதான்.

اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ

சொல் விளக்கம்: 

اَفَلَا يَنْظُرُوْنَ    பார்க்கமாட்டார்களா?,   اِلَى   பக்கம்,   الْاِبِلِ    ஒட்டகங்கள்,    كَيْفَ    எவ்வாறு,    خُلِقَتْ‏   அது படைக்கப்பட்டுள்ளது

(நபியே!) ஒட்டகங்களை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- (88:17)

ஒட்டகத்தை அல்லாஹ் ஏன் எடுத்துக்காட்ட வேண்டும்!, அது அல்குர்ஆன் இறங்கிய காலத்தில் இருந்த மக்களான அரபுகளுக்கு மிக நெருக்கமான மிருகமாகும், அவர்களது வாழ்க்கையோடும், உணவு பழக்கங்களோடும், அதன் பாலை குடிப்பதன் மூலமும், அதன் தோலை ஆடையாக பயன் படுத்துவதன் மூலமும், ஊரில் இருந்தாலும், பயணம் போனாலும் அவர்களுடனே தொடர்புபட்டிருந்த மிருகம், அது போன்று அந்த கால மக்களுடன் எந்த மிருகமும் தொடர்புபட்டிருக்கவில்லை. அதுமட்டுமல்ல இந்த நவீன விஞ்சான உலகில் பல ஆச்சர்யத்தக்க அற்புதங்களை தன்னகத்தில் வைத்திருக்கும் ஒரு மிருகமாகவே அது இருக்கின்றது. எனவே பண்டைய நவீன காலங்களுக்கு பொருத்தமான முறையில் அல்லாஹ் சிந்திக்க வழிகாட்டுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:

اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ‏   நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.71,  وَذَلَّـلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا يَاْكُلُوْنَ‏  மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.72,  وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُ‌ؕ اَفَلَا يَشْكُرُوْنَ‏   மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?  (36:71-73)

وَالْاَنْعَامَ خَلَقَهَا‌ ۚ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ‏  கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.5  وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرَحُوْنَ  அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது.6,  وَتَحْمِلُ اَثْقَالَـكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ‌ؕ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ‏   மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன – நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். (16:5-7)

وَاِلَى السَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

சொல் விளக்கம்: 

وَاِلَى   இன்னும் பக்கம்,    السَّمَآءِ   வானம் ,    كَيْفَ    எவ்வாறு,    رُفِعَتْ    அது உயர்த்தப்பட்டுள்ளது

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,  (88:18)

வானத்தைப் பார்த்து சிந்திக்க வழி காட்டுகிறான் அல்லாஹ், அல்குர்ஆன் இறங்கும் போது இருந்த சமூகம் தொடர்பு வைத்திருந்த இன்னொரு படைப்பே இந்த வானம், ஏன், மலை பொழிவதை எதிர்பார்க்க,பாலைவன பயணங்களில் இரவு நேரங்களில் திசை அறிய,  என்று தொடர்பு பட்டிருந்தார்கள். அதே நேரம் இன்றைய நவீன உலகில் ஆச்சர்யமான அற்புதமான ஒரு படைப்பாகவே வானம் இருக்கின்றது என்பதை விஞ்சான ஆய்வுகள் உணர்த்துகின்றன. அல்லாஹ் கூறுகின்றான்

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏   நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.(3:190)

وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

சொல் விளக்கம்: 

وَاِلَى   இன்னும் பக்கம்,     الْجِبَالِ    மலைகள்,    كَيْفَ    எவ்வாறு.    نُصِبَتْ    அது நிறுவப்பட்டுள்ளது

இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,(88:19)

 وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ

சொல் விளக்கம்: 

وَاِلَى    இன்னும் பக்கம்,   الْاَرْضِ    பூமி,    كَيْفَ    எவ்வாறு,    سُطِحَتْ    அது விரிக்கப்பட்டுள்ளது

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)  (88:20)

மலைகளும், பூமியும் அந்த சமூகத்திற்கு நெருக்கமாக இருந்தவைகளே, மக்காவின் அதிகமான பகுதி மலைகளால் சூழப்பட்டதாகவே இருந்தது, இப்படி அந்த சமூகத்துடன் தொடர்புபட்ட, மனிதனால் உருவாக்க முடியாத, நவீன விஞ்சான உலகில் ஆச்சர்யத்தக்க ஆய்வு முடிவுகளை தந்துகொண்டிருக்கும் இந்தப் படைப்புகளைப் பற்றி சிந்தித்து, மனிதன் கண்ணால் கண்டிராத இறைவன் அல்லாஹ் உண்மையானவன் என்றும், அவன் இறக்கிவைத்த அல்குர்ஆன் உண்மையானது என்றும், அது எடுத்துரைக்கும் மரணத்திற்கு பின்னாலான வாழ்க்கை, சுவர்க்கம், நரகம் உண்மை என்றும் ஏற்றுக்கொள்ள வழிகாட்டுகின்றான் அல்லாஹ்.

எப்படி சகோதர்களே படைப்பிணத்தை வைத்து படைத்தவன் அல்லாஹ்வை புரிவது?; ‘உலகில் மனித கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்தவனை காட்டவில்லையா?, அற்பமான மனிதன் உருவாக்கிய ஒரு படைப்பு தயாரித்த கம்பெனி, தொழிற்சாலை, உருவாக்கிய நபரை அடையாளப் படுத்தவில்லையா?, இந்த அற்பமான பொருட்களுக்கும் உற்பத்திகளுக்கும் அடையாளம் தேடும் மனிதனை, மனித சக்திகளால் உருவாக்க முடியாத படைப்பினங்களை பார்த்து படைத்தவனை அடையாளப்படுத்திக்கொள்ள வழிகாட்டுகின்றான் அல்லாஹ்’. எனவே படைத்தவனை மறுத்து இந்த படைப்புகள் இயற்கையானது என்று மனிதன் கூறுவது மடத்தனமும், பைத்தியக்காரத் தனமுமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ‏  நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? 57,  اَفَرَءَيْتُمْ مَّا تُمْنُوْنَؕ‏  (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?58, ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ‏  அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?59, نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ‏  உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.60,  عَلٰٓى اَنْ نُّبَدِّلَ اَمْثَالَـكُمْ وَنُـنْشِئَكُمْ فِىْ مَا لَا تَعْلَمُوْنَ‏  (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).61,  وَلَـقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰى فَلَوْلَا تَذَكَّرُوْنَ‏   முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் – எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?62,  اَفَرَءَيْتُمْ مَّا تَحْرُثُوْنَؕ‏   (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?  ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ‏   அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?63,   لَوْ نَشَآءُ لَجَـعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ‏   நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.64,  اِنَّا لَمُغْرَمُوْنَۙ‏   “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.65,                بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ  ‏   “மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).66,  اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ‏   அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?67,                                         ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ‏   மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?68,  لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ‏   நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?70,  اَفَرَءَيْتُمُ النَّارَ الَّتِىْ تُوْرُوْنَؕ‏   நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?71,  ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِــٴُــوْنَ‏  அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?72,  نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِيْنَ‌ۚ‏   நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.  (56: 57-73)

فَذَكِّرْ  اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ؕ‏

சொல் விளக்கம்: 

فَذَكِّرْ     ஆகவே அறிவுரை கூறு,   اِنَّمَاۤ اَنْتَ    நீங்களோ,     مُذَكِّرٌ ؕ‏    அறிவுரை கூறுபவர்

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். (88:21)

அல்லாஹ்வின் படைப்பினங்களில் சிந்தனையை செலுத்தச் சொன்ன அல்லாஹ், ‘ஆகவே நபியே நீர் அறிவுறை கூறும்’ என்று கூறுவதிலிருந்து, இந்த சூராவின் ஒழுங்கில் சுவர்க்கம் அதன் இன்பம், நரகம் அதன் கொடூரம் சொல்லப்பட்டு, சிந்திப்பதற்கான வழியும் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னர் அறிவுரை செய்யுங்கள் என்று நபிகளாருக்கு சொல்லப்படுகிறது என்றால் திருந்த நினைப்பவனுக்கு இந்த இடமே அறிவுரை பெறுவதற்கும், அல்லாஹ்வை புரிந்துகொள்வதற்குமான  சிறந்த இடம் என்பதை அல்லாஹ் கூறவருகின்றான். இவ்வளவு வழிகாட்டப்பட்டும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்களுக்கு நேர்வழி பாக்கியத்தைக் கொடுப்பது நபிகளாரின் பணியல்ல என்று நபிகளாரை ஆறுதல் படுத்துகின்றான் அல்லாஹ் அடுத்த வசனத்தில்.

இப்படி அல்லாஹ்வின் படைப்பின் விசாலத்தை வைத்து இஸ்லாத்தை ஏற்கும் ‘லிமாம் பின் ஸஹ்லாபா ரலி’ அவர்களின்  செய்தி சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:   நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் (புத்திசாலியான) ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்” என்று கூறினார்கள்.

அந்தக் கிராமவாசி, வானத்தைப் படைத்தவன் யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்” என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்” என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்?” என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்” என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து. இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்” என்று சொன்னார்கள்.

அவர் இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்” என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்” என்றார்கள்.

தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே!” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,உண்மைதான்” என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?” என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்” என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்” என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்” என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்”என்றார்கள்.

பிறகு அந்தக் கிராமவாசி, உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்” என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்” என்று கூறினார்கள். (புஹாரி: சுருக்கமாக,63, முஸ்லிம்; விரிவாக இது முஸ்லிமின் அறிவிப்பு)

لَـسْتَ عَلَيْهِمْ بِمُصَۜيْطِرٍۙ‏

சொல் விளக்கம்: 

لَـسْتَ    நீர் இல்லை,   عَلَيْهِمْ    அவர்கள் மீது,    بِمُصَۜيْطِرٍۙ‏    சாட்டப்பட்டவர் (அதிகாரம் செலுத்துபவர்)

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். (88:22)

 اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ‏

சொல் விளக்கம்: 

اِلَّا    எனினும்,    مَنْ     யார்,    تَوَلّٰى     விலகிச் சென்றான்,     وَكَفَرَۙ‏     இன்னும் நிராகரித்தான்

ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ- (88:23)

 فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَؕ‏

சொல் விளக்கம்: 

فَيُعَذِّبُهُ    அவரை தண்டிப்பான்,    اللّٰهُ     அல்லாஹ்,     الْعَذَابَ    வேதனை,    الْاَكْبَرَؕ‏     மிகப்பெரியது

அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு தண்டிப்பான். (88:24)

இந்த வசனங்கள் ஒரு வகையில் நபிகளாரை ஆறுதல் படுத்துவதே, அல்லாஹ்வை நெருங்குவதற்கான எல்லா வழிகளும் காட்டிக் கொடுக்கப்பட்டும் சத்தியத்தை ஏற்கவில்லையென்றால் அதற்காக தன்னை அழித்துக் கொள்ளும் அளவுக்கு நபியவர்கள் கைசேதப்படத் தேவையில்லை, ஏனெனில் நபியவர்கள் தனது கடமையான ‘எத்திவைத்தல்’ என்பதை சரியாக செய்துவிட்டார்.

அதேநேரம் சத்தியத்தை மறுத்துவிட்டு செல்பவர்களை அல்லாஹ் சும்மாவிடப்போவதுமில்லை, சும்மா தண்டிக்கப் போவதுமில்லை, மாறாக அவனை விசாரித்து, குற்றவாளி என்பதை நிரூபித்து, கடுமையாக தண்டிப்பான். இதனையே அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:’மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாதும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’  (புஹாரி:25, முஸ்லிம் ) முஸ்லிமின் அறிவிப்பில்; ‘நபியவர்கள் இதனை கூறிவிட்டு ‘فَذَكِّرْ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ؕ‏’ என்ற வசனத்தை ஓதினார்கள் என்று வந்துள்ளது.

اِنَّ اِلَيْنَاۤ اِيَابَهُمْۙ‏

சொல் விளக்கம்: 

اِنَّ    நிச்சயமாக,    اِلَيْنَاۤ    நம் பக்கம்,    اِيَابَهُمْۙ‏    அவர்களின் திரும்பிவருதல்

நிச்சயமாக, எங்களளவில்தான் அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. (88:25)

 ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ‏

சொல் விளக்கம்: 

ثُمَّ    பிறகு,     اِنَّ عَلَيْنَا     நிச்சயமாக நம்மீதே,    حِسَابَهُمْ    அவர்களை விசாரிப்பது

பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களை விசாரிப்பதும் இருக்கிறது. (88:26)

இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் இரண்டு விடயங்களை உறுதிப்படுத்தி சொல்கின்றான்,

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்த உலகை பிரிந்து அல்லாஹ்விடமே செல்வார்கள் என்பது, இதுவே மறுமை வாழ்க்கை என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.

அடுத்து, ஒவ்வொரு மனிதனையும் அவனது தகுதிக்கு ஏற்றாற்  போல் அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான் என்பது. இந்த நம்பிக்கையில் வாழ்வது கட்டாயம், அப்படி வாழ்வதே நம்மை நல்லவனாக வாழச் செய்யும். அல்லாஹ் கூறுகின்றான்:

اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ‏   …….நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான். (5:48) இதே கருத்தில்; (3:55, 6:164)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

 وَاِنْ تُبْدُوْا مَا فِىْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ يُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ‌ؕ فَيَـغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏   …..இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் – இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் – அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். (2:284)

இப்னு அபீ முலைகா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ‘(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்’ என்று அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:08) கூறவில்லையா?’ என ஆயிஷா(ரலி) கேட்டார்கள். அதற்க நபி(ஸல்) அவர்கள், ‘அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்துவிடுவான்’ என்று கூறினார்கள்’  (புஹாரி: 103, முஸ்லிம்)

சூரத்துல் காஷியாவின் விரிவுரை முடிவு

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *