இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம் நபி வழி

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம் நபி வழி, எனும் ஹதீஸ் ஆகும்.

الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد

PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்!

இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதில் நபிவழியின் வகிபங்கு!

1- நபிவழியை ஏற்காமல் முஃமீனாக முடியாது.

அல்குர்ஆனை படிக்கும் போது நபிவழியை ஏற்பதன் அவசியத்தை புரியலாம், குறிப்பாக அதை ஏற்றுக்கொண்டவரே உண்மை முஃமின் என்பதை பின்வரும் வசனங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

  • உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்று நடைமுறைப் படுத்தாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)
  • நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (4:59)
  • மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

2- நபிவழியை ஏற்காமல் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான தொழுகை, சகாத், நோன்பு, ஹஜ் போன்றவைகளோ, ஏனைய இஸ்லாமிய சட்டங்களோ பெரும்பாலும் குர்ஆனில் சுருக்கமாகவே சொல்லப்பட்டுள்ளன. எனவே நபிவழியை ஏற்பதன் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்தலாம்.

உதாரணமாக தொழுகையை எடுத்துக் கொண்டால், அதனை நிறைவேற்றும் நேரம், ஒழுங்கு முறை போன்றும்,

ஸகாத்தை எடுத்துக் கொண்டால், எந்தெந்த பொருளுக்கு எப்படி கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் போன்றும்,

ஹஜ்ஜை எடுத்துக் கொண்டால், ஹஜ்ஜின் ஒழுங்கு முறைகள், அதனை மேற்கொள்ள வேண்டிய தினங்கள், தங்க வேண்டிய இடங்கள் போன்றவைகளை சுன்னாவிலே பார்க்க முடியும். எனவே சுன்னாவை புறக்கணித்துவிட்டு இஸ்லாத்தை நடைமுறைப் படுத்துவது சாத்தியமற்றது.

  • ஸஃதுப்னு ஹிஷாம் அவர்கள், ஆஇஷா (ரழி) அவர்களிடம் நபிகளாரின் பண்பாடு சம்பந்தமாக கேட்ட போது; ‘நீங்கள் குர்ஆனை ஓதவில்லையா, நிச்சியமாக நபிகளாரின் பண்பாடு குர்ஆனாக இருந்தது.’ என்று ஆஇஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
  • எனது அனுமதியோடு, பின்பற்றப்படுவதட்கே அன்றி நாங்கள் தூதர்களை அனுப்பவில்லை.  (4:64)
  • (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:07)
  • அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அஸத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஃகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு இப்னு மஸ்ஊத்(ரழி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘ (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் ‘ எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். இப்னு மஸ்ஊத்(ரழி), ‘நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்’ என்று கூறினார். இப்னு மஸ்ஊத்(ரழி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!’ என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது இப்னு மஸ்ஊத்(ரழி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 4886, முஸ்லிம்)

நபிவழி இஸ்லாத்தின் அடிப்படை என்பதற்கு மிகவும் தெளிவான ஒரு சான்று என்றால் ‘நபிகளார் பைதுல் மக்திஸை நோக்கி தொழுததை’ குறிப்பிடலாம். நபிகளாரை அதை நோக்கி தொழுமாறு ஏவிய எந்த ஒரு வசனத்தையும் குர்ஆனிலே பார்க்க முடியாது. அப்படியானால் அது சுன்னாவின் அடிப்படையிலேயே மேட்கொள்ளப்பட்டது என்பதைப் புரியலாம். அல்லாஹ் அல்குர்ஆனில் மாற்றப்பட்டதையே குறித்துக் காட்டுகின்றான்.

  • யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்,  யார் (அவரைப் பின்பற்றாமல்) பின்வாங்குகின்றார் என்பதை அறிவதற்காக வேண்டியே நீங்கள்  முன்னர் முன்னோக்கிய (பைதுல் மக்திஸ் ஆகிய) கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக கடினமாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.  (2:143)
  • பராஃ பின் ஆஸிப்(ரழி) அவர்கள் கூறினார்கள்:   நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில், பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஃபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (கஃபாவை நோக்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள்….. (புஹாரி: 40, முஸ்லிம்)

3- அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம் நபிவழியை தன் வழியாக ஏற்று நடப்பதே.

  • (நபியே! ) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். 32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காபிர்களை நேசிப்பதில்லை. (3:31,32)

4- நபிவழியில் பயணிப்பதே மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும்.

  • எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.  (3:115)
  • யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள் உயிர்த்தியாகிகள் நல்லவர்கள் ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.  (4:69)
  • அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள்.  (புஹாரி: 7280)

5- உலகில் சோதனைகள், அழிவுகள் வராமல் தடுப்பதும் நபிவழியைப் பின்பற்றுவதில் தங்கியுள்ளது.

  • எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (24:63)
  • ஸலமதுப்னுல் அக்வஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரோடு ஒரு மனிதர் இடது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அபோது நபியவர்கள், ‘வலதால் சாப்பிடு’ என்றார்கள். அதற்கவர், ‘என்னால் முடியாது.’ என்று கூறவே, ‘பெருமையைத் தவிர வேறெதுவும் அவரைத் தடுக்கவில்லை, உனக்கு முடியாமலே போகட்டும்.’ என்று கூறினார்கள். (அதன் பிறகு) அவர் கையை வாய் வரை அவர் உயர்த்தவில்லை.  (முஸ்லிம்)

இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ் மறுப்புக் கொள்கை;

நபி வழியை மறுப்பது என்பது நபி (ஸல்) அவர்களை மறுப்பதற்கு சமமாகும். நபிகளார் உயிரோடிருக்கும் போதே அந்த வழிகேடு முளைக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக ‘நபிகளார் மீதே குறை கண்ட ‘சுல்குவைஸிரா’ என்பவனைக் குறிப்பிடலாம். அந்த செய்தியை புஹாரியின் 3610 வது இலக்க ஹதீஸில் பார்க்கலாம். அவனின் வழித் தோன்றல்களே ஹதீஸ் மறுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தினர்.

  • அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறினார்கள்:  நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது ‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த ‘துல்குவைஸிரா’ எனும் மனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடு உண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்” என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரழி), ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டையை தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள்…….. (புஹாரி: 3610)

ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது பல முரண்பாடுகளுடனே வளர்ந்தது.

சிலர் ஒரு பகுதி ஹதீஸ்களை மறுத்தார்கள்.

அபூ பகர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஸகாத் கடமையை மறுத்ததைப் போன்று. அவர்கள் குர்ஆன் வசனத்தை மாத்திரம் தூக்கிப் பிடித்தார்கள், ஸகாத் பற்றி வலியுறுத்தி வந்த ஹதீஸ்களை மறுத்தார்கள்.

  • அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரழி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரழி) தயாரானார் (உமர்(ரழி), ‘லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?’ என்று கேட்டார். அபூ பக்ர்(ரழி), உமரை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்” என்றார். இது பற்றி உமர்(ரழி), ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்றார்கள். (புஹாரி:1399, முஸ்லிம்)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’  (புஹாரி: 25, முஸ்லிம்)

கவாரிஜ்கள் பெரும் பாவத்திற்கான மன்னிப்பு சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை மறுத்தது போன்று. இப்படி ஹதீஸ்களை மறுத்ததனால் ‘அலீ, முஆவியா, அபூமூஸா,  அம்ர் பின் ஆஸ் (ரழி) போன்ற’ நபித் தோழர்களையே காபிராக்கும் நிலை ஏற்பட்டதோடு, பெரும் பாவம் செய்தவர்களை காபிராக்கினார்கள்.

ஷியாக்களும் இவ்வாறே ஹதீஸ்களை மறுத்தார்கள். குறிப்பாக நபித் தோழர்கள் (அபூ பக்ர், உமர், ஆஇஷா, ஹப்ஸா (ரழி) போன்றவர்களின்) சிறப்பு பற்றிய ஹதீஸ்கள், அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் என்று பட்டியலிடலாம். ஒரு வகையில் புஹாரி, முஸ்லிம் ஹதீஸ் கிதாபுகளையே ஏற்கவில்லை எனலாம்.

முஃதசிலாக்களைப் பொருத்தவரை ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் விதி அமைத்து, தன் கொள்கைக்கும், புத்திக்கும், உலக நடப்புக்கும் ஒத்துப் போகாதவைகளை மறுத்து, இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரியதோர் வழிகேட்டை விதைத்து விட்டு சென்றார்கள். எந்தளவுக்கெனில், நல்லவர்கள் என்று அடையாளப் பட்டவர்களும் அவர்களது கொள்கைத் தவறை விளங்காமல் ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள். இன்றுவரை அந்த தாக்கம் இருக்கவே செய்கின்றது.

இவர்கள் மறுத்தார்கள் என்ற வகையில் குர்ஆனுக்கு முரண் என்று மறுத்தவைகள், அல்லாஹ்வின் தகுதிக்கும், நபிகளாரின் தகுதிக்கும், குர்ஆனின் தகுதிக்கும்  அப்பாற்பட்டது என்று மறுத்தவைகள் என்று பட்டியலிடலாம்.

அல்லாஹ்வை மறுமையில் காணமுடியும் என்று வரும் ஹதீஸ்களையும் (புஹாரி:573,806, முஸ்லிம்), பாவிகளுக்கான நபிகளாரின் பரிந்துரை பற்றிய ஹதீஸ்களையும் (புஹாரி:6558, முஸ்லிம்), குர்ஆனுக்கு முரண் என்று மறுத்ததற்கு உதாரணமாக சொல்லலாம்.

சூரியன் பிளந்தது பற்றி வரும் ஹதீஸ்களை (புஹாரி:3636,3638, முஸ்லிம்) நிராகரித்ததை, உலக நடப்புக்கு பொருந்தாது என்று மறுத்ததற்கு உதாரணமாக சொல்லலாம்.

ஒட்டு மொத்தமாக ஹதீஸ்கள் ஆதாரமில்லை, குர்ஆன் மட்டும் போதும் என்று கூறிய ஒரு கூட்டமும், ‘அஹ்லுல் குர்ஆன்’ என்ற போர்வையில் உறுவாகியது. அவர்கள் முர்தத்துகளே.

ஹதீஸ்களை பகுதியாகவோ, முழுமையாகவோ மறுத்த அனைவரும், அதற்கு முன்வைத்த காரணங்கள் பெரும்பாலும் ஒன்றுபட்டதாகவே இருக்கின்றன.

ஹதீஸ்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சந்தேகங்களும், விமர்சனங்களும்; அதற்கான பதில் விளக்கங்களும்;-

  • முதல் சந்தேகம்:-

அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் குர்ஆனில் கூறிவிட்டான்: ‘இந்த புத்தகத்தில்  எதனையும் நாம் பதியாமல் விடவில்லை’ (6:38), எல்லாவற்றுக்கும் தெளிவாகவே உம்மீது இந்த வேதத்தை நாம் இறக்கினோம்’ (16:89) எனவே, குர்ஆனில் அனைத்து தெளிவும் இருக்கும் போது எதற்கு ஹதீஸ் தேவை? என்று கேட்டார்கள். இதனை ஹதீஸ்களை முழுமையாக மறுத்தவர்கள் கேட்டார்கள்.

பதில் விளக்கம்:-

உண்மையில் இந்த வசனங்களை சரியாக புரியத் தவறியதே இந்த சந்தேகங்களுக்கான காரணம். ஏனெனில் முதல் வசனம் நேரடியாக குர்ஆனை குறிக்கவில்லை, மாறாக அது அல்லாஹ்வின் பதிவேட்டையே குறிக்கின்றது. அந்த வசனத்தை முழுக்க வாசிக்கும் போது அதனை தெளிவாக புரியலாம். ” பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (6:38) ”

இரண்டாவது வசனம் குர்ஆனைக் குறித்து கூறினாலும், குர்ஆன் என்பது ஒரு பகுதி அடுத்த பகுதியை தெளிவுபடுத்தக் கூடியது என்ற அடிப்படையில், ஏனைய வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால்  பல இடங்களில் அல்லாஹ் நபிகளாரின் சுன்னாவுடனே அவைகளை விளங்க வேண்டும் என்று தெளிவு படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான் ” இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.” (2:151, 3:164, 4:113…). ஞானம் என்றால் என்னவென்று சிந்தித்தால் நபிவழியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

  • அடுத்து நபி (ஸல்) அவர்கள் கூறும் போது; அறிந்து கொள்ளுங்கள்; எனக்கு குர்ஆனும், அது போன்ற (சுன்னாவாகிய) ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் வயிறு நிரம்பிய நிலையில், தன் சாய்மானத்தில் சாய்ந்திருக்க, ‘உங்களுக்கு குர்ஆன் போதும், அதில் ஹலாலாக கண்டதை ஹலால் என்றும், ஹராம் என்று கண்டதை ஹராம் என்றும் எடுத்துக் கொள்ளுங்கள்.’ என்று கூறும் நிலை வந்துவிடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்; (குர்ஆனில் இல்லாத) கழுதை இறைச்சியும், வேட்டைப் பிராணிகளின் இறைச்சியும் உங்களுக்கு ஹராமாகும்……..என்று கூறினார்கள். (அஹ்மத்: 17174, அபூ தாவுத்: 4604)

அடுத்து அல்குர்ஆன் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் சொல்லித் தருகின்றது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதில் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளதை சுன்னாவே நமக்கு தெளிவுபடுத்தும். உதாரணமாக; தொழுங்கள் என்பதும், ஸகாத் கொடுங்கள் என்பதும்  குர்ஆனின் கூற்று, ஆனால் எப்படி தொழுவது, எப்படி ஸகாத் கொடுப்பது என்று ஹதீஸை  மறுப்போரால் கூற முடியுமா?

அல்லாஹ் குர்ஆனில் ருகூஃ செய்யுங்கள் என்கிறான், ருகூஃ என்னவென்று ஹதீஸை  எடுக்காமல் கூறலாமா?

2 வது அத்தியாயம் 238 வது வசனத்தில் நடுத் தொழுகை’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ஹதீஸை மறுப்போரால் நடுத் தொழுகை எது என்று ஆதாரத்தோடு கூற முடியுமா? இப்படி குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ் இருக்கின்றது, அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளை அல்லாஹ் கூறுகின்றான். இன்னும் விளக்கம் தொடர் கட்டுரையில் பார்க்கலாம்.

  • இரண்டாவது சந்தேகம்:-

குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாக பொறுப்பேற்றுவிட்டான், ஹதீஸுக்கு அந்த உத்தரவாதம் இல்லை என்பதாகும். அதற்கு ஆதாரமாக பின்வரும் வசனம் முன்வைக்கப்பட்டது.

  • நிச்சயமாக நாம் தான்  (வேதமாகிய) உபதேசத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

பதில் விளக்கம்:-

முதலில் நாம் விளங்க வேண்டியது ‘அல்லாஹ் அந்த வசனத்தில் குர்ஆன் என்று குறிப்பிட்டு கூறவில்லை’ மாறாக ‘திக்ர் (அறிவுரை)’ என்றே கூறுகின்றான். அதனை பிரித்து நோக்கியதே இந்த வழிகேட்டுக்கு மனிதன் தள்ளப்பட காரணமாகியது. முன்னால் எடுத்துக் காட்டியது போன்று, அல்லாஹ் தெளிவாக வேதத்தையும், ஹிக்மத்தையும் தந்தோம் என்று கூறும் போது எப்படி இரண்டையும் பிரித்து, ஒன்று பாதுகாக்கப்பட்டது, அடுத்தது பாதுகாக்கப்படவில்லை என்று கூறலாம்.

அடுத்து அல்லாஹ் குர்ஆனிலேயே கூறுவது போன்று, குர்ஆனுக்கு விளக்கமாக நபிகளாரின் சுன்னா இருக்கின்றது என்று கூறும் போது, விளக்கம் பாதுகாக்கப்பட வில்லையெனில், நபிகளாரைக் கொண்டு விளக்கப்பட வேண்டிய குர்ஆனை எப்படி விளங்கலாம். அதை விடவும் இந்த வாதம் ‘குர்ஆனும் பாதுகாக்கப்பட வில்லை’ என்றல்லவா எடுத்துரைக்கின்றது. (அல்லாஹ் பாதுகாப்பானாக) குர்ஆன் சுன்னவுக்கிடையில் இருக்கும் தொடர்பு பற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்; 

  • ‘நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.’ (16:44,64)
  • (நபியே!) அவசரப்பட்டு குர்ஆனை ஓதுவதற்காக உம் நாவை அசைக்காதீர். 17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதுள்ள கடமையாகும்.18. எனவே அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.19. பின்னர், அதனை விளக்குவதும்  நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும். (75:16-19)

முதல் வசனத்தில் திக்ரை தெளிவுபடுத்த நபியை அனுப்பியதாகவும், இரண்டாவது வசனத்தில் தெளிவுபடுத்துவது அல்லாஹ்வின் கடமை என்றும் கூறுகின்றான் என்றால், திக்ர் என்பதைக் கொண்டு அதன் விளக்கமான நபிவழியும் அடங்கும் என்பதனை புரியலாம். எனவே அல்லாஹ் பாதுகாத்தாக கூறும் வஹியின் இரண்டு பகுதியில் ஒன்றை ஏற்று,  ஒன்றை மறுப்பது இரண்டையும் மறுப்பதாகும். மேலும் ஒன்றில் சந்தேகத்தை ஏற்படுத்துவது, அடுத்ததில் தானாகவே சந்தேகத்தை ஏற்படுத்தும்.

மேலும் நபிகளாரின் நாவிலிருந்து சத்தியம் தான் வெளிப்படும், அது மார்க்கமாகும், அவர்கள் மனிதன் என்ற அடிப்படையில் தவறு ஏற்படும்போது அல்லாஹ் உடனே அதை சுட்டிக்காட்டடி, திருத்திவிடுவான். எனவே மார்க்கத்தின் அரைவாசியாக இருக்கும் நபிவழி பாதுகாக்கப்பட வில்லை என்பது முழு இஸ்லாத்தையும் குறை சொல்லும் காபிர்களின் பணியாகும். அல்லாஹ் எம்மைக் காப்பானாக.

  • விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! 2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. 3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. 4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (53:1-4)

சுருக்கம் பாதுகாக்கப்பட்ட முறையில் வித்தியாசம் உள்ளது, பாதுகாக்கப்படவில்லை என்பதே வழி கேடாகும்.

ஹதீஸ்களைப் பாதுகாப்பவருக்கு, பறப்புபவருக்கு நபிகளாரின் விசேட பிரார்த்தனையும் இருக்கும் போது, அது பாதுகாக்கப்படவில்லை என்பது பெரும் வழிகேடே.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எங்களிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டு, அதனை பிறருக்கு எத்திவைக்கும் வரை பாதுகாத்தும் வைக்கின்றாரோ, அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தட்டும். ஏனெனில் அறிவை சுமக்கும் பலர் விளக்கசாளியாக இல்லாமல் இருக்கலாம், மேலும் எத்திவைக்கப்படுபவர் எத்திவைப்பவரை விட விளக்கசாளியாக இருக்கலாம்.’  (அஹ்மத்:21590, அபூதாவுத்:3660)

குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றான், ஹதீஸ் அப்படி அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட வில்லை என்று கூறுவோர் கட்டாயம் சிந்திக்க வேண்டிய ஒரு அம்சம்; ‘குர்ஆன் எப்படி பாதுகாக்கப்பட்டது’ என்பதாகும்!!!

ஏனெனில் நபிகளார் மரணிக்கும் போது இன்று இருப்பது போன்று புத்தக வடிடத்தில் நபிகளார், சரி, பிழை பார்த்து கொடுத்துவிட்டு செல்லவில்லை. மாறாக நபிகளாரின் மரணத்தின் பின்னே, அபூ பகர் (ரழி) அவர்களின் ஆட்சியில், உமர் (ரழி) அவர்களின் மஷூராவுக்கு அமைவாக, ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்கள் முயற்சியால் தொகுக்கப்பட்டதே. அதிலும் தொகுக்கும் போது ஒரு சில வசனங்கள் ஒரு நபித் தோழரிடமிருந்தே பெறப்பட்டது என்றும் பதியப்பட்டுள்ளது. (புஹாரி:4679,7191)

  • இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரழி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரழி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரழி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரழி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரழி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரழி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரழி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரழி) ‘உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்” (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரழி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரழி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.  (புஹாரி:1241)

***** சிந்திக்க வேண்டியது என்னவெனில் நபிகளார் தொகுத்து வழங்காத, நபித் தோழர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆனை எப்படி இறைவேதம் என்று நம்பினோம்!!! ”அல்லாஹ் பாதுகாப்பதாக வாக்களித்ததே” அப்படியானால் ஒரு தகவலை எப்படி ஏற்கவேண்டும் என்ற, அல்லாஹ் ரஸூலின் வழிகாட்டலுக்கு அமைவாக, சிறந்த சமூகம் என்று நபிகளாரால் புகழப்பட்ட சிறந்த சமூகத்தின் முயற்சியினால் பாதுகாக்கப்பட்ட ஹதீஸை பாதுகாக்கப்படவில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய துரோகம். தனது வழிகேட்டு சிந்தனையை பாதுகாக்க ஹதிஸை பலிகடாவாக்கும் ஒரு சதித் திட்டமல்லவா இது.

ஓடு தகவலை ஏற்பதற்கு அல்லாஹ், ரஸூலின் வழிகாட்டல்;- தீர விசாரித்தல், செய்தி சொல்பவனை தேடிப்பார்த்து முடிவெடுத்தல்.

  • முஃமின்களே! பாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.  (49:6)
  • நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு மனிதனுக்கு பொய்யால் போதுமானது, கேள்விப்பட்டதையெல்லாம் (ஆய்வின்றி) அறிவிப்பதே.’ என்று கூறியதாக அபூ ஹுரைரா, உமர் (ரழி) போன்றவர்கள் அறிவித்தனர். முஸ்லிம்)

அடுத்து இஸ்லாத்தின் பாதுகாவலர்களான நபித் தோழர்களும் அறிவிப்பாளரை மையமாக வைத்தே சுன்னாவை ஏற்றும், மறுத்தும் உள்ளார்கள்.

மிக முக்கிய தாபிஇய்யான (நபித் தோழரைக் கண்டவர்) இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் (ஆரம்பத்தில் ஹதீஸுக்காக) அறிவிப்பாளர் தொடரைக் கேட்க மாட்டார்கள். எப்பொழுது குழப்பம் உருவாகி (வழிகெட்ட கூட்டங்கள் உருவாகி) யதோ, அன்றிலிருந்து (யாராவது ஹதீஸ் அறிவித்தால்) உங்களுக்கு அறிவித்தவர்களை கூறுங்கள் என்று சொல்வார்களாம். அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வாதிகளாக இருந்தால் அவர்களது ஹதீஸ்களை ஏற்பார்களாம், அவர்களுள் வழிகேடர்கள் இருந்தால் அந்த ஹதீஸ்களை ஏற்கமாட்டார்களாம். (முஸ்லிம் முன்னுரை)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரின் மீது பொய் சொல்லப்படாமல் இருந்த நேரத்தில் நபிகளாரைத் தொட்டு ஹதீஸ் அறிவித்தோம். எப்போது மனிதர்கள் (ஹதீஸ் புனைந்து) கேவலத்திற்கும், புகழிற்கும் ஆளானார்களோ அப்போது அவர்களைத் தொட்டு அறிவிப்பதை விட்டுவிட்டோம். முஸ்லிம் முன்னுரை)

பாருங்கள்; ஹதீஸைப் பாதுகாத்த அந்த உத்தமர்கள் அறிவிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டே ஹதீஸைத் தொகுத்துள்ளனர். எனவே ஹதீஸ்களை தன் மனோ இச்சைக்கு ஏற்ப ஏற்றும், விட்டும் வழிகெட்டுச் செல்லாமல் அல்லாஹ்வும், தூதரும் காட்டித்தந்த ‘அறிவிப்பாளரை ஆய்வு செய்தல்’ என்ற  அடிப்படையை வைத்து நபிவழியைப் பாதுகாக்க முயலவேண்டும்.

சாதாரண மனிதனின் விடையத்தில் தகவல் பரிமாற்றுவதில் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்றால் நபிகளாரின் செய்திகளை பரிமாறுவதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்ற  இந்த வழிகாட்டல்களே ஹதீஸ்களை பாதுகாக்க எம் முன்னோர்களைத் துண்டியது.

ஹதீஸ்களை பாதுகாக்க முயற்சித்தவர்கள், நபிகளார் சிறப்புரிமை வழங்கப்பட்டவர்களே!!!

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில்  சிறந்தவர்கள் என் நூற்றாண்டைச்  சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் நிலை தோன்றும். என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 2651…., முஸ்லிம்)

எனவே நபித் தோழர்களை வைத்து  குர்ஆனை அல்லாஹ் பாதுகாத்தான் என்று நம்ப முடியும் என்றால், சிறந்த சமூகம், அவர்களிடையே ‘பொய்சாட்சியம். ஏமாற்று, வாக்கு மீறல், உலக ஆசை இருக்காது’ என்று புகழப்பட்ட அந்த உத்தமர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டதை, அல்லாஹ் நல்லவர்களை வைத்து ஹதீஸை பாதுகாத்தான்  என்று ஏன் நம்பக்கூடாது. ஏன் குர்ஆனுக்கும், ஹதீஸுக்குமிடையில் வேறு பாடு, இது தத்தமது வழிகேட்டை பாதுகாக்க வழிகேடர்கள் கையில் எடுத்த கேடையம் என்பது தெளிவு. அல்லாஹ் எம்மை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பானாக.

  • மூன்றாவது சந்தேகம்:

குர்ஆன் நபிகளார் காலத்தில் எழுதப்பட்டது, ஹதீஸ்கள் எழுத அனுமதிக்கப்படவில்லை. எனவே தான் ஹதீஸ் துறையில்  பொய்களும், தவறுகளும் ஏற்பட்டன. ஹதீஸ் அடிப்படையாக இருந்திருந்தால் அதை எழுத அனுமதித்திருப்பார்கள் என்ற வாதமாகும்.

பதில் விளக்கம்:-

முதலில் நாம் விளங்க வேண்டியது; குர்ஆனை அல்லாஹ் நபித் தோழர்களின் உள்ளத்தில் பாதுகாத்தான் என்றால், அதே உள்ளத்தில்தான் ஹதீஸும் பாதுகாக்கப்பட்டது. குர்ஆனுக்கு எழுத்து வடிவம் என்பது ஒரு மேலதிக பாதுகாப்பே அல்லாமல் அதுதான் பாதுகாப்புக்கான வழி என்பதல்ல. அல்லாஹ் எழுத்துக்கு முன்னர் உள்ளத்தையே தேர்வு செய்தான். அவன் கூறுகின்றான்:

  • இன்னும்: “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஒரே தடவையில் முழுதும் இறக்கப்பட்டிருக்கலாமே?” என்று நிராகரிப்போர் புலம்புகின்றனர்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (25:32)

எனவே நபித் தோழர்களின் உள்ளத்தில் மாத்திரம் பாதுகாக்கப்பட்டதும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டதுதான்.

அடுத்து; ”ஹதீஸ்களில் பொய்களும், தவறுகளும் கலந்து விட்டன” என்ற வாதமும் கவனிக்கத்தக்கதே. முறையாக சிந்தித்தால் இதற்கான பதில் சுலபமே. உண்மையில் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற சிந்தனையே சிந்திப்பதை விட்டும் தடுத்தது எனலாம். ஹதீஸ்களில் பொய் கலந்தது உண்மை தான், அதனால் ஹதீஸ்களை ஏற்க முடியாது என்றால், எதற்காக சுத்தப்படுத்தும் ஒரு கலையை (முன்னர் சொல்லப்பட்டது போன்று) இஸ்லாம் காட்டித்தந்தது. குர்ஆன் தொகுக்கப்பட்டிருந்தாலும், எத்தனை தடவைகள் அதில் பொய்யை சேர்க்க விரோதிகள் சதித்திட்டம் திட்டினார்கள், சில பொய்களை சேர்த்து விநியோகமும் செய்தார்களே. அப்படியானால் அவர்கள் செய்த செயலால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்றாகுமா, அல்லது நீ என்ன செய்தாலும் குர்ஆனை சிரழிக்க முடியாதவாறு அல்லாஹ் பாதுகாத்து விட்டான் என்பது உறுதியாகுமா.!!! அதே போன்று தான்; ஹதீஸ்கள் என்ற போர்வையில் பொய்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இஸ்லாம் காட்டித் தந்திருக்கும் வழிகாட்டல் மூலம் ஸஹீஹான ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டன, இன்றும் ஹதீஸ்களைப் பாதுகாக்கும் அந்த கலை உயிரோட்டமாகவே இருக்கின்றது. எந்த விரோதிக்கும் சஹீஹான ஹதீஸ்களில் கையாடல் செய்ய முடியாது. இதுவே அல்லாஹ் பாதுகாக்கும் வழியாகும்.

அடுத்து; ‘நபித் தோழர்களுக்கு எழுத அனுமதி மறுக்கப்பட்டது’ என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.  ஹதீஸ்களை எழுத நபிகளாரால் தடுக்கப்பட்டது உண்மை தான்.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து நீங்கள் எழுதவேண்டாம், குர்ஆனைத் தவிர வேறு எதனையும் என்னிடமிருந்து யாராவது எழுதியிருந்தால் அதனை அவர் அளித்துவிடட்டும். என்னிடமிருந்து அறிவிப்பு செய்யுங்கள், அதில் குற்றமில்லை, மேலும் யார் என் மீது வேண்டுமென்று பொய் உரைக்கின்றாரோ அவர் நரகில் தனக்குரிய இடத்தை ஒதுக்கிக் கொள்ளட்டும்.  (முஸ்லிம்)

உண்மையில் இப்படி ஒரு தடையை நபிகளார் விதித்தது ‘நபித் தோழர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள், குர்ஆனையும், ஹதீஸையும் வித்தியாசப்படுத்தாமல் ஒன்றாக பதிந்து விடலாம்’ என்பதனால் தான். அதனால் தான் அறிவிப்பு செய்ய அனுமதி வழங்கினார்கள். அறிவிப்பதையும் தடுத்திருந்தால் இந்த வாதம் நியாயமாக இருந்திருக்கும். இப்படி நாம் விளங்குவதற்கு காரணம், எப்போது நபித்தோழர்கள் குர்ஆன், நபிகளாரின் கூற்றுக்கிடையில் வித்தியாசப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றார்களோ அப்போது நபிகளார் எழுத அனுமதியும் வழங்கினார்கள். எனவே ஹதிஸை எழுதக் கூடாது என்ற சட்டம் மாறப்பட்ட ‘மன்சூக்’ வகையை சார்ந்ததாகும்.

ஹதீஸை எழுத அனுமதி:-

  • ……….மக்கா வெற்றியின் போது யமன் வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் என்பவர் ,நபிகளாரின் உரையை கேட்டுவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! இதை எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்’ என்று கேட்டார். ‘இவருக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்……. (புஹாரி: 112,2434, முஸ்லிம்)
  • ஸஈத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  (ஒரு முறை) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், ‘வியாழக்கிழமை எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)” என்று கேட்டுவிட்டு, அவர்களின் கண்ணீர்த் துளிகள் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். பிறகு கூறினார்கள்:  வியாழக்கிழமையன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்” என்று கூறினார்கள்…….. (புஹாரி: 3053, முஸ்லிம்)
  • அபூ ஜுஹைபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரழி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை’ என்று அவர் கூறினார். ‘அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?’ என்று நான் கேட்டதற்கு, ‘நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது’ என்ற சட்டங்களும் இதிலுள்ளன’ என்று கூறினார்கள்”   (புஹாரி: 111, முஸ்லிம்; முஸ்லிமின் அறிவிப்பில் விரிவாக வந்துள்ளது)
  • அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அவர்களைத் தவிர. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்வேன்) எழுதி வைத்ததில்லை”  (புஹாரி:113)
  • அப்துல்லாஹிப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:நான் நபிகளாரிடமிருந்து கேட்கும் அனைத்தையும் எழுதுபவனாக இருந்தேன், குறைஷிகள் என்னைத் தடுத்து, ‘நபிகளார் ஒரு மனிதராவர்கள், அவர்கள் கேபத்திலும், மகிழ்ச்சியிலும் பேசலாம், என்ன நீர் அனைத்தையும் எழுதுகின்றீர்?’ என்று கூறினர், நானும் எழுதுவதிலிருந்து தவிர்ந்து கொண்டேன். பிறகு அதனை நபிகளாரிடம் கூறவே, நபியவர்கள்; ‘நீர் எழுதுவீராக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது நாவிலிருந்து சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் வெளிப்படாது.’ என்று கூறினார்கள்.  (அஹ்மத்: 6510, அபூதாவுத்: 3646)
  • அபூ பக்ர் (ரழி) அவர்கள் ஸகாதின் சட்டங்களை எழுதி அனுப்பியதாக அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி:1448, 1453)

அதிலும் அதிகம் ஹதீஸ் அறிவித்த நபித் தோழர்கள் என்ற வகையில் அபூ ஹுரைரா (ரழி) அவர்களே முதலிடம் வகிக்கின்றார்கள். அவர்களுக்கு ஹதீஸ்களை உள்ளத்தில் பாதுகாக்க நபிகளாரின் பிரத்தியேக பிராத்தனை இருந்தது.  அவர்களது ஹதீஸ், தொகுப்பு மாணவன் ஹம்மாம் என்பவரிடம் இருந்துள்ளது. அது மிகவும் பிரபல்யமானதும் கூட.

  • அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள்:  அபூ ஹுரைரா ஏராளமான நபி மொழிகளை அறிவிக்கிறாரே என்று மக்கள் (என்னைக் குறை கூறும் தொனியில்) பேசிக் கொள்கிறார்கள். அல்லாஹ்விடம் இதற்கெனக் குறித்த வேளை ஒன்று உண்டு. மேலும், அவர்கள், ‘முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்துவிட்டது? அபூ ஹுரைரா நபிமொழிகளை அறிவிப்பதைப் போல் அவர்கள் அறிவிப்பதில்லையே ஏன்?’ என்று கேட்கிறார்கள். என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தனர்; என் அன்சாரித் சகோதரர்களோ தங்கள் சொத்துகளைப் பராமரிக்கும் வேலையில் (விவசாயம் போன்ற பணிகளில்) ஈடுபட்டிருந்தனர். (அதே நேரத்தில்) நானோ என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (மேற்கொண்டு வருவாய் எதுவும் தேடாமல்) அல்லாஹ்வின் தூதருடனேயே எப்போதும் இருப்பதை வழக்கமாகக் கொண்ட ஏழை மனிதனாயிருந்தேன். நபி(ஸல்) அவர்களுடன் மற்றவர்கள் இல்லாத போதும் (சம்பாத்தியத்தைத் தேடி அவர்கள் வெளியே சென்று விடும் போதும்) நான் (நபியவர்களுடன் இருப்பேன். அவர்கள் (நபி மொழிகளை) மறந்து விடும்போது நான் (அவற்றை) நினைவில் (பாதுகாப்பாக) வைத்திருப்பேன். மேலும், ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள், ‘நான் என்னுடைய இச்சொல்லைச் சொல்லி முடிக்கிற வரை, தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து, பிறகு தன் நெஞ்சோடு அதைச் சேர்ந்து வைத்துக் கொள்கிறவர் என் வாக்கு எதனையும் மறக்கமாட்டார்” என்று கூற, நான் என் அங்கியை விரித்தேன். அதனைத் தவிர என் மீது வேறு ஆடை எதுவும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் தம் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை அதை அப்படியே விரித்து வைத்திருந்துவிட்டு, பிறகு அதனை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க் கொண்டேன். நபி(ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அப்போதிருந்து அவர்களின் சொற்களில் எதனையுமே இன்று வரை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தின் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் (நபிமொழிகளில்) எதனையுமே உங்களுக்கு ஒருபோதும் அறிவித்திருக்க மாட்டேன். இவைதாம் அந்தத் திருக்குர்ஆன் வசனங்கள். ‘’நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும் மறைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கிறான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கிறார்கள். ஆனால், (இத்தவறிலிருந்து) திருந்தி, தம் செயல் முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்து வைத்தவற்றை) எடுத்துரைக்கிறவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறேன்.’’ (திருக்குர்ஆன் 02:159, 160)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:  ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து  இரண்டு பைகள் அளவுக்கு செய்திகளை நான் மனனமிட்டிருக்கின்றேன்.. அவற்றில் ஒன்றை நான் (மக்களிடம்) பரப்பி விட்டேன்; இன்னொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்” (புஹாரி: 120)

ஹம்மாம் அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து சுமாராக நூற்றி நாற்பது ஹதீஸ்களை புத்தக வடிவில் தொகுத்து பதுகாத்துள்ளார்கள், அது இன்றும் பிரசித்தி பெற்றுள்ளது. (சியறு அஃலாமின் நுபலாஃ, தஹ்தீபுத் தஹ்தீப்)

எனவே நபிகளார் காலம் தொட்டு நபித்தோழர்கள் ஹதீஸ்களை எழுதியும் பாதுகாத்துள்ளார்கள், உள்ளத்திலும் பாதுகாத்துள்ளார்கள் என்பது மிகத்தெளிவு.  இஸ்லாத்தை அளிக்க நினைத்தவர்களே, ஹதீஸ்கள் எழுதப்படவில்லை, எனவே பாதுகாக்கப்படவில்லை என்ற வீண் விமர்சனத்தை முன்வைத்து, முஸ்லிம்களை வழி கெடுத்துள்ளனர்.

ஹதீசை மறுப்பதில் பின்பற்றப்பட்ட வழிகேடு!!!

இஸ்லாத்தைப் பொருத்தவரை உறுதியானதை பின்பற்றுமாறு ஏவியிருப்பதோடு, சந்தேகத்தைப் பின்பற்றுவது வழிகேடர்களின் அடையாளம் என்றும் கூறியுள்ளது.

  • …..மேலும் ஈஸா நபி விடயத்தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.  (4:157)
  • எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.  (53:28)
  • ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.  (10:36)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஊகம் கொள்வது குறித்த உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், ஊகம் வீண் சந்தேகம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும்.  (புஹாரி: 5143, முஸ்லிம்)

எனவே எந்த ஊகத்தை, யூகத்தை இஸ்லாம் பின்பற்றப்படக் கூடாத வழிகேடு என்கிறதோ, அதனை ஹதீஸை ஏற்பதற்கும், மறுப்பதற்கும் அடிப்படையாக்குவது ஹதீஸ்களை மறுப்போரிடம் காணப்படும் மற்றொரு வழிகேடாகும்.

அல்லாஹ்வும், அவன் தூதரும் ஹதீஸ்களை ஏற்பதற்கு கூறித்தந்த அடிப்படை அறிவிப்பாளைரை வைத்து தகவலை உறுதிப்படுத்தி ஏற்பதாகும். அப்படியிருக்க, அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்கும் போது, யாராவது தவறு விட்டிருப்பார், மறந்திருப்பார்‘ என்று உகத்தின் அடிப்படையில் ஹதிஸை மறுக்க முனைவது மிகப் பெரும் வழிகேடாகும். (அல்லாஹ் எங்களைப் பாதுகாக்கட்டும்)

நம்பகத் தன்மையை வைத்து முடிவெடுத்தல் என்பது இஸ்லாத்தின் நீதித்துறையின் ஒரு முக்கிய அம்சமும் கூட, அந்த அடிப்படையில் தான் இஸ்லாம் சாட்சியை வைத்து தீர்ப்பளிப்பதையும் கடமையாக்கியுள்ளது.  நபித்  தோழர்களைப் பொருத்தவரை வழிகேடு புகுந்துவிடாமல் இருக்க,  ஹதீஸ்களை ஏற்பதிலும் இந்த அடிப்படையை இருக்கிப்பிடித்துள்ளனர்.

  • அபூ ஸஈத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா(ரழி) அவர்கள் வந்து, ‘நான் உமர்(ரழி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர்(ரழி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை’ என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், ‘(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்’ என்று கூறினார்கள்’ என்றேன். அதற்கு உமர்(ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்றார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?’ என்று கேட்டார்கள்.  அதற்கு (அங்கிருந்த) உபை இப்னு கஃப்(ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்’ என்றார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூ மூஸா(ரழி) அவர்களுடன் சென்று ‘நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்’ என்று உமர்(ரழி) அவர்களிடம் தெரிவித்தேன்’ (புஹாரி: 6245, முஸ்லிம்)
  • நாபிஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு ஜனாஸாவைப் பின்தொடர்கிராரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு என அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார் என இப்னு உமர்(ரழி) அவர்களிடம் கூறப்பட்டதும் ‘அபூ ஹுரைரா(ரழி) மிகைப்படுத்துகிறார்’ என்றார்கள், ஆஇஷா(ரழி) அவர்கள், அபூ ஹுரைரா(ரழி) அவர்களின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், ‘நானும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்’ என்றும் கூறினார். இதைக்கேட்ட இப்னு உமர்(ரழி) அவர்கள் (அதை ஏற்றுக் கொண்டு) ‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’ என்றார்கள்.  (புஹாரி: 1323, முஸ்லிம்)

எனவே நபி வழியைப் பாதுகாக்க இஸ்லாம் காடித்தந்த வழிமுறையைக் கடைப்பிடித்து வழிகேட்டிலிருந்து விலகி வாழ முயற்சிப்போம்.

ஹதீஸை ஏற்பதற்கு அளவுகோலாக காட்டப்படும் ஹதீஸ் ஒரு விளக்கம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னைப் பற்றி ஒரு செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்டு, அதனை உங்கள் உள்ளம் ஏற்று, உங்கள் மயிர்களும், தோல்களும் மென்மை அடைந்து, அது உங்களுக்கு நெருக்கமானது என்றும் நீங்கள் கருதினால், அதனை (ஏற்க) உங்களைவிட நான் தகுதியானவனே. (அதேநேரம்)  என்னைப் பற்றி ஒரு செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்டு, அதனை உங்கள் உள்ளம் ஏற்றக மறுத்து, உங்கள் மயிர்களும், தோல்களும் வெறுப்ப அடைந்து, அது உங்களை விட்டும்  துரமானது என்றும் நீங்கள் கருதினால், அதனை விட்டும் உங்களைவிட  நான் மிகத் தூரமானவன். (அஹ்மத்: 16058)

சமகாலத்தில் ஹதீஸை ஏற்று, மறுப்பதற்கு ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வும், உடலுனர்வும் அளவுகோல் என்று அடிப்படை வகுக்கப்பட்டு, நினைத்தவர்கள் எல்லாம் ஹதீஸை நிராகரிக்கும் வழிகேட்டு வாயில் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்த ஹதீஸே ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றது.

உண்மையில் அறிவிப்பாளரைப் பார்க்காமல், வெறுமனே தனிமனித உணர்வை வைத்து தகவலை ஏற்க மறுக்க முடியும் என்றால் எதற்கு அறிவிப்பாளர் தொடர் பார்க்க வேண்டும், எதற்கு ஹதீஸ் கலையைப் படிக்க வேண்டும்.

மேலும் அப்படி நோக்கினால் குர்ஆனும் சந்தேகத்திற்கு இடமாகுமே.

அடுத்து யாருடைய உணர்வை வைத்து தீர்மானிப்பது என்ற கேள்வி வரும், ஏனெனில் ஒவ்வொருவரின் உணர்வும் வித்தியாசப்பட்டது.

இஸ்லாமிய உறவுகளே இந்த ஹதீஸை ஏனைய குர்ஆன் ஹதீஸின் போதனைகளோடு சேர்த்து விளங்காமல், இந்த ஹதீஸை மட்டும் வைத்துக் கொண்டு சிந்திப்பதே ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்குக் காரணமாகும். ஏனெனில் இந்த ஹதீஸ் பதினான்கு நூற்றாண்டைக் கடந்து, குறிப்பாக ஹதீஸ்கள் தொகுக்கப்படும் காலத்திலும் இருந்த ஒன்றாகும். குர்ஆன் ஹதீஸை பாதுகாப்பதற்காக வாழ்க்கையை செலவழித்த நபித் தோழர்கள் எப்படி இருந்தார்கள்.

நான் முன்னால் எடுத்துக்காட்டிய பிரகாரம்; ஒரு செய்தி நபித் தோழர்களுக்கு முன்னால் சொல்லப்படும் போது அப்படிப்பட்ட ஒரு மனநிலை வருமாக இருந்தால் அவர்கள் அறிவிப்பாளர்களையே பார்த்தார்கள், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஏற்றார்கள். அதனையும் உறுதிப்படுத்த சாட்சிகளைப் பார்த்தார்கள். மாறாக இன்று வழிகேடர்கள் சொல்வது போன்று தன் உணர்வை மாத்திரம் வைத்து முடிவெடுக்கவில்லை.

அடுத்து உணர்வு வாதத்தை முன்வைப்போரிடம் தாழ்மையாக கேட்க வேண்டியது; ஒருவரது உள்ளம் ஏற்கிறது, இன்னொருவரின் உள்ளம் அதே செய்தியை ஏற்க மறுக்கிறது இப்போ என்ன முடிவெடுப்பது‘ என்பதே.

உதாரணமாக;;;

  • ‘யாசீன் அல்குர்ஆனின் இதயமாகும்’ இதைக் கண்டு யார் உள்ளமும் ஓடாது இப்போ ஏற்பதா, மறுப்பதா?
  • ‘குறைசிகளில் ஒருவர் தோன்றுவார், அவர் முஹம்மத் பின் இத்ரீஸ் (ஷாபிஈ இமாம்), அவர் ஷைத்தானை விட மோசமானவர்’ இதைக் கண்டு ஷாபியாக்களின் உள்ளம் ஓடியது, ஹனபியாக்களின் உள்ளம் ஏற்றது. என்ன முடிவுக்கு வருவது.

நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் ஹதீஸ்களும், சூனிய தாக்கம் பற்றிய ஏனைய ஹதீஸ்களும் நபித் தோழர்கள், தாபிஈன்கள், முஹத்திஸீன்கள், இன்று வரை குர்ஆன் ஹதீஸுக்காக பாடுபட்டவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக தென்பட்டது. அதேநேரம், முஃதஸிலாக்கள், அவர்கள் வழியில் சென்றவர்கள், இஸ்லாத்தை விமர்சித்த விரோதிகள், சமகாலத்தில் தமிழ் உலகில்  ஒரு சிறு கூட்டத்தினர் அதைக் கண்டு ஓடுகிறார்களாம். என்ன செய்வது?.

இதே நிலை குர்ஆனுக்கு வந்தால் என்ன செய்வது?. அல்லாஹ் கூறுகின்றான்:

  • அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தோல்கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து – விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தோல்களும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன – இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் – இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)

இன்று குர்ஆனை ஓதுகின்ற அதிகமான முஸ்லிம்களுக்கு இந்த மாற்றம் ஏற்படுவதில்லை, இப்போது அந்த முஸ்லிம்களை அல்லாஹ்வை அஞ்சாதவர்கள் என்று எடுப்பதா, அல்லது அந்த வசனம் இறை வசனம் இல்லை என்று எடுப்பதா??? என்ன செய்வது???!!!

குர்ஆனைக் கேட்கும் போது மயிர் சிலிர்ப்பது நல்லவர்களின் அடையாளமாம், ஹதிசைக் கேட்கும் போது மயிர் சிலிர்ப்பது ஹதீஸ் பொய் என்பதற்கு அடையாளமா??? முறையாக சிந்திக்காவிட்டால் என்ன முடிவு எடுப்பது?.

ஈமானுக்கும், இஸ்லாத்துக்கும் எது ஆரோக்கியம், வெறுமனே அந்த ஹதீஸை ஏற்பதா, அல்லது முன்னைய குர்ஆன் வசனத்தை விளங்குவது போன்று, ஏனைய ஆதரங்களோடு ஒப்பிட்டு விளங்கவதா??? முறையாக சிந்தித்தால் சரியான வழியில் செல்லலாம். அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டுவானாக!

இந்த ஹதீஸை எப்படி புரிய வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக பின்வரும் ஹதீஸைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்தின் கடைசியில் மனிதர்கள் சிலர் வந்து, நீங்களும், உங்கள் மூதாதையர்களும் கேள்விப்படாத செய்திகளை அறிவிப்பார்கள், அவர்களை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்து, குழப்பிவிடாமலிருக்கட்டும்.  (முஸ்லிம்)

இந்த ஹதீஸை வெறுமனே இன்றைய காலத்தோடு ஒப்பிடுவதா, அல்லது நபித் தோழர்கள், ஹதீஸ்களைத் தொகுத்த காலத்தோடு ஒப்பிட்டு விளங்குவதா? இதனை நன்றாக சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.

தெளிவுக்காக;;; ‘நபியே உம்மை படைக்காவிட்டால், இந்த உலகை படைத்திருக்க மாட்டேன்’ என்பது இட்டுக் கட்டப்பட்ட, நபிகளாரை உயர்த்திப் பேசும், எல்லோரது உள்ளமும் கேட்டவுடனே எற்றுக் கொள்ளும் ஒரு செய்தி.

இன்று குர்ஆன் ஹதீஸை நாம் எடுத்துரைத்து, இந்த ஹதீஸை ஹதீஸ் கலை விதிப்படி இட்டுக்கட்டப்பட்டது என்று சொல்லும் போது, அசத்தியவாதிகள் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸை முன்வைத்து, இவர்கள் தான் நபிகளார் எச்சரித்த அந்த கூட்டம் என்றால், நாம் என்ன பதில் சொல்வோம். நிதானமாக சிந்தியுங்கள்.

(தமிழ் உலகில் இந்த ஹதீஸைப் பற்றி எடுத்துக் கூறி) இது பொய் என்று கூறும், நாம் இறுதியில் வந்த கூட்டமா, அல்லது நபிகளார் எச்சரித்த அந்தக் கூட்டம் பொய் ஹதீஸ்களை உருவாக்கியவர்களா???

ஹதீஸ்களை உருவாகியவர்கள்தான் எச்சரிக்கப்பட்டவர்கள் என்போம். ஏன் ஹதீஸ்கள் என்பது இரண்டாம் நூற்றாண்டிலேயே தொகுக்கப்பட்டு, ஹதீஸ்களைப் பாதுகாக்க விதியும் உருவாக்கப்பட்டது. எனவே அன்று விதியின் அடிப்படையில் இட்டுக்கப்பட்டது என்று முடிவெடுக்கப்பட்ட ஒன்று, இன்று ஒருவரின் பார்வைக்கு நல்லதாக தென்பட்டதற்கு அது உண்மையாகாது. இதுதான் முன்னோரான சலபுகளை வைத்து தீர்மானிப்பது என்பது. அதே போன்று சஹாபாக்கள், தாபிஈன்கள், ஹதீஸ்கலை அறிஞர்கள் போன்ற சலபுகள் ஏற்றுக் கொண்டு, அதில் ஒன்றுபட்ட ஹதீஸை, ஒருவர் உடல் புல்லரிக்கிறது, உள்ளம் ஏற்க மறுக்கிறது என்று கூறினால் யாரை தவறு காண்பது! ஹதீஸ் விடையத்தில் விதிப்படி இயங்கியவர்களையா, அல்லது இன்று குழப்பத்தில் விழுந்து ஹதீஸ்களை மறுப்பவர்களையா?? நிதானமாக சிந்தித்தால் சீரான பாதையில் பயணிக்கலாம். அல்லாஹ்வே எங்களுக்கு தெளிவைத் தரட்டும்.

எனவே ஹதீஸ்களை முழுமையாகவோ, பகுதியாகவோ மறுப்பவர்கள் வைக்கும் எந்த வாதமும் இஸ்லாத்தை பாதுகாப்பதாக இல்லை என்பதை புரிந்து, இஸ்லாம் நபிவழியை எந்த இடத்தில் வைத்து மதிக்கச் சொல்கின்றதோ அப்படியே அதற்குரிய அந்தஸ்த்தைக் கொடுத்து முஃமீனாக வாழ்ந்து, முஃமினாகவே மரணிக்க முயல்வோம்.

குறிப்பு: இந்த ஆக்கத்தை வாசிக்கும் போது தவறுகள் தென்பட்டால் அதனை ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் சுட்டிக்காட்டுவதன் மூலம் திருத்திக்கொள்ள உதவி செய்யலாம்!

நிறைகள் அல்லாஹ்வை சாரும், அடியேனின் எழுத்தில் தவறுகள் இருப்பின் அது எனது கவனயீனமே, அல்லாஹ் நம் அனைவரையும் மன்னித்து, எமது நல்ல முயற்சிகளை ஏற்று, நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

وأاخر دعوانا أن الحمد لله رب العالمين

2 thoughts on “இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம் நபி வழி

Leave a Reply to Azār Cancel reply

Your email address will not be published. Required fields are marked *