ஹஜ் உம்ரா ஓர் நபிவழிப் பார்வை!!!

PDF வடிவில் பார்வையிட இங்கே CLICKசெய்யவும் !

بسم الله الرحمن الرحيم

ஹஜ் உம்ரா ஓர் நபிவழிப் பார்வை!!!

الحمد لله، والصلاة  والسلام على رسول الله، صلى الله عليه وسلم، وبعد:

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் இறைத்த தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் உண்டாகட்டும், வபஃத் என்று கூறியவனாக துவங்குகின்றேன்:

ஒரு முஸ்லிம் நிறைவேற்றும் வணக்கங்களில் ஹஜ், உம்ரா என்பது பல தியாகங்களுடன் நிறைவேற்றப்படும் வணக்கம் என்பதனால் அதனை முறையாக செய்யவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அந்த அடிப்படையில் நபிகளாரின் ஹஜ், உம்ரா வணக்கத்தைப் பற்றி படிப்பதும் எம்மீதுள்ள கடமையாகும். அதனூடாகவே எமது வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கவும் காரணமாக இருக்கும்.

யார் மீது கடமை;

மக்கமா நகர் சென்றுவர யாரெல்லாம் பொருளாலும், உடலாலும் சக்தி பெறுவார்களோ அவர்கள் மீது கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏

மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (எனும் மக்கா)வில் இருப்பது தான். பரக்கத்துச் செய்யப்பட்டதாகவும், அகிலத்தார்க்கு நேர்வழியாகவும் இருக்கின்றது. (3:96)

فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது;  மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதனளவில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தவரை விட்டும் தேவை அற்றவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 3:97)

எவ்வாறு நிறைவேற்றுவது?,

 நபிகளார் காட்டித்தந்த அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும், அப்போதே அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

 (நபியே !) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 3:31)

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:  நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது (வாகன) ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத்துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், “நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா,) செய்யமாட்டேனா என்பதை அறியமாட்டேன்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.   (முஸ்லிம்: 2497)

விரும்பியவர்கள் உம்ரா செய்வதற்கும் எண்ணம் கொள்ளலாம், விரும்பியவர்கள் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:  நாங்கள் (துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிய விரும்புகிறார்களோ அவர்கள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்; யார் உம்ராச் செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் உம்ராவுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் மட்டும் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்’ எனக் கூறினார்கள். எனவே, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர். இன்னும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர்; நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாவேன். நான் மாதவிடாய்க் காரியாக உள்ள நிலையில் அரபா நாள் வந்துவிட்டது. எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன், அவர்கள், ‘உன்னுடைய உம்ராவை விட்டுவிட்டு உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு, வாரிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொள்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்தபோது என்னுடன் அப்துர்ரஹ்மானை அனுப்பித் தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் என்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டேன். (புகாரி: 1783)

இஹ்ராம் அணிவதன் சிறந்த முறை:

அந்த வகையில் குர்பானிப் பிராணி (ஹத்ய்)யை கொண்டு வராதோருக்கு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான பூரணமான ஒரு முறையாக “தமத்துஃ” என்ற விதம் இருக்கின்றது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அதனையே நபித் தோழர்களுக்கு ஏவி, வலியுறுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் பின்னால் அறிந்ததை முன்பே அறிந்திருந்தால் (என்னுடன்) குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருக்கமாட்டேன்; மேலும், மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதே நானும் (இஹ்ராமிலிருந்து) விடுபட்டிருப்பேன்.  (புகாரி: 7229)

தமத்துஃ என்பது; “ஹஜ் செய்வதற்காக சென்றவர் ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து, அதனை பூரணமாக முடித்துவிட்டு, பிறகு அதே ஆண்டில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிவதைக் குறிக்கும்.”

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிவதன் வகைகள்;

1- தமத்துஃ (முன்னால் கூறப்பட்டது)

2- கிறான்;   என்றால், ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்குமாக இஹ்ராம் அணிதல், அவர்     (لَبَّيكَ عُمْرَةً وَحَجًّا)   லப்பைக உம்ரதன் வஹஜ்ஜன் என்று சொல்லி இஹ்ராம் அணிவார், அவர் ஹஜ்ஜை நிறைவேற்றி, நஹ்ருடைய நாளில் அனுமதிக்கான காரணிகளை செய்யும் வரை இஹ்ராமை கலையமுடியாது.

தமத்துஃ, கிறான் முறையில் நிறைவேற்றுவோர் ஹத்ய் பலிப்பிராணி கொடுப்பது அவசியமாகும்.மக்காவாசியாக இருந்தால் அவசியமில்லை.

3- இப்ராத்; என்றால்,  ஒரு பயணத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் நிய்யத் வைத்தல், அவர்   (لَبَّيكَ حَجًّا))  ‘லப்பைக ஹஜ்ஜன்’ என்று கூறி இஹ்ராம் அணிவார், மக்காவுக்கு சென்று தவாபுல் குதூமை நிறைவேற்றுவார்.அவருக்கு பலிப்பிராணி கடமையாகாது.

உம்ரா செய்யும் முறை;

1- இஹ்ராமுக்கான எல்லையில் (மீகாத்) இஹ்ராம் அணிவது,

இஹ்ராம் அணிவதற்கான இடங்கள்;

A – துல் ஹுலைபா   :  மதீனா வாசிகளுக்கும், அதனை கடந்து வருவோருக்குமானது, மக்காவுக்கும் அதற்குமிடையில் 450 கிமீ இருக்கும்.

B – அல்ஜுஹ்பா   :ஷாம் வாசிகளுக்கும், அதனை கடந்து வருவோருக்குமானது, அது மக்காவின் வடமேற்கு பகுதியில் 187 கிமீ தூரத்தில் இருக்கின்றது.

C – கர்னுல் மனாஸில்   :   நஜ்த் வாசிகளுக்கு, அது மக்காவின் கிழக்கில் உள்ள மலையாகும், மக்காவிற்கு 94 கிமீ தொலைவில் உள்ளது.

D – யலம்லம்   ;   யமன் வாசிகளுக்கும், அதனை கடந்துவருவோருக்குமானது, மக்காவின் தெற்கு பகுதி,   54  கிமீ தொலைவில் இருக்கின்றது.

E – தாது இர்க்; இது இராக் வாசிகளுக்குரியது, மாக்கவின் வடகிழக்கில் 94 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடம்,   (இது நபிகளார் காட்டித்தந்ததா அல்லது உமர் ரலி காட்டியதா என்பதில் ஒரு கருத்து வேற்றுமை இருந்தாலும் நபிகளார் இதனையும் இஹ்ராம் அணியும் எல்லையாக காட்டியுள்ளார்கள் (முஸ்லிம், அபூ தாவுத்) என்பது ஆதாரத்திற்குற்பட்டதே)

ஸைத் இப்னு ஜுபைர் அவர்கள் கூறினார்கள்:  நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவரின் வீடாக இருந்தது. நான் அவரிடம் உம்ராவுக்காக எந்த இடத்திலிருந்து இஹ்ராம் அணிவது கூடும்? எனக் கேட்டேன். அதற்கு, நஜ்த் வாசிகள் கர்ன் எனும் இடத்திலிருந்தும் மதீனா வாசிகள் துல் ஹுலைபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் ஜுஹ்பாவிலிருந்தும் இஹ்ராம் அணிய வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்’ என பதிலளித்தார்கள். (புகாரி: 1522, முஸ்லிம்:2862)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட  எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள். தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். (புகாரி: 1524. , 2860)

மீகாத் (இஹ்ராம் அணியும் எல்லை) எல்லையை அடைந்தவர், உம்ராவுக்காக அந்த இடத்தில் இஹ்ராம் அணிந்து கொள்ளுதல், மக்காவுக்குள் நுளைய இருக்கின்றார் என்ற அடிப்படையில் முடிந்தால் குளித்துக் கொள்ளலாம். பிறகு ஆண்கள் மேல் அங்கியாக சால்வையையும், கீழ் ஆடையாக வேட்டியையும் (சுற்றி தைக்கப்படாத ஆடையை) அணிந்து கொள்ளல், பெண்கள் அலங்காரமற்ற விரும்பிய ஆடையை அணிந்த கொள்வர்.  பிறகு “லப்பைக உம்ரதன்” என்று கூறி,

” لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ “

என்று கூறவேண்டும்.

லப்பைக உம்ரதன் என்பதன் அருத்தம்; “உம்ராவுக்கான உன் அழைப்பை ஏற்று, உனக்கு பதிளளிக்கிறேன்” என்பதாகும்.

திர்மிதியில் (830) நபிகளார் உம்ராவுக்காக குளித்ததாக வரும் ஹதீஸ் பலவீனமானதாகும். அதில் அப்துல்லாஹ் பின் யஃகூப் என்பவர் பலவீனமானவராக உள்ளார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தம் முடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் துல் ஹுலைபா மஸ்ஜிதில் இஹ்ராம் அணிந்துவிட்டு, தல்பியா கூறியதைக் கேட்டேன். (ஸஹீஹுல் புகாரி: 1540. 1553,முஸ்லிம் )

2- மக்காவை அடைந்தவுடன் உம்ராவுக்காக கஃபாவை ஏழு தடவைகள் வலம்வருதல்,

அதனை ஹஜருல் அஸ்வதை வலப்புறத்தில் வைத்து, அதற்கு நேறாக இருந்து ஆரம்பித்து, அதனுடனே முடித்தல். பிறகு முடிந்தால் மகாமு இப்றாஹீமுக்கு பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதல், அதற்கு பக்கத்தில் தொழமுடியாத நிலை இருக்குமானால் தூரத்திலாவது தொழுதுகொள்ளல்.

”நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது ஏழு முறை கஃபாவை வலம்வந்தார்கள். மகாம் இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸஃயி’  செய்தார்கள். உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ என இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்’. (புகாரி: 395. ,முஸ்லிம்:3058)

3- பிறகு ஸபா, மர்வா வுக்கிடையில் (ஸஃயி செய்தல்) தொங்கோட்டம் ஓடுதல்,

அவைகளுக்கிடையே ஏழு தடவைகள் தொங்கோட்டம் ஓடுதல், அதனை ஸபாவில் ஆரம்பித்து, மர்வாவில் முடித்தல்.

4- தலை முடியை வழித்தல், அல்லது குறைத்தல்,

தொங்கோட்டம் முடிந்துவிட்டால் முடியை வழித்தல், அல்லது குறைத்துக் கொள்ளல். இதனுடன் உம்ரா நிறைவடையும், இஹ்ராத்தை கலைந்துவிட்டு, சாதாரண ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அவர்கள் கூறினார்கள:  நபி(ஸல்) அவர்கள் எனக்கு, இறையில்லம் கஃபாவை வலம்வந்துவிட்டு, ஸபா மர்வாவுக்கிடையே ஸஃயி செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்!’  எனக் கூறினார்கள்.  (புகாரி: 1795. ,முஸ்லிம்:3016)

ஹஜ் செய்வதற்கான ஒழுங்குகள்

  1. இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்தல்;

துல்ஹிஜ்ஜா மாதத்தின் எட்டாவது நாள் ளுஹா நேரத்தில்,முடிந்தால் குளித்தவராக தங்கியிருக்கும் இடத்தில் இருந்து இஹ்ராம் அணிந்த நிலையில், “லப்பைக ஹஜ்ஜன்” என்று கூறி பின்வருமாறும் கூறல்.

 ” لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ “

இஹ்ராம் அணிதல் முன்னால் பதியப்பட்ட ஹதீஸ் (ஸஹீஹுல் புகாரி: 1524. , 2860)

2. மினாவுக்கு செல்லல்,

பிறகு மினாவை நோக்கி சென்று, அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளை சேர்க்காமல் சுருக்கி தொழுவதுடன் அங்கு தரித்திருத்தல்.

அப்துல் அஸீஸ் இப்னு ருபை(ரஹ்) கூறினார்கள்:  நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8-ஆம் நாள் ளுஹர், அஸ்ர் தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கவர் ‘மினாவில்’ என்றார்கள். (புகாரி: 1653 , முஸ்லிம்:3226)

3. அறபாவில் தரித்தல்;

ஒன்பதாவது நாளிற்கான சூரியன் உதித்துவிட்டால் அரபாவை நோக்கி செல்லுதல், அங்கு ளுஹர், அஸ்ரை முற்படுத்தி சேர்த்தும் சுருக்கியும் தொழுதல், மேலும் கிப்லாவை முன்னோக்கி அதிகம் திக்ர், துஆவில் ஈடுபடுதல். மேலும் சூரியன் மறையும் வரை தரித்திருத்தல்.

இப்னு ஷிஹாப் கூறினார்கள்: இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘அறபாவில் தங்கும்போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?’ என ஹஜ்ஜாஜ் கேட்டபோது,  ‘ஸாலிம்’ அவர்கள் “நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் அரபா நாளில் நடுப்பகலில் தொழுதுவிடுவீராக!” என்று கூறியதும், உண்மைதான். (நபித்தோழர்கள் அறபாவில்) லுஹரையும் அஸ்ரையும் நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 1662)

ஸாலிம் (ரழி) அவர்கள், ஹஜ்ஜாஜிடம், நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் உரையைச் சுருக்கி (அறபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும் என்றார்கள். இப்னு உமர்(ரலி) அவர்கள்'(ஸாலிம்) உண்மையே கூறினார்’ என்றார்கள். (புகாரி: 1663)

4. முஸ்தலிபாவில் தங்குதல்;

சூரியன் மறைந்துவிட்டால் அறபாவிலிருந்து முஸ்தலிபாவிற்கு சென்று, அங்கு மஃரிப், இஷா, சுப்ஹு தொழுகைகளை தொழுதல், பிறகு சூரியன் உதிக்கும் நேரம் நெருங்கும் வரை திக்ர் துஆவில் ஈடுபடுதல். ஹஜ் செய்பவர் கல்லடிக்கும் இடத்தில் நெருக்கத்தைத் தாங்க முடியாத பலவீனமானவராக இருந்தால் அவர் இரவின் கடைசியில் மக்கள் நெருக்கத்திற்கு முன்னர் கல் அடிக்க மினாவிற்கு செல்வதில் தவறில்லை.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  அறபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிபாவுக்கு அருகிலுள்ள இடது புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை அமரச் செய்துவிட்டு, சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு வுழூச் செய்யத் தண்ணீர் ஊற்றினேன். சுருக்கமாக வுழூச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! தொழப் போகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிபாவில்) தான்’ எனக் கூறிவிட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிபா வந்ததும் தொழுதார்கள். (புகாரி: 1669, முஸ்லிம்:3146)

அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள்.  (புகாரி: 1674, முஸ்லிம்:3168)

ஸாலிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்:  அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (மினாவிற்கு) அனுப்பி விடுவார். மற்றவர்கள் முஸ்தலிபாவில் மஷ்அருல் ஹராம் என்னுமிடத்தில் இரவு தங்குவார்கள். அங்கு விரும்பியவாறு அல்லாஹ்வை நினைவு கூர்வர். பிறகு இமாம் முஸ்தலிபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்னமேயே இவர்கள் (மினாவுக்குத்) திரும்பி விடுவார்கள். அவர்களில் சிலர் பஜ்ருத் தொழுகைக்கு மினாவை அடைவர். இன்னும் சிலர் அதற்குப் பின்னால் வந்தடைவர். அவர்கள் அங்கு வந்ததும் ஜம்ராவில் கல்லெறிவர். பலவீனர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) கூறுவார்கள்.  (புகாரி: 1676)

5. மினாவில் ஜம்ராக்களுக்கு கல் எறிதல்;

பத்தாவது நாளிற்கான சூரியன் உதிக்கும் நேரம் நெருங்கிவிட்டால் முஸ்தலிபாவிலிருந்து மினாவிற்கு செல்லுதல்,

அம்ருப்னு மைமூன்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  உமர்(ரலி) முஸ்தலிபாவில் பஜ்ரு தொழுததை கண்டேன். அங்கு தங்கிய அவர், ‘இணைவைப்போர் சூரியன் உதயமாகும் வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை; மேலும் அவர்கள் ‘ஸபீரு மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்!’ என்றும் கூறுவார்கள்: ஆனால் நபி(ஸல்) அவர்களோ, இணை வைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்!’ என்று கூறிவிட்டு சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். (புகாரி: 1684)

பின்வரும் விடயங்களை செய்தல்;

A – ஜம்ரதுல் அகபாவிற்கு (அதுவே ஜம்ராக்களில் மக்காவிற்கு மிக நெருக்கமானது) ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கற்களை எறிதல், ஒவ்வொரு கல்லின் போதும் “அல்லாஹு அக்பர்” என்று கூறுதல்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  ‘நபி(ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிகிற வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்’ என பள்ல்(ரலி) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி: 1685. , முஸ்லிம்:3148)

B – (ஹத்யை) பலி மிருகத்தை அறுத்து, தானும் சாப்பிட்டு, ஏழைகளுக்கும் கொடுத்தல். இப்படி மிருகத்தை அறுப்பதென்பது உம்ராவை முடித்துவிட்டு (தமத்துஃ முறையில்) ஹஜ் செய்பவருக்கும், ஒரே இஹ்ராமில் இரண்டையும் சேர்த்து (கிரான் முறையில்) ஹஜ் செய்பவருக்கு கடமைகும்

 فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ.

(நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால்) ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை (தமத்துஃ) அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் – ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:196)

அபூ ஜம்ரா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜுத் தமத்துஃ பற்றிக் கேட்டேன். அவர் அதையே நிறைவேற்றுமாறு எனக்குக் கூறினார். பிறகு நான் அவர்களிடம், குர்பானி கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஒட்டகத்தை அல்லது மாட்டை அல்லது ஆட்டை பலியிடலாம்; அல்லது ஒரு (ஒட்டகத்தின் அல்லது மாட்டின்) பலியில் ஒரு பங்காளியாகச் சேரலாம்’ என்று கூறினார்கள். மக்களோ, ஹஜ்ஜுத் தமத்துஃவை வெறுத்தது போலிருந்தது. நான் உறங்கியபோது கனவில் ஒருவர் ‘(உம்முடைய) ஹஜ்(ஜில் குற்றம் ஏதுமில்லை: அது) ஏற்கப்படக் கூடியதே! தமத்துஃவும் ஏற்கப்பட்டது!’ என உரத்துக் கூவினார். உடனே நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து என் கனவைக் கூறினேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ் மிகப்பெரியவன்; அபுல்காஸிம் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையே இது!’ எனக் கூறினார்கள். (புகாரி: 1688)

C – முடியை வழித்தல், அல்லது கத்தரித்தல், வழித்தலே சிறந்தது, பெண்ணாக இருந்தால் விரல் நுனிப்பகுதி அளவு கத்தரித்தல்.

  وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ

அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; (2:196)

இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!’ எனக் கூறியதும் தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்’ என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்.. ‘ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) ‘   என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பின்படி ‘அல்லாஹ் தலையை மழித்துக் கொள்பவர்களுக்குக் கருணை புரிவானாக!’ என்று ஒரு முறையோ இரண்டு முறையோ கூறினார்கள் என உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது முறையில், ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்…’ எனக் கூறினார்கள் என உள்ளது.  (புகாரி: 1726,1727 , முஸ்லிம்)

இந்த மூன்று விடயங்களையும் கல்லெறிதல்,அறுத்துப் பலியிடல்,வழித்தல் என்ற அமைப்பில் முடிந்தால் செய்தல், வரிசையில் மாற்றம் ஏற்பட்டால் குற்றமில்லை.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் குற்றமில்லை! குற்றமில்லை! என்றனர். (புகாரி: 1721. ,முஸ்லிம்:3224)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் பலியிடுவது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ எனக் கூறினார்கள்.  (புகாரி: 1734)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு ‘குற்றமில்லை!’ என்றே பதில் கூறினார்கள். ஒருவர் ‘நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்!’ என்று கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது) பலியிடுவீராக!’ எனக் கூறினார்கள். பிறகு அவர் ‘நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்!’ என்றதும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள்.  (புகாரி: 1735)

குறிப்பு: இந்த மூன்று விடயங்களையும் செய்துவிட்டால், மனைவியை நெருங்குவதை தவிர்த்துள்ள இஹ்ராமுக்காக தடைசெய்யப்பட்ட அனைத்தும் அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிடும்,  இதனை ‘முதல் அனுமதி’ என்போம், எனவே இஹ்ராமை களைந்துவிட்டு சாதாரண ஆடை அணியலாம்.

உம்மு ஸலமா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த நாள் நீங்கள் கல் எறிந்துவிட்டா,ல் நீங்கள் மனைவி தவிர்ந்த தடைகளிலிருந்து நீங்குவது அனுமதிக்கப்பட்டுள்ளது, (அஹ்மத்:26573, அபூ தாவுத்:1999, இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு இஸ்ஹாக் எனும் முதல்லிஸ் இடம்பெற்றிருந்தாலும் அவர் ‘எனக்கு அறிவித்தார்’ என்ற பலமான சொல் கொண்டு அறிவித்துள்ளார்)

எதனைக் கொண்டு முதல் அனுமதி உண்டாகும் என்பதில் அறிஞர்கள் மூன்று கருத்துக்களில் கருத்துமுரண்பாடு கொண்டுள்ளனர், சிலர் ‘கல்லெறிதல், வழித்தல்,தவாப் ஆகிய மூன்றில் இரண்டைக் கொண்டு உண்டாகும்‘ என்றனர், இன்னும் சிலர் ‘ஜம்ரதுல் அகபாவிற்கு கல்லெறிவது கொண்டு உண்டாகும்‘ என்றனர், இன்னும் சிலர் ‘ கல்லெறிந்த பினனர் வழிப்பதன் மூலம் உண்டாகும், வழிப்பதற்கு முன்னர் எதுவும் அனுமதியாகாது‘ என்றனர். நாம் இங்கு தேர்வு செய்துள்ள கருத்து கருத்து வேற்றுமையில் இருந்து வெளியேற சிறந்த வழியாக இருக்கும் என்று கருதுகின்றேன், அல்லாஹு அஃலம்.

ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு இஹ்ராம் அணிவதற்காக  இஹ்ராம் அணிவதற்கு முன்னரும், அவர்கள் அனுமதி பெறுவதற்காக கஃபாவை தவாப் செய்வதற்கு முன்னரும் வாசணை பூசிவிடுபவராக இருந்தேன்,  (புகாரி:1539, முஸ்லிம்)

இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறினார்கள்: இன்னொரு அறிவிப்பில் ‘அவர்கள் அனுமதி பெறுவதற்காக கஃபாவை தவாப் செய்வதற்கு முன்னர் அவர்கள் அனுமதிபெற்றபோது வாசணை பூசிவிடுபவராக இருந்தேன்’ என்று வந்துள்ளது, எனவே இதில் ‘முதல் அனுமதி அகபாவுக்கு கல்லெறிந்து, வழித்த பின்னர் தவாபுக்கு முன்னர் உண்டாகும் என்பது தெளிவு, இது (புகாரி,முஸ்லிம்) பதிவு செய்யப்பட்டதாகும்.. (ஷரஹு முஸ்லிம், மஜ்மூஉ பதாவ உஸைமீன் ரஹ்)  

6-மக்காவுக்கு திரும்பி வந்து தவாப் செய்தல்,

பிறகு மக்காவுக்கு திரும்பி வந்து, தவாபுல் இபாளா (ஹஜ்ஜுக்கான தவாப்) செய்தல், பிறகு ஸபா, மர்வாவுக்கு இடையில் ஹஜ்ஜுக்கான ஸஃயு செய்தல். இதன் மூலம் ‘இரண்டாவது அனுமதி’ உண்டாகும், இதன் மூலம் மனைவியை நெருங்குதல் உற்பட அனைத்தும் அனுமதிக்கப்படும்.

இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (பத்தாம்) நாளில் தவாபுல் இபாளா செய்தார்கள், பிறகு திரும்பிவந்து மினாவில் லுஹரை தொழுதார்கள். (முஸ்லிம்)

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:  நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம், நஹருடைய (பத்தாவது) நாளில் தவாபுல் இபாளா செய்தோம், அப்போது ஸபிய்யா அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்தார்கள், நபியவர்களோ ஒரு கணவன் தன மனைவியிடம் விரும்புவதை செய்ய விரும்பினார்கள், அபோது நான் ;அல்லாஹ்வின் தூதரே அவர் மாதவிடாயுடன் இருக்கிறார்’ என்றேன், அதற்கு நபியவர்கள் ‘  அவரே எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுபவர்’ என்று கூற, ‘அவர் நஹ்ர் நாளில் தவாபுல் இபாளா செய்துவிட்டார்’ என்றனர், அப்போது நபியவர்கள் ‘வெளியேறுங்கள்’ என்று கூறினார்கள்.  (புகாரி)   

7-மீண்டும் மினாவுக்கு வருதல்,

ஹஜ்ஜுக்கான தாவாப், ஸஃயி முடிந்தவுடன் மீண்டும் மினாவிற்கு சென்று, பதினோராம், பன்னிரண்டாம் இரவுகளில் அங்கு தங்குதல்.

8-மீண்டும் ஜம்ராக்களுக்கு கல் எறிதல்,

அவ்விரண்டு நாட்களிலும் மூன்று ஜம்ராக்களுக்கும் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு கல் எறிதல், அதனை மக்காவிற்கு மிக தூரத்திலுள்ள ஜம்ரதுல் ஊலாவிலிருந்து ஆரம்பித்து, பின்பு ஜம்ரதுல் வுஸ்தாவிற்கும், பிறகு ஜம்ரதுல் அகபாவிற்கும் எறிதல், ஒவ்வொரு ஜம்ராவுக்கும் ஏழு கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எறிவதுடன்,ஒவ்வொன்றுடனும் தக்பீர் சொல்லுதல்.

ஜம்ரதுல் ஊலாவிற்கும், ஜம்ரதுல் வுஸ்தாவிற்கும் கல்லெறிந்த பின்னர் கிப்லாவை முன்னோக்கி துஆ செய்தல்.

இவ்விரு நாட்களிலும் சூரியன் உச்சியிலிருந்து சாய முன்னால் கல் எறிவது செல்லுபடியாகாது.

வபரா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  ‘நான் எப்போது கல்லெறிவது?’ என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘உம்முடைய தலைவர் எறியும்போது நீரும் எறியும்!’ என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, நாங்கள் சூரியன் உச்சி சாயும் வரை காத்திருப்போம்; பிறகு கல்எறிவோம்!’ எனக் கூறினார்கள். (புகாரி: 1746.)

அப்துர் ரஹ்மான் இப்னு யஸித்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஜம்ரத்துல் குப்ராவிடம் வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஃபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும் படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார். பிறகு ‘இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!’ என்று கூறினார்கள். (புகாரி: 1748.)

அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  ‘நான் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களுடன் இருக்கும்போது, ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். ‘ பிறகு அல்லாஹ்வின் மீது ஆணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந்தபடி) நின்றார்கள்!’ என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்கள். (புகாரி: 1750.)

ஸாலிம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடப்பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, ‘இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்!’ எனக் கூறுவார்கள். (புகாரி: 1751)

9-விரைந்து செல்லல், அல்லது தாமதித்தல்;

பன்னிரண்டாம் நாள் கல் எறிந்த பின் அவசரமாக செல்வதாக இருந்தால், சூரியன் மறைய முன்னர் வெளியேறுதல். தாமதித்து செல்ல விரும்பினால் (அதுவே சிறந்தது) பதின் மூன்றாவது நாளும் மினாவில் தங்கிவிட்டு, மூன்று ஜம்ராக்களுக்கும் இரண்டு நாட்களும் எறிந்தது போன்று அந்த நாளில் சூரியன் சாய்ந்த பிறகு கல் எறிதல்.

 وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ‌ؕ فَمَنْ تَعَجَّلَ فِىْ يَوْمَيْنِ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ ۚ وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَيْه‌ِ ۙ لِمَنِ اتَّقٰى ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.   (2:203)

10-தவாபுல் வதாஃ (பிரியாவிடை தவாப்);

திரும்பி செல்ல பயணத்தை விரும்பினால் பயணத்தின் போது கஃபாவை ஏழு தடவைகள் தவாப் செய்தல், இது தவாபுல் வதாஃவாகும். மாதவிடாய், நிபாஸ் ஏற்பட்ட பெண்களுக்கு தவாபுல் வதாஃ இல்லை.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: மக்களின் கடைசி முடிவாக கஃபாவை ஆக்கிக்கொள்ளுமாறு மக்கள் எனப்பட்டனர், ஆனாலும் மாதவிடாய் பெண்களுக்கு அது இலகுவாக்கப்பட்டது. (புகாரி)

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: மக்கள் எல்லா விதத்திலும் வெளியேறிக்கொண்டிருந்தனர், அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘தனது கடைசி முடிவாக கஃபாவை வலம்வராதவரை எவரும் போகக் கூடாது’ என்று கூறினார்கள்.  (அபூதாவூத்:, ஸஹீஹ்)

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:  நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம், நஹருடைய (பத்தாவது) நாளில் தவாபுல் இபாளா செய்தோம், அப்போது ஸபிய்யா அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்தார்கள், நபியவர்களோ ஒரு கணவன் தன மனைவியிடம் விரும்புவதை செய்ய விரும்பினார்கள், அபோது நான்; அல்லாஹ்வின் தூதரே அவர் மாதவிடாயுடன் இருக்கிறார்’ என்றேன், அதற்கு நபியவர்கள் ‘  அவரே எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுபவர்’ என்று கூற, ‘அவர் நஹ்ர் நாளில் தவாபுல் இபாளா செய்துவிட்டார்’ என்றனர், அப்போது நபியவர்கள் ‘வெளியேறுங்கள்’ என்று கூறினார்கள்.  (புகாரி)

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:  நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறையில்லம் கஃபாவையும் ஸஃபா, மர்வாவையும் வலம்வந்தார்கள். ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் தோழர்கள் அனைவரும் வலம்வந்தார்கள். பிறகு அவர்களில் பலிப்பிராணி கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டனர். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா வழிபாடுகளையும் செய்தோம்.

நபி(ஸல்) அவர்கள், முஹஸ்ஸப் என்னுமிடத்தில் தங்கியிருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய இரவில் நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்!’ என்றேன். அதற்கவர்கள், ‘நாம் மக்காவுக்கு வந்து சேர்ந்த இரவில் நீ வலம் வரவில்லைதானே!’ எனக் கேட்டார்கள். நான் ‘இல்லை!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீ உன்னுடைய சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்! மேலும் இன்னின்ன இடங்களில் என்னைச் சந்தித்துக் கொள்!’ எனக் கூறினார்கள். நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் சென்று உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தேன். அப்போது, ஸபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! நீ எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாய்! வலம்வந்துவிட்டாயல்லவா?’ எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் ‘ஆம்!’ என்றதும், ‘அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு!’ என்றார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்காவாசிகளுடன் மேலே ஏறும்போது அவர்களை சந்தித்தேன்; அப்போது நான் கீழே இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக் கொண்டிருந்தேன்; அவர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். (புகாரி: 1762)

குறிப்பு:

ஹஜ், உம்ரா செய்பவர் பேணவேண்டிய சில விடயங்கள்:

1) ஜமாஅத்தோடு நேரத்திற்கு தொழுவது போன்ற, மார்க்கக் கடமைகளில் கவனம் செலுத்தவேண்டும்.

2) அல்லாஹ் தடுத்திருக்கும் பாவம் செய்தல், கெட்ட விடயங்களில் ஈடுபடல், இல்லறத்தில் ஈடுபடல் போன்ற விடயங்களை கட்டாயம் தவிர்த்தல்.

அல்லாஹ் கூறுகிறான்:

فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلا رَفَثَ وَلا فُسُوقَ وَلا جِدَالَ فِي الْحَجِّ)(البقرة:197.

எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது;… (2:197)

3) ஏனையவர்களுக்க சொல்லாலோ, செயலாலோ தீங்குசெய்யாதிருத்தல்.

4) இஹ்ராத்திற்காக தடுக்கப்பட்ட அனைத்தையும் தவிர்த்துக்கொள்ளல். அந்த வகையில்;

  1. தனது முடியை கலைதல், நகத்தை நீக்குதல் கூடாது
  2. தனது ஆடையிலோ, உடம்பிலோ நருமணம் பூசாதிருத்தல். வாசனை சவர்க்காரத்தை தவிர்த்தல், இஹ்ராம் அணியும்போது பூசிய வாசனை ஆடையில் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தாது.
  3. தரைவாழ் உயிரினங்களை வேட்டையாடாதிருத்தல்.
  4. ஆசையுடன் மனைவியைத் தொடுவது, முத்தமிடுவது போன்றவற்றை தவிர்ப்பது, உடலுறவில் ஈடுபடுவது மிகக் கடுமையானது.
  5. திருமணம் முடிப்பதையும், முடித்துவைப்பதையும், தனக்கோ மற்றவர்களுக்கோ அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையும் தவிர்த்தல்.
  6. கையுரை அணிவதைத் தவிர்த்தல். ஆனால் புடவைகளால் கையை சுற்றிக் கொள்வது குற்றமில்லை.

முன்னால் கூறப்பட்டவை இரு பாலாருக்கும் பொதுவானவை.

ஆண்களுக்கு மாத்திரம் தடுக்கப்பட்டவை!

  1. தலையை மூடாதிருத்தல், குடை பிடிப்பதோ, கூடாரங்களின் கூரைகளால் தலை மறைபடுவதோ, தலைகளில் சுமைகளை சுமப்பதோ பாதிப்பில்லை.
  2. சுற்றித் தைக்கப்பட்ட மேலாடை, தலைப்பாகை, தொப்பி, காட்சட்டை, சப்பாத்து போன்றவற்றை அணியக்கூடாது, வேட்டி இல்லாதவர் காட்சட்டை அணிவதும், பாதணி இல்லாதவர் சப்பாத்து அணிவதும் தவறில்லை.
  3. பாதணி, மோதிரம், மூக்குக் கண்ணாடி போன்றவற்றை அணிவதும், கடிகாரம் கட்டுவதும், பணப் பைகளை கட்டிக்கொள்வதும் தவறில்லை. 
  4. வாசனை இல்லாதவற்றைக் கொண்டு சுத்தம் செய்வதும், குளிப்பதும், உடம்பை தலையை தேய்ப்பதும் அனுமதிக்கப்பட்டதே, தலையை சொரியும் போது தேய்க்கும் போது முடிகள்  நாட்டமின்றி உதிர்நதால் அது பாதிப்பாகாது.

பெண்களுக்கு தடுக்கப்பட்டது;

  1. பெண்கள் முகத்திரை அணியக்கூடாது, அந்நிய ஆண்கள் இல்லாத நிலையில் இஹ்ராம் அணிந்த நிலையில் முகத்தை திறந்திருப்பதே சுன்னாவாகும்.

இவைதான் ஹஜ் உம்ராவுக்கான சுருக்கமான சட்டதிட்டங்களாகும். இவற்றை அறிந்து நல்லமுறையில் இபாதத்தை முடிக்க வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக!!!

உம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்;

1- உம்ராவுக்கு இஹ்ராம் அணியும்போது

(முஸ்லிம்)   لَبَّيْكَ اللَّهُمَّ بِعُمْرَةٍ              

2- ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணியும்போது

     (முஸ்லிம்)        لَبَّيْكَ اللَّهُمَّ بِحَجَّةٍ           

3- தவாபை ஆரம்பிக்கும் போதும், ஹஜருல் அஸ்வதுக்கு நேராக வரும்போதும் கையால் சைகை செய்து விட்டு

(புஹாரி)  اللَّهُ أَكْبَرُ          

{{ இப்னு உமர் ரலி அவர்கள் ‘பிஸ்மில்லாஹ்’ என்றும் சொல்வார்கள் என்று அவர்களது செயலாக பதியப்பட்டுள்ளது, அது அவர்களது இஜ்திஹாதாக இருக்கலாம், நபிகளாரைத் தொட்டு பதியப்படவில்லை. (அல்லாஹு அஃலம்)}}

4- தவாபில் ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில்

(அபூதாவுத், இப்னு ஹிப்பான்)  اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا   عَذَابَ النَّارِ  

5- ஸஃயு செய்ய ஆரம்பிக்கும்போது

(முஸ்லிம்)  إِنَّ الصَّفَا والْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ  -أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ

6- ஸபா, மர்வாவின் மீது எரிய நிலையில் பின்வரும் துஆவை கிப்லாவை முன்னோக்கி சொல்லுதல்

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، (முஸ்லிம்)      وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَه

7- மினாவிலிருந்து அரபாவுக்கு செல்லும் போது தக்பீர், அல்லது தல்பியா சொல்லுதல்

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ

அல்லது

(முஸ்லிம்)   اللَّهُ أَكْبَرُ 

8- மஷ்அருல் ஹராமில் கிப்லாவை முன்னோக்கி, திக்ரை செய்துவிட்டு துஆ கேட்டல்

(முஸ்லிம்)  لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

9- ஜம்ரதுல் அகபாவிற்கு கல் அடிக்கும் வரை தல்பியா சொல்லுதல்

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ

10- ஜம்ராக்களுக்கு கல் அடிக்கும் போது ஒவ்வொரு கல்லின் போதும் தக்பீர் சொல்லுதல், இரண்டு ஜம்ராக்களுக்கு கல் அடித்தபின் கிப்லாவை முன்னோக்கி துஆ கேட்டல்

(புஹாரி) اللَّهُ أَكْبَر

மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியை தரிசித்தல்:-

A – ஹஜ் செய்வதற்கு முன்னரோ பின்னரோ மதீனாவுக்கு சென்று, மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதும், அங்கு தொழுவதும் அனுமதிக்கப்பட்டதே, ஏனெனில் அங்கு தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் தவிர்த்துள்ள ஏனைய மஸ்ஜித்களில் தொழுவதைவிடவும் ஆயிரம் தொழுகைகளைவிட சிறந்ததாகும். அடுத்து தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட மஸ்ஜிதுகள் மூன்றில் ஒன்றாகும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மூன்று மஸ்ஜிதுகளுக்கே அன்றி பயணம் நாடிச் செல்லக்கூடாது, அல்மஸ்ஜிதுல் ஹராம், எனது இந்த மஸ்ஜித் (மஸ்ஜிதுன் நபவி), அல்மஸ்ஜிதுல் அக்ஸா.  (புகாரி:1864, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த மஸ்ஜிதில் (மஸ்ஜிதுன் நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் தவிர்த்துள்ள மஸ்ஜிதுகளில் ஆயிரம் தொழுகைகளை தொழுவதைவிடவும் சிறந்ததாகும்.  (புகாரி:1190 , முஸ்லிம்)

சந்தர்ப்பம் கிடைத்தால் ரவ்ளா எனும் இடத்தில் அமர்ந்து வண்ணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது வீட்டுக்கும் மிம்பருக்கும் இடையில் சுவனத்து சோலைகளில் ஒரு சோலை இருக்கின்றது.  (புகாரி:1196,முஸ்லிம்)

B – மஸ்ஜிதுக்கு சென்றால் மஸ்ஜிதின் காணிக்கையாக இரண்டு ரக்அத்துக்களை, அல்லது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டிருந்தால் அத்தொழுகையை தொழுதல்.

C – பிறகு நபிகளாரின் கப்ரை தரிசிக்கலாம், ஆனால் அதற்காக பயணம் போகக்கூடாது, அடுத்து பொதுவாக கப்ருகளை மையவாடிகளை தரிசித்தல் என்ற அடிப்படையில் வைத்து கொள்ளவேண்டும்.

நபிகளாரின் கப்ருக்கு முன்னால் நின்று ‘அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபி, வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ், என்றோ பொதுவாக வந்திருக்கும் கப்ரு ஸியாரத்துக்கான துஆவையோ சொல்லல்.

அதேபோன்று அபூ பக்ர், உமர் ரலி ஆகியோருக்கும் ஸலாம் கூறி பொதுவான துஆவை சொல்லலாம்.

D – மஸ்ஜிதுல் குபாவுக்கு சென்று அங்கும் தொழலாம், அதுவும் சிறப்புக்குரியதே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது வீட்டில் வுழூ செய்து, அதனை அழகாக செய்து, பிறகு குபாஃ மஸ்ஜிதுக்கு வந்து, அதில் தொழுகின்றாரோ அது ஒரு உம்ரா செய்தது போன்றாகும்.  (இப்னு மாஜா:1412)

E – பகீஃ மையவாடிக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்போருக்காக துஆ செய்யலாம், கப்ரு ஸியாரத்திற்கென்று காட்டித்தரப்பட்டிருக்கும் துஆவை சொல்லிக்கொள்வது போதுமானது,

முன்னால் கூறப்பட்ட இடங்களில் நபிகளாரிடம், நபித்தோழர்களிடம் துஆ செய்வதோ, அவர்களை முன்னிறுத்தி வஸீலா தேடுவதோ, பித்அத்தான விடயங்களை செய்வதோ முற்றாக தவிர்க்கப்பட்ட வேண்டும்.

F – உஹதுக்கு சென்று அங்கிருக்கும் கப்ருகளையும் தரிசிக்கலாம், அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடி துஆ செய்யலாம், அங்கும் மார்க்கத்திற்கு முரணான காரியங்ககளை செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

கப்ருகளை தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய துஆக்கள்:

السَّلامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤمِنينَ، وأَتَاكُمْ مَا تُوعَدُونَ، غَدًا مُؤَجَّلُونَ، وإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ، اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ (முஸ்லிம்) بَقِيعِ الغَرْقَدِ 

السَّلامُ عَلَيكُمْ أَهْلَ الدِّيارِ مِنَ المُؤْمِنِينَ والمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ، أَسْأَلُ اللَّه لَنَا وَلَكُمُ العافِيَةَ  (முஸ்லிம்)      

السَّلَامُ عَلَيْكُمْ أهْلَ الدِّيَارِ، مِنَ الـمُؤْمِنِينَ، والـمُسْلِمِينَ، وَإنَّا إنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ، وَيَرْحَمُ اللَّهُ الـمُستَقْدِمينَ مِنَّا (முஸ்லிம், இப்னு மாஜா)  والـمُستأخِرينَ أسألُ اللَّهَ لنَا وَلَكُمُ العَافِيَةَ

(திர்மிதி) السَّلامُ عَلَيْكُمْ يَا أَهْلَ القُبُورِ، يَغْفِرُ اللَّهُ لَنا وَلَكُمْ، أَنْتُم سَلَفُنا ونَحْنُ بالأَثَرِ

குறிப்பு;

  • முன்னால் குறிப்பிடப்பட்ட இடங்களில் கப்ருகளை முன்னோக்கி நமது தேவைகளை அவர்களிடம் கேட்பதோ, அவர்களை முன்னிறுத்தி வஸீலா தேடுவதோ ஷிர்க்கை ஏற்படுத்தும் காரியங்களாகும், அடுத்து கப்ரடியில் செய்யக்கூடாத பித்அத்தான ‘யாசீன் ஓதல், குர்ஆன் ஓதல், திக்ரு செய்தல் போன்ற’ காரியங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உம்மு ஹபீபா, உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் நபிகளாரிடம் தாம் ஹபஷாவிலே கண்ட உருவப்படங்கள் உள்ள வணக்கஸ்தலம் பற்றி எடுத்துக் கூறினர், அப்போது நபியவர்கள்: ‘நிச்சியமாக அவர்கள் இருக்கின்றார்களே அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது கப்ருக்கு மேல் ஒரு மஸ்ஜிதை (வணக்கஸ்தலத்தை) கட்டி, அந்த உருவப்படங்களை அதில் உருவப்படுத்துவார்கள், அவர்கள்தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் படைப்பில் மிக மோசமானவர்கள்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஆஇஷா இப்னு அப்பாஸ் ரலி ஆகியோர் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது, அவர்களது முகத்தில் ஒரு துணி போடப்பட்டிருக்கும், மயக்கம் தெளிந்தால் தன் முகத்தை விட்டும் அதனை விலக்கிவிட்டு, ‘யூதரக்ள், நஸாராக்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும், அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தளங்களை மஸ்ஜிதுகளாக (வணக்கஸ்தலங்களாக) ஆக்கினர்’ என்று கூறி அவர்கள் செய்ததை எச்சரித்தார்கள்.  (புகாரி:முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது வீடுகளை மையவாடிகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள், நிச்சியமாக ஷைதான் சூரத்துல் பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து விரண்டோடுகின்றான். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகையில் ஒரு பகுதியை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள், அவைகளை கப்ருகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.  (புகாரி, முஸ்லிம்)

இந்த நபி மொழிகளை நன்றாக சிந்தித்தால் வீடு என்பது குர்ஆன் ஓதுவதற்கும் தொழுவதற்கும் தகுதியான இடம் என்பதும், மையவாடிகள் என்பது குர்ஆன் ஓதுவதற்கும் தொழுவதற்கும்  தகுதியற்ற இடம் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. எனவே மையவாடிகளில் தொழுவதோ குர்ஆன் ஓதுவதோ தவிர்க்கப்பட வேண்டியதே. அல்லாஹு அஃலம் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால் அது தட்டப்படும், ஏற்கப்படமாட்டாது. (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எங்களது ஏவல் (வழிகாட்டல்) இல்லாத ஒரு அமலை யாராவது செய்தால் அது ஏற்கப்படமாட்டாது. (முஸ்லிம்)

  • இவைகள் மதீனா செல்வோருக்காக சொல்ல வேண்டிய அறிவுரைகள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டவை, மாறாக ஹஜ், உம்ரா செல்வதற்கோ, மதீனா சந்திப்புக்கோ, நபிகளாரின் கப்ரு ஸியாரத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை என்பதையும் நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது பற்றி வந்திருக்கும் செய்திகள் பலவீனமானவைகளே.

நபிகளாரின் கப்ரை ஹாஜிகள் தரிசிப்பது பற்றி வரும் நபி மொழியும் அதன் பலவீனத் தன்மையும்;

யார் ஹஜ் செய்துவிட்டு, என்னை சந்திக்க (தரிஸிக்க) வில்லையோ அவர் என்னை வெறுத்துவிட்டார். இதை ஒரு செய்தியாக பைஹகீ, இப்னு ஹிப்பான் போன்றோர் ‘மஜ்ரூஹீன்’ (விமர்சிக்கப்பட்டவர்களின் தொகுப்பு) எனும் நூழிலும், இப்னு அதி அவர்கள் ‘காமில்’ எனும் நூலிலும், தாரகுத்னி அவர்கள் ‘இலல்’ எனும் நூலிலும்  இப்னு உமர் ரலி அவர்கள் வழியாக பதிந்துள்ளனர். அதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமான அறியப்படாதவர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்னு அப்தில் ஹாதி அவர்கள் ‘இது அடிப்படையற்ற, மிகவும் நிராகரிக்கப்பட்ட, பொய்யான  செய்தி’ என்றும், இமாம் தஹபீ ‘இது இட்டுக்கட்டப்பட்டது’ என்று ‘மீஸான்’ எனும் நூலிலும் கூறியுள்ளனர்.

இன்னும் இதே கருத்தில் வரும் பின்னால் பதியப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் மிகவும் பலவீனமானவைகளே. ஷாபி மத்ஹபு அறிஞர் இப்னு ஹஜருல் அஸ்கலானி ரஹ் அவர்கள் ‘தல்கீஸ்’ எனும் நூலில் இவை போன்றவைகளை பதிந்துவிட்டு ‘இவை அனைத்தின் அறிவிப்பாளர் தொடர்களும் பலவீனமானவை’ என்று கூறியுள்ளார்கள்.

எனது மரணத்தின் பின்னர் என்னை தரிசிப்பவர் என்னை உயிரோடு தரிசித்தவர் போன்றாவார்.

என்னையும் (கப்ரு) என் தந்தை இப்றாஹீமையும் ஒரே ஆண்டில் யாராவது தரிசித்தால் அவருக்கு சுவனம் கிடைக்க நான் பொறுப்பு நிற்பேன்.

யார் எனது கப்ரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை (ஷபாஅத்) கட்டாயமாகும்.  

அல்ஹாபிழ் உகைலீ அவர்களும் ‘இந்த பாடத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை’ என்று கூறுகின்றார்கள்.

(அல்லாஹு அஃலம்)

இத்துடன் எமது இந்த சிறிய ஹஜ், உம்ரா வழிகாட்டல் தொகுப்பை நிறைவு செய்கிறேன், இது ‘كيف يؤدي المسلم مناسك الحج والعمرة” என்ற இமாம் உஸைமீன் ரஹ் அவர்களின் சிறு தொகுப்பை முன்வைத்து, ஆதாரங்களுடனும் சில மாற்றங்களுடனும்  இலகுவாக புரிந்து கொள்ளும் விதத்தில் தொகுக்கப்பட்டதாகும்.

இதில் குர்ஆன் சுன்னாவுக்கு நேர்படாக நான் எழுதியது அல்லாஹ்வின் அருளை சாரும், எனது எழுத்தில் தவறுகள் இருப்பின் அது என் கவனயீனத்தை சாரும், வாசிப்பவர்கள் ஒன்றில் அதை திறுத்திவிட எனக்கு உதவி செய்யுங்கள், அல்லது அல்லாஹ் என்னை குற்றம் பிடிக்காமல் இருக்க உங்களது பாவமன்னிப்பில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: சந்தேகங்கள், தெளிவின்மைகள் இருப்பின் கொமன்ஸில், அல்லது ‘உங்கள் கேள்விகள்’ பகுதியில் வினவினாள் பொருத்தமாக இருக்கும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

இவ்வண்ணம்;-

M S M MURSHID BIN SHAREEFUD DEEN ABBAASI

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *