இரு பெருநாட்களின் சட்டங்கள்

இரு பெருநாட்களின் சட்டங்கள்:

பெருநாளைக்கான குளிப்பு:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளைக்காக ஒரு குளிப்பைக் காட்டித் தந்தார்களா என்றால் அதற்கான எந்த ஸஹீஹான சான்றுகளையும் பார்க்கமுடியவில்லை, எனவே அந்த நாளைக்காக குளிப்பது சுன்னத்தாகாது. மேலும் சுன்னத்து இல்லை என்றாகிவிட்டால் குளிப்பு வசதியைக் காட்டி தொழுகையை பிற்படுத்துவதும் நல்லதல்ல.எனவே ஒவ்வொரு மனிதரும் தன் வசதிக்கேற்ப விறும்பினால் குளிக்கலாம்.

அந்த தினத்திற்காக அழகான ஆடைகளை அணிதல்;

பெருநாளை கொண்டாடும் முகமாக புதிய, அழகான ஆடைகளை அனிவதும் நபி வழியில் அனுமதிக்கப்பட்டதே.

  • அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்: கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்’ எனக் கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை எடுத்துக் கொண்டு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதை நீர் விற்றுக் கொள்ளும்! அல்லது இதன் மூலம் உம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்!” என்று கூறினார்கள்.  (புஹாரி: 948, முஸ்லிம்)

அந்த நாளில் முதலாவது செய்ய வேண்டியது பெருநாள் தொழுகையே.

பெருநாள் தினங்களில் முதல் கடமை தொழுகைதான் ஏனெனில் நபியவர்கள் அன்றைய தினத்தில் முதல் வேலையாக அதனையே செய்திருக்கின்றார்கள்.

  • பராஃ(ரலி) அறிவித்தார்கள்: “நாம் இன்றைய தினத்தில் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்” என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (புஹாரி: 951, முஸ்லிம்)

நோன்புப் பெருநாளாக இருந்தால் சாப்பிட்டு விட்டு செல்வதும், ஈத்தம் பழங்களை ஒற்றைப் படையாக சாப்பிடுவதும் சுன்னத்தாகும்.

  • அனஸ்(ரலி) அறிவித்தார்கள்: சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.

மேலும் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  (புஹாரி:953)

பெருநாள் தொழுகை எங்கு தொழுவிக்கப்பட வேண்டும்?

அத்தொழுகையை பள்ளியில் தொழுவிப்பதென்பது நபிவழியில் இல்லாத ஒரு விடையமாகும், அதேநேரம் நபியவர்கள் (முஸல்லாவில்) திறந்த வெளி, தொழும் திடல் போன்றவற்றிலேயே தொழுதுள்ளார்கள், திடலுக்கு செல்லும் போது சுத்ராவுக்காக (தொழுபவர் தன் முன்னே வைக்கும் மறைப்பு) வைக்கப்படும் தடியும் சுமந்து செல்லப்பட்டதாம் நபிகளார் காலத்தில். மலைக்காக நபியவர்கள் பள்ளிக்குள் தொழுவித்ததாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அது பலவீனமானதாகும்.

மேலும் அறிவுரை செய்வதற்கு முன் தொழுவிக்கவும் வேண்டும். மேலும் அந்த உரையை நபியவர்கள் காலத்தில் மிம்பர் மேடையில் ஏறிச் செய்ததற்கும், இரு கொத்பாகள் ஓதி இடையி (ஜும்ஆவில் போன்று) அமர்வதற்கும் எந்த ஆதரங்களும் வரவில்லை.

பெருநாள் திடலுக்கு மிம்பரை முதலில் அறிமுகப்படுத்தியவர் மர்வான் என்ற மதீனத்து கவர்னரே.

  • அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்க முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் ‘நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது’ என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாகமிகச் சிறந்ததாகும் என கூறினேன். அதற்கு மர்வான் ‘மக்கள் தொழுகைகுப் பிறகு இருப்பதில்லை’ எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.  (புஹாரி: 956, முஸ்லிம்)
  • முஸ்லிமின் ௮89- அறிவிப்பில் மூன்று விடுத்தங்கள் ‘நான் அறிந்ததைவிட நல்லதை கொண்டுவர முடியாது’ என்று கூறிவிட்டு திறும்பிப் போய்விட்டார்கள். என்று வந்துள்ளது.
  • அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள். (புஹாரி: 957)
  • இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப் பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்) தொழுவார்கள். (புஹாரி: 973)

பெண்கள் அதில் கலந்து கொள்ளல்;

பெண்களைப் பொறுத்தவரை அவர்களும் கூடாரத்தில் மறைந்து வாழும் கண்ணிப் பெண்களும், மாதவிடாய் காலத்து பெண்களும், முழுக்கவும் மறைக்க ஆடை இல்லாத பெண்களும் அதில் கலந்து கொள்ளவேண்டும். மாதவிடாய் காலத்து பெண்கள் தொழுகையில் மாத்திரம் ஒதுங்கியிருப்பார்கள்.

  • உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள்.  (புஹாரி: 974)
  • முஸ்லிமின் ௮90- அறிவிப்பில் ‘கண்ணிப் பெண்களையும், கூடாரத்தில் மறைந்திருக்கும் பெண்களையும், மாதவிடாய்ப் பெண்களையும் வெளியேற்றுமாறு ஏவப்பட்டோம், அப்பொது நான் : அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவருக்கு முழுக்கவும் மறைக்கும் ஆடை இல்லை என்றால் என்ன செய்வது என்று கேட்டேன்? அதற்கு நபியவர்கள்: தன் சகோதரி அவளுக்கு ஆடை அணிவிக்கட்டும்’ என்று கூறினார்கள். என்று வந்துள்ளது.

அதில் சிறுவர்கள் பங்கு கொள்ளுதல்;

பெருநாள் தொழுகையில் சிறுவர்கள் கலந்து கொள்வதும் அனுமதிக்கப்பட்டதே!

  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்: நான் (சிறுவனாக இருக்கும் போது) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் (பகுதிக்கு) வந்து அவர்களுக்குப் போதனையும் அறிவுரையும் வழங்கினார்கள். தர்மம் செய்யுமாறும் அவர்களை வலியுறுத்தினார்கள். (புஹாரி: 975)
  • அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்கள்: நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்ததுண்டா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஆம்! (நபி(ஸல்) அவர்களுடன்) நெருக்கமான உறவு எனக்கு இல்லாவிட்டால் நான் சிறுவனாக இருந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது’ என்று கூறிவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் கஸீர் இப்னு ஸல்த் என்பவரின் இல்லத்தினருகில் இருந்த அடையாளத்திற்கு வந்தார்கள். பிறகு தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்களிடம் வந்தார்கள். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார்கள். பெண்களுக்குப் குனிந்து தம் கைகளால் பிலாலுடைய துணியில் பொருட்களைப் போட்டதை பார்த்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) உடன் தம் இல்லத்திற்கு புறப்பட்டனர்’ என்றார்கள்.  (புஹாரி: 977)

பெண்களுக்கு தனி உரை;

பெருநாள் உரையைப் பொறுத்தவரை ஆன்களுக்கு உரை நிகழ்த்திவிட்டு, பெண்கள் இருக்கும் இடத்திட்குச் சென்றும் ஓர் உரை நிகழ்த்தலாம்.

  • ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்திவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடித்து இறங்கிப் பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் சாய்ந்து கொண்டு அவர்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போடலானார்கள். (புஹாரி: 978, முஸ்லிம்)
  • அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கன் நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். ‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!” என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமகா இருப்பதை பார்த்தேன்!” என்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் இந்நிலை?’ எனப் பெண்கள் கேட்டதும், ‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்: கணவனுக்கு நன்றி கெட்டு நடக்கின்றீர்கள். என்று கூறினார்கள்.  (புஹாரி: 1462, முஸ்லிம்)

அதற்காக பாங்கு இகாமத் சொல்லப்படமாட்டாது, முன் பின் சுன்னத்துக்களும் கிடையாது;

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெருநாள் தொழுகைக்காக பாங்கு இகாமத் சொல்லப்படவில்லை, மேலும் முன் பின் சுன்னத்துக்களும் தொழவில்லை.

  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது. (புஹாரி: 959)
  • ஜாபிர்(ரலி) கூறினார்கள்: நான் நபியவர்களோடு நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் கலந்து கொண்டேன், அதற்காக பாங்கு,இகாமத் சொல்லப்பட்டதில்லை…(முஸ்லிம்:885, 887)
  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலாலும் சென்றனர்.  (புஹாரி: 989,முஸ்லிம்)

பெருநாள் தினத்தில் தக்பீர் சொல்லுதல்.

  •  உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

தக்பீர் என்று சொல்லும் போது அது ‘அல்லாஹு அக்பர்’ என்பதையே குறித்து நிற்கும். மேலும் நபி (ஸல்) அவர்கள் பெருநாளைக்காக இப்படித்தான் தக்பீர் கூறினார்கள் என்று வராததனால் அல்லாஹு அக்பர் என்று கூறுவதே போதுமானது.

الله أكبر الله أكبر الله أكبر

மேலும் சில நபித்தோழர்களைத் தொட்டு சில வார்த்தைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد

பாதையை மாற்றிய நிலையில் வீடு திறும்புதல்;

பெருநாள் தொழுகைக்கு செல்பவர் செல்லும் போது ஒரு வழியால் செல்வதும், திறும்பும் போது மாற்று வழியைப் பயண்படுத்துவதும் நபிவழியாகும்.

  • ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்: பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். (புஹாரி: 986)

பெருநாளை முறையாக கழிப்பது எப்படி?

சிறுமிகளை வைத்து பாடல்கள் படிப்பதும், துfப் போன்றவற்றை பாவிப்பதும் ஆகுமானதே.

  • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்: என் அருகே இரண்டு சிறுமியர் ‘தஃப்’ எனும் ‘கொட்டு’ அடித்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும் விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி ‘அபூ பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்” என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.  (புஹாரி: 987, முஸ்லிம்)
  • மேலும் புகாரியின் -952- அறிவிப்பில்; ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் பெருநாள் இருக்கின்றது, இது எமது பெருநாளாகும். என்று கூறியதாக வந்துள்ளது.

இஸ்லாம் அனுமதித்த முறையில் விளையாட்டுக்களை விளையாடுதல், போட்டிகளை ஏற்படுத்தல் அனுமதிக்கப்பட்டதே.

  • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்: ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ ‘நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ‘அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது ‘உனக்குப் போதுமா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.  (புஹாரி: 950, முஸ்லிம்)

ஜும்ஆவும் பெருநாளும் ஒரே தினத்தில் வருவது!

ஒரே நாளையில் இரண்டும் வந்துவிட்டால் பெருநாளைத் தொழுதால் போதுமானதே, அவர் ஜும்ஆ தொழ வேண்டியதில்லை, ஆனாலும் பள்ளியில் ஜும்ஆ நடத்துவது அவசியமாகும்.

  • நபிகளாரின் காலத்தில் ஒரு நாள் ஜும்ஆவும் பெருநாளும் ஒரே நாளில் வந்தது, அப்போது நபியவர்கள்: இன்றைய தினத்தில் இரண்டு பெருநாட்களும் ஒன்றாக வந்திருக்கின்றன, எனவே விறும்பியவருக்கு ஜும்ஆவை விட பெருநாள் தொழுகையே போதுமானது, ஆனாலும் நாம் ஜும்ஆ நடத்துவோம். என்று கூறினார்கள்.  (அபூதாவுத்: 1073)

 பெருநாளில் தவிர்க்க வேண்டியவை

பெருநாளின் ஒழுக்கங்களை பார்த்த நாம், அதில் செய்யக்கூடாத காரியங்களையும் விளங்கி வைக்க வேண்டும், அப்பொதுதான் பெருநாளை சரியான முறையில் கழிக்கலாம்.

1- பெருநாட்களின் இரவுகளை நின்று வணங்குவதன் மூலம் ஹயாத்தாக்குதல், உயிர்பித்தல்.

இதற்கு ஒரு ஹதீசை ஆதாரமாக முன் வைப்பார்கள், அது மிகவும் பலவீனமான ஒரு செய்தியாகும்.

  • ” யார் fபித்ருடைய அள்ஹாவுடைய இரவுகளை உயிர்பிக்கின்றாரோ, அவரது உள்ளம், உள்ளங்கள் மரணிக்கும் நாளையில் மரணிக்காது.” (தப்ரானி) இந்த அறிவிப்பில் உமரிப்னு ஹாரூன் என்பவர் இடம் பெறுகின்றார், அவர் மிகப் பலவீனமானவராவார், இப்னு மஈன் எனும் அறிஞ்ஞர் கூறும் போது ‘அவர் பொய்யன்’ என்று கூறியுள்ளார்கள். எனவே இதனைக் கொண்டு சட்டம் வணக்கம் உருவாக்க முடியாது.

2- அன்றைய தினத்தில் மையவாடிகளுக்குச் சென்று கப்ருகளை சியாரத் செய்தல். இதற்கு நபி வழியில் எந்த ஆதரங்களும் இல்லை. எனவே அது ஒரு பித்அத்தான செயலாகும்.

3- வீன்விரையத்தை தவிர்த்தல். ஆடை வாங்குவதனாலும், உணவு சமைப்பதானாலும் வீன்விரையம் வந்து விடாமல் கவனமாக இருப்பதோடு, பட்டாசு போன்றவற்றை கொளுத்துவது போன்ற வெளிப்படையான வீன்விரையங்களை முற்றாக தடுத்தல்.

  • இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.  (17:26,27)
  • ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (07:31)

4- சிறுவர்கள் வீடு வீடாகச் சென்று பெருநாள் ஹதியா வேண்டுவது. இது வெளிப்படையாகவே பிச்சைக் கேற்பதாகும். இஸ்லாம் பிச்சைக் கேட்பதை மூன்று காரணிகளுக்காகவேயன்றி முற்றாகத் தடுத்துள்ளது, மேலும் மறுமை குற்றத்திற்கு ஆளாக்கும் விடையமாகவும் இஸ்லாம் கூறியுள்ளது.

  • நபி (ஸல்) அவர்கள் கபீஸா என்ற தோழரைப் பார்த்து “கபீஸாவே! மூன்று மனிதர்களுக்கே தவிர யாசகம் கை நீட்டிக் கேட்பது கூடாது; சமூகத்தின் சுமையை சுமந்தவர் கேட்பது கூடும், தேவை முடிந்துவிட்டால் அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும், மற்றொருவர், அவருக்கு ஒரு அழிவு ஏற்பட்டுள்ளது, அவர் தனக்கு போதுமான வாழ்க்கைச் செலவை கேட்க முடியும், மூன்றாமவர், ஒரு கஷ்டவாளி, சமூகத்தில் அறிவுள்ள மூன்று பேரால் அவர் யாசகம் கேட்கத் தகுதியானவர் என்று உறுதிபடுத்தப்பட்டவர், அவரும் தனக்குத் தேவையான அளவை அடையும் வரை கேட்பார். இந்த மூன்று காரணங்களுக்கல்லாமல் கேட்பது ஹராத்தை சாப்பிடுவதாகும்.” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1044)
  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…”(புஹாரி: 1474, முஸ்லிம்)

5- படம், நாடகம் பார்த்தல், போதை வஸ்துக்களைப் பாவித்தல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், கலியாட்டங்களில் ஈடுபடுதல், ஆண் பெண் கலப்பு ஏற்படும் விதத்தில் சந்தோசம் கொண்டாடுதல் போன்ற பவமான காரியங்களில் இடுபடுவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

  • (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். 31.இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;…(24:30,31)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும், உலகில் அவற்றை பாவித்தவர்களுக்கு அல்லாஹ் நரக வாசிகளின் உடலில் இருந்து வடியும் சீல், சலத்தை பாணமாக புகட்டுவான்.  (முஸ்லிம்: 2002)
  • ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?  (5:90,91)

எனவே!! பெருநாளின் சட்ட திட்டங்களையெல்லாம் விளங்கி சரியான முறையில் பெருநாளை கொண்டாடி அல்லாஹ்விடம் பூரண கூழியை பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிப்போம். அல்லாஹ் அதற்கு நம் அனைவருக்கும் துணை புரிவானாக!!

வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.

M.S.M MURSHID ABBASI

Related Posts

3 thoughts on “இரு பெருநாட்களின் சட்டங்கள்

    1. நான் அறிந்த வரையில் அது ஸஹீஹாகவே இருக்கின்றது.
      அது லைஈப் என்பதற்கு அவர் முன்வைக்கும் காரணங்களைக் கேட்டு பதிவு செய்யுங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம்.
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *