ஈமான் என்ற சொல்லுக்கு எதிரான சொற்களின் விளக்கங்கள். :

             குப்ர் كفر,                    ஷிர்க்  شرك,                    நிfபாக்  نفاق ,                    ளலாலத் ضلالة, ரித்தத் الردة

A-  குப்ர் என்பது மறைப்பது, என்ற கருத்தையும், காபிர் என்றால் மறைப்பவனையும் குறிக்கும் பதங்களாகும். யார் ஈமானின் ஒரு அடிப்படையை அல்லது இஸ்லாத்தின் ஒரு அம்சத்தை மறுக்கின்றாரோ அவன் காபிராக இறைமறுப்பாளனாக கணிக்கப்படுவான்.

உ-ம் அல்லாஹ்வை மறுப்பது, (நாத்திகர்களைப் போன்று), நபிமார்களுள் ஒருவரை மறுப்பது (யூத, நஸாராக்கள் நபி முஹம்மத்(ஸல்) மறுத்தது போன்று), கலாகத்ரை மறுப்பது (கதரியாக்கள் என்ற பிரிவிரைப் போன்று)

  • எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். (4:136)

இஸ்லாத்தில் உள்ள ஒரு வணக்கத்தை மறுப்பது, {அபூபக்ர்(ரலி) அவர்கள் காலத்தில் ஸகாத்தை மறுத்து முர்தத்துகளாக மாரியவர்களைப் போன்று, ஜிஹாதை மறுக்கும் காதியானிகளைப் போன்று} இன்றும் ஒருவர் தொழுகை எனக்குக் கடமை இல்லை என்பாரானால் அவர் காபிராகிவிடுவார்.

  • அபூ ஹுறைறா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப் பின் அபூபக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்தன் மூலம்) இறை மறுப்பாளர்களாய் மாறினர். (அவர்களின் மீது போர் தொடுக்கப் போவதாக அபூபக்ர்(ரலி) அறிவித்தார்கள்.) அப்போது உமர்(ரலி) அவர்கள் அபூபக்ர்(ரலி) அவர்களிடம், ‘இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும் வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர, தன்னுடைய செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரின் (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறினார்களே!’ எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்’ என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்’ என்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

 

B- அன்னிfபாக் என்பது நயவஞ்சகத்தனம் என்பதன் அறபுப்பதமாகும், ஒருவன் உள்ளத்தில் ஒன்றையும் புறத்தில் வெளித்தொற்றத்தில் ஒன்றையும் காட்டுபவனாக இருந்தால் அவனை நயவஞ்சகன் ‘முனாfபிக்’ என்ற பதம் குறிக்கும். எனவே இஸ்லாத்தின் பார்வையில் முனாfபிக் என்பது வெளித்தோற்றத்தில் முஃமினாக முஸ்லிமாக காட்டிக்கொள்வதோடு, உள்ளத்தில் இறைமறுப்பையும், இஸ்லாத்தின் மீது வெறுப்பையும் வைத்திருப்பவனை குறிக்கும்.

நபிகளார் காலத்து முனாfபிக்குகள் நபிகளாருக்கும் தோழர்களுக்கும் முன்னால் முஃமினாகக் காட்டிக்கொள்வதோடு அவர்களுக்கு மறைவிலிருக்கும் போது இஸ்லாத்தை எதிர்த்தனர். இது உள்ளத்தோடு சார்ந்த ஒரு அம்சம் என்பதனால் அல்லாஹ்வே வஹியினூடாக இவர்களை அடையாளப்படுத்தினான். நிfபாக்தனம் என்பது ஒருவகையில் குப்ரை விடவும் மோசமானது, அபாயகரமானது.

  • முனாபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் – (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”( 9:64).
  • இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (9) (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.(10) அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.(11) “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.(12) நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள்; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.(13) “(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் கொண்டது போல், நாங்களும் ஈமான் கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இவர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.(14) இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.(15) அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.(16)இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.  (2:8-16)
  • “(நபியே!) முனாபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர் என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான். (63:1)
  • இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.(63:8) “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள், தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள். (63:7,8)

இவர்கள் காபிர்களை விட மோசமானவர்கள் என்பதனால்தான் இவர்கள் நரகின் அடித்தளத்துக்குச் சொந்தக்காரர்கள் என அல்லாஹ் கோடிட்டுக்காட்டுகின்றான்.

  • நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காணமாட்டீர்.  (4:145)

மேலும் நயவஞ்சகத்தனத்திற்கு அடையாளமாக இஸ்லாம் பல விடயங்களை காட்டித் தந்துள்ளது. அவற்றை ஒதுங்கி வாழ்வதன் மூலமே நிfபாக் தனத்திலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

  • அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’   (புஹாரி, முஸ்லிம்)
  • அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (புஹாரி, முஸ்லிம்)
  • நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்ப லுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.(143) இந்த முனாபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை; காபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.  (4:142,143)

C- அஷ்ஷிர்க் என்பது இனையாக்குதல் கூட்டுசேர்த்தல் என்ற அறுத்தங்களைக் குறிப்பதோடு, யார் அல்லாஹ்வை வணங்குவது போன்று படைப்பினத்தை வணங்குகின்றானோ, அல்லாஹ்வை மதிப்பதுபோன்று படைப்பினத்தை மதிக்கின்றனோ, அல்லஹ்வுக்கு செய்யவேண்டியதை அவனல்லாத ஒன்றுக்கு செய்கின்றானோ, சுறுக்கம் அல்லாஹ்வோடு ஒரு படைப்பினத்தை சேர்த்துக்கொள்கின்றானோ அவன் முஷ்ரிக் இணைவைப்பவன் என்ற பதத்தின் மூலம் அடையாளப்படுத்தப்படுவான்.

மக்கா மதீனாவில் இருந்த முஷ்ரிக்குகள் இந்த அடிப்படையிலே இணைவைத்திருந்தனர். அல்லாஹ்வை படைப்பாளனாக ஏற்ற அவர்கள் பல படைப்பினங்களை அவனுக்கு நிகராக்கி வணங்குவதோடு, அவனுக்குள்ள அதிகாரங்களையும் பங்குவைத்தனர். இதனால் அவர்களை இஸ்லாம் முஷ்ரிக்குகள் என அடையாளப்படுத்தியது. ஆனால் இன்றைக்கு உள்ள இணைவைப்பாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் அல்லாஹ்வை ஏற்கவில்லை. மாறாக பல கடவுள் கொள்கை உள்ளவர்களாகவே இருந்தனர். முஷ்ரிக் என்பதற்கான காரணம் அவர்கள் கடவுள் கொள்கையை மறுக்காமல் இருப்பதுதான்.

  • மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?  (29:61)
  • இன்னும், அவர்களிடம்: “வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணரமாட்டார்கள். (29:63)
  • (நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். (43:9)
  • மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?  (43:87)

அன்றைய முஷ்ரிக்குகள் அல்லாஹ்வின் மீதும் சத்தியம் செய்பவர்களாக இருந்துள்ளனர். இதுவும் அவர்கள் அல்லாஹ்வை ஏற்றுவிட்டு இணைவைத்தார்கள் என்பதற்கு சான்றாகும்.

  • நபித்துவத்தை முதல் தடவையாக நபியவர்கள் ஏற்றபிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் ‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள். (புஹாரி)

பொதுவாக ஷிர்க் என்பதை

الشرك الأكبر பெரிய இணை,  الشرك الأصغر சிறிய இணை (الشرك الخفي மறைமுகமான இனை) என்று இரண்டு வகையாக நோக்க முடியும்.

பெரிய இணை என்பது நேரடியாக அல்லாஹ்வுகு நிகராக ஒன்றை ஏற்படுத்துவது, அது அவனது அதிகாரத்திலோ, வணக்கம் செய்வதிலோ, அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளிலோ ஏற்படலாம்.     உ-ம்: சூரியன் சந்திரனை வணங்குவது போல, சிலைகளை வணங்குவது போல….

  • இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் – இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.  (41:37)

சிறிய ஷிர்க்கிற்கு பல விதங்களில் வரைவிளக்கணங்கள் கூறப்பட்டிருந்தாலும் அதனை சிலர் உதாரணங்களைக் கொண்டே குறிப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றனர். அதுவே பொறுத்தமான ஒன்றாகவும் விளங்குகின்றது. அந்த அடிப்படையில் ஒருவன் அல்லாஹ்வையே நம்பியநிலையில் முஸ்லிமாக இருந்துகொண்டு நபிகளார் ஷிர்க் என்று அடையாளப்படுத்திய ஒன்றை செய்வது என்று குறிப்பிடலாம். இதில் மிகப்பிறதானமாக முகஸ்துதி சம்பந்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை நபிகளார் (ஸல்) அவர்கள் சிர்க் கfபீ மறைமுகமான இணை என்று அடையாளப்படுத்தினார்கள்

நாவோடு சார்ந்தவைகள்

1-அல்லாஹ் அல்லாதவர்கள்மீது சத்தியம் செய்வது.

2-அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது நடந்தது என்று சொல்வது.

3-இன்ன நட்சத்திரங்களினால் மலைபொழிந்தது என்று சொல்வது.

செயல் சார்ந்தவைகள்

1-குறிபார்த்தல்

2-ஜோதிடம் பார்த்தல்

3-தாயத்து தகடு போன்றவற்றை தொங்கவிடுதல், கயிறு போன்றவற்றை கட்டிக்கொள்ளல்

உள்ளம் சார்ந்தவைகள்

முகஸ்துதி

இவைகளை ஒருவன் செய்யும்போது எந்த நோக்கத்திற்காக செய்கின்றானோ அதனை இந்த விடையங்களே பூர்த்தி செய்கின்றன என்ற அடிப்படையில் செய்வானாக இருந்தால் அந்த நேரத்தில் அது பெரிய ஷிர்க்காகவும், இவற்றை சடங்கு சம்பிரதாயத்துக்காக, வழமைக்காக செய்யும் போது அது சிறிய ஷிர்க்காக இருக்கும், அந்த அடிப்படையில் அதுவும் பெறும் பாவமாகவே (தௌபாவின்றி மண்ணிக்கப்படாத ஒரு பாவமாக) கணிக்கப்படும். இவற்றைப் பற்றிய விளக்கங்கள் பின்னால் தனித்தனியே வரும். இன்ஷா அல்லாஹ்.

மேலும் ஒரு முஸ்லிமிடம் அல்லாஹ் அல்லதவர்களை வணங்குமாறு (உ-ம் தாய்க்கு சிறம் பணிக்குமாறு) சொல்லப்பட்டால் அது ஷிர்க் என்பதில் கவனமாக இருப்பான், ஆனால் இது போன்ற சாதாரன விடையங்களில் நபிகளார் ஷிர்க் என குறிப்பிட்டுக் கூறியிருந்தும் கவனக் குறைவில் நிறையவே செய்து தன்னை அறியாமல் ஈமானை இழக்கின்றனர், இது மிகக்கவனமாக இருக்க வேண்டிய விடயமாகும். ஏனெனில் ஷைத்தான் ஷிர்க் வைக்காத சமூகத்தை சிரு விடயங்களைக் கொண்டே வழிகெடுப்பான். மேலும் இணைவைத்த நிலையில் ஈமான் கொள்வோரையும் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

  • நபி (ஸல்) அவர்கள் பிறியாவிடை ஹஜ்ஜில் உரை நிகழ்த்தும் போது ‘அறிந்து கொள்ளுங்கள்! நிச்சியமாக ஷைத்தான் உங்கள் ஊர்களில் அவன் வணங்கப்படுவதை நம்பிக்கை இழந்துவிட்டான், ஆனாலும் உங்கள் செயற்பாடுகளில் எவற்றையெல்லாம் சிறியதாகக் கறுதுகின்றீர்களோ அவற்றின்மூலம் அவனுக்கு வழிபாடு நடக்கும், அதனை அவன் பொறுந்திக்கொள்வான்.’ என்று கூறினார்கள்.  (திர்மிதீ)
  • மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.  (12:106)

D- ளலாலத் வழிகேடு; இந்த பதமும் ஈமானுக்கு எதிறாக பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும், ஈமான் இஸ்லாத்தின் அடிப்படைகளை ஏற்ற ஒருவர், இஸ்லாம் சொன்ன முறையில் நடைமுறைபடுத்தாமல் அதற்கு முரணாக கூட்டியோ குறைத்தோ அல்லது மாற்றியோ விடுவாரானால் அது வழிகேட்டில் சேர்த்துவிடும். அவ்வேலையை செய்பவர் வழிகேடர் என அடையாளப்படுத்தப்படுவார். வழிகேடு என்பது கொள்கை சார்ந்ததாகவோ, வணக்கம் சார்ந்ததாகவோ இருக்கலாம்.

  • நபியவர்கள் உரை நிகழ்த்தினால், ‘அம்மா பஃத் என்று கூறிவிட்டு, ‘வார்த்தையில் மிகச்சிரந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் மிகச்சிறந்தது முஹம்மதின் நடைமுறை, கருமங்களில் மிகக்கெட்டது புதிதாக உண்டாக்கப்பட்டவைகளாகும், எல்லா புதியவைகளும் பித்அத்தாகும், எல்லா பித்அத்தும் வழிகேடாகும், எல்லா வழிகேடும் நரகத்தில் சேறும்.’ என்று கூறினார்கள்.  (முஸ்லிம், நஸாஇ)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாராவது இந்த மார்க்கத்தில் இல்லாததை புதிதாக உறுவாக்குகினால் அது தட்டப்படும்.’ (புஹாரி, முஸ்லிம்)

E-  ரித்தத் மீண்டும் குப்ரை நோக்கி செல்லுதல்: இஸ்லாத்தின் பார்வையில் ரித்தத் என்பது; இஸ்லாத்ததை ஏற்றுக்கொண்டதன் பின் மீண்டும் குப்ரை நோக்கி செல்லுதல் என்று அருத்தம், எனவே முஸ்லிமாக இருந்த ஒருவர் சொல்லாலோ செயலாலோ நம்பிக்கையாலோ வெளிப்படையாக இஸ்லாத்தை மறுத்தால் அவர் முர்தத் என்று கணிக்கப்படுவார். அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவருக்கு தீர்ப்பு வழங்கப்படும்.

  • முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; (5:54)
  • உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.” (2:217)

சுறுக்கம்: குப்ர் என்பது ஈமானின் அடிப்படையை வெளிப்படையாக மறுப்பதாகும்.

நயவஞ்சகத்தனம் என்பது ஈமானின் அடிப்படையை வெளிப்படையாக மறுக்காமல் மறைமுகமாக உள்ளத்தால் மறுப்பதாகும். (இதுவே மிக மோசமான பண்பு)

இணைவைப்பு என்பது ஈமானை அல்லாஹ்வை ஏற்ற நிலையில் அவனுக்கு நிகறாக அல்லது ஒப்பாக ஒன்றை ஏற்படுத்துவதாகும்.

வழிகேடு என்பது ஈமானை இஸ்லாத்தை ஏற்று இஸ்லாம் சொன்ன அடிப்படையில் நடைமுறைபடுத்தாமல் மாற்றம் செய்வதாகும்.

F- இந்த சொற்களின் அடிப்படையில் ஒருவனுக்கு தீர்ப்பு வழங்கும் விடயத்தில் மிகமிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு முஸ்லிமை வெளித்தோற்றத்தை வைத்து காபிராக்குவதோ, முஷ்ரிக் அக்குவதோ, முனாfபிக் ஆக்குவதோ, வழிகேடனாக்குவதோ உள்ளத்தில் உள்ளதை அறியமுடியாத நாம் செய்யவேண்டிய வேலையல்ல. மாராக நபிகளாரே முனாfபிக்குகளை வஹியின் அடிப்படையிலே தீர்மானித்தார்கள். தவறு செய்தவர்களை யெல்லாம் தீர்ப்பு வழங்கி ஒதுக்காமல், அறிவுரை செய்து திருத்தவே முற்பட்டார்கள். நாமும் அறிவுரை செய்பவர்களாக இருப்போம், தீர்ப்பு வழங்குவதை மறுமைக்கு விட்டுவிடுவோம்.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாராவது ஒரு மனிதர் தன் சகோதரரைப் பார்த்து காபிரே என அழைத்தால், அது அவ்விருவரில் ஒருவருக்கு திரும்பும். அழைக்கப்பட்டவன் அதற்கு தகுதியாக இருந்தால் அது அவனை சாறும், இல்லையென்றால் அழைத்தவனுக்கே அது திரும்பும்.’ (புஹாரி, முஸ்லிம்)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாராவது ஒரு மனிதனை காபிர் என்ரோ அல்லாஹ்வின் விரோதியே என்ரோ அழைத்து, அவன் அப்படி இல்லையென்றால் அழைத்தவன் பக்கமே திறும்பிவிடும்.’ (முஸ்லிம்)
  • இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் அவர்களை பனூ ஜுzஸாமா கிலையார்கள் பக்கம் அனுப்பிவைத்தார்கள், காலித் அவர்கள் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க, அவர்கள் ‘நாங்கள் முஸ்லிமாகிவிட்டோம்’ எனக் கூறாமல், ‘நாங்கள் மதம் மாறிவிட்டோம்’ என்று கூற ஆரம்பித்தார்கள், உடனே காலித் அவர்கள் அவர்களை கொலை செய்து, கைதும் செய்தார்கள், மேலும் கைதிகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு, ஒருநாள் அவர்களை கொல்லுமாறு ஏவினார்கள், அப்போது நான் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிகளாரிடம் திறும்பிச் செல்லும்வரை நான் எனது கைதியை கொல்லவும்மாட்டேன், வேறு எந்தத் தோழரும் அவரது கைதியை கொலை செய்யவும்மாட்டார்.’ என்று கூறிவிட்டு, நபிகளாரிடம் வந்து நடந்ததைக் கூறியபோது, நபியவர்கள் தன் இரு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹ்வே! காலித் செய்த வேலையிலிருந்து உன்னிடம் நான் நீங்கிக்கொல்கின்றேன்.’ என்று கூறினார்கள்.  (புஹாரி)

ஒருவருக்கு தீர்ப்பு வழங்கும் விடயத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த நபி மொழி நன்றாகவே உணர்த்துகின்றது.

  • ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள் : முஆத் (றழி) அவர்கள் நபிகளாரோடு தொழுதுவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்களாக இருந்தார்கள், ஒருநாள் தொழுகையில் பகரா ஸூறாவை ஓத, ஒருவர் ஒதுங்கிச் சென்று இழகுவாக தொழுதுவிட்டு சென்றார், இச்செய்தி முஆத் அவர்களுக்கு கேள்விப்பட்டபோது, ‘அவர் முனாfபிக்.’ என்று முஆத் (றழி) அவர்கள் கூறினார்கள். இச்செய்தி அந்த மனிதருக்கு கேள்விப்பட, அவர் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எம் கையினால் உழைப்பவர்கள், முஆதோ நேற்றிரவு தொழுவித்துவிட்டு பகறா ஸூராவை ஓதினார், நான் ஒதுங்கிச் சென்று (தொழுதுகொண்டேன்) அவர் என்னை முனாfபிக் எனக் கறுதுகின்றார்.’ என்று கூர, நபியவர்கள், ‘முஆதே நீர் குழபக் காரரா? என மூன்று விடுத்தம் கூறிவிட்டு, நீர் தொழுகையில் வஷ்ஷம்சி, ஸப்பிஹிஸ்ம, அதுபோன்ற சூறாக்களை ஓதும்.’ என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்)
  • அபூ ஹுறைறா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களிடம் மதுபாணம் குடித்த ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டார், அவருக்கு (ஹத்து) அடிக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். அப்போது சிலர் கையினால் அடிக்க, மற்றும் சிலர் தம் செறுப்பினால் அடிக்க, வேறு சிலர் தம் ஆடையினால் அடித்தனர், அவர் திறும்பிச் செல்லும் போது கூட்டத்தில் சிலர், ‘அல்லாஹ் உம்மை கேவழப்படுத்தட்டும்’ என்று கூற, நபியவர்கள்: ‘நீங்கள் அப்படிச் சொல்லி, அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவாதீர்கள்.’ என்று கூறினார்கள்.  (புஹாரி)

ஒருவருக்கு தீர்ப்பு வழங்கும் விடையத்தில் மிகக் கவனமாக நடக்க வேண்டும் என்பதை இச்செய்திகள் எமக்கு உணர்த்துகின்றன, நபியவர்கள் காலத்தில் எத்தனையோ முனாfபிக்குகள் இருந்தும் வஹியின் அடிப்படையில் நபிகளார் தீர்ப்பு வழங்கினார்கள் என்பதை பார்க்கமுடிகின்றது. எனவே நாமும் இவ்விடயத்தில் கவனமாக நடந்துகொள்வோம்.

ஈமானோடு சம்பந்தப்பட்ட இந்த அடிப்படைகளை புரிந்துகொண்டு, ஒருவன் தன்னை ஒரு முஃமினாக மாற்ற வேண்டுமானால் அவனது கொள்கை அல்லஹ்வின் கட்டலை நபிகளார் வழிகாட்டலின் அடிப்படையில் அமைவதோடு, அதற்கு பங்கம் விலைவிக்கும் எச்செயலையும் செய்யாமலிருக்கவும் வேண்டும். அல்லாஹ் எமது ஈமானை காப்பதோடு, எல்லா வழிகேடுகளிலிருந்தும் எம்மைக் காப்பானாக.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *