அகீதா -5 மறைவு ஞானம்

இல்முல் கைப் (மறைவு ஞானம், மறைவான அறிவு)

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click

மறைவு ஞானம் என்பது மனிதனின் கண் பார்வை, அறிவு சிந்தனை ஆய்வு போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட அனைத்து விடையங்களுமாகும். அவற்றை அறிந்தவன் அல்லாஹ்வே.

உ-ம் : இறந்த கால நிகழ் கால அறிவு மனிதனுக்கு இருக்கலாம். ஆனால் எதிர் காலத்தோடு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் மறைவானதே. எங்கள் எதிரே இருக்கும் ஒரு வினாடியாக இருந்தாலும் சரியே.

உ-ம் : கடலுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை ஒருவன் ஆய்வு செய்து கூறலாமே தவிர ஆய்வின்றி சுயமாக கூற முடியாது.

 வெளி நாட்டிலிருந்து ஏதோ ஒரு வழியில் வரும் தகவலை ஒரு மனிதனால் அறிய முடியும். ஆனால் ஒருவனால் சுயமாக அறிய முடியாது. உதாரணத்திற்காக நபிமார்கள் ஒருசில மறைவான செய்திகளை அறிவித்ததும் அல்லாஹ்வின் வஹியின் அடிப்படையிலே அன்றி சுயமாக அறிவிக்கவில்லை.

 A- அல்லாஹ்வே மறைவான அனைத்தையும் சுயமாக அறிந்து வைத்திருப்பவன்.

  • அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.   (6:59)
  •  “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.   (10:20)
  • ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது. 9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். 10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே). (13:8- 10)
  •  (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”   (27:65)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மறைவு ஞானத்தின் திறவு கோல்கள் ஐந்து, மறுமை எப்போது வரும் என்ற அறிவு அல்லாஹ்விடமே இருக்கின்றது, அவனே மலையை இறக்குகின்றான். கட்பறைகளுல் உள்ளவற்றையும் அவனே அறிவான், எந்த ஒரு ஆத்மாவும் நாளை என்ன நடக்கும் என்பதை அறியமாட்டாது, எந்த ஒரு ஆத்மாவும் அது பூமியின் எவ்விடத்தில் மரணிக்கும் என்பதை அறியமாட்டாது, அல்லாஹ்வே அறிந்தவனும் நுனுக்கமானவனுமாவான்.  (புஹாரி, முஸ்லிம்)

B- நபிமார்களுக்கு அல்லாஹ் அறிவித்தாலே அன்றி, மறைவானவற்றை சுயமாக அறிகின்ற ஆற்றல் இல்லை.

  • தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (3:179)
  • (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).   (11:49)
  • அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத் ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.21. “நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.22. (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத் ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸBபஃ”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.23. “நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.24. “அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.   (27:20 – 24)
  • இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?25. அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), (உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).26. எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.27. அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.28. (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, (இதனை அறிந்த) அவர்கள், “பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.(51:24,30)
  • அவளுடைய (மர்யம்) இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.40. அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.   (3:37- 40)

C- குறிப்பாக நபி முஹ்ம்மத் (ஸல்) அவர்களுக்கும் மறைவானவற்றை சுயமாக அறிகின்ற ஆற்றல் இல்லை.

  • (நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?”  (6:50)
  •  (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”    (7:188)
  •  (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (சீட்டிலுத்துப் பார்த்தரிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.  (3:44)
  • நபி (ஸல்) அவர்கள் ருபையிஃ பின்த் முஅவ்வித்(றழி) அவர்களின் வீட்டுக்கு சென்றார்கள், அப்போது சில சிறுமிகள் ரபான் தட்டியவர்களாக பத்ரில் மரணித்த தம் தந்தைமார்களை புகழ்ந்து கவிதை பாடினர், அப்போது ஒரு சிறுமி ‘எங்களில் ஒரு நபியிருக்கின்றார், அவர் நாளை என்ன நடக்கும் என்பதனை அறிவார்.’ என்று கூற, நபியவர்கள் “இப்படி நீர் கூறாதீர், நீர் (ஏற்கனவே) கூறியதைக் கூறும்.” என்று கூறினார்கள்.  (புஹாரி)
  • ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: மூன்று விடயங்கள் இருக்கின்றன. அவை நபிகளாருக்கு இருந்தன என்று யாராவது கூறினால் அவன் பொய் உரைத்துவிட்டான். யாராவது முஹம்மத் நபியவர்கள் தனது ரப்பைக் கண்டதாக கூறினால் அவன் பொய் உரைத்துவிட்டான். பிறகு ‘அவனை பார்வைகள் அடைந்துகொள்ளமாட்டாது, அவன் பார்வைகளை அடைந்துகொள்கின்றான், அவன் நுனுக்கமுள்ளவன். (6:103), அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.(42:51) ஆகிய வசனங்களை ஓதிக்க்காட்டிவிட்டு, மேலும் யார் நபியவர்கள் நாளை நடப்பதை அறிவார்கள் என்று கூறிகின்றாரோ அவனும் பொய் உரைத்துவிட்டார், என்று கூறிவிட்டு, (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”(27:65) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். பிறகு மேலும் யார் நபியவர்கள் மார்க்கத்தில் ஏதேனும் ஒன்றை மறைத்தார்கள் என்று கூறினால் அவனும் பொய்யுரைத்துவிட்டான் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)  (புகாரி, முஸ்லிம்)
  • இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சியமாக நீங்கள் பாதணியற்றவர்களாகவும், நிர்வாணிகளாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் மறுமையில் ஒன்று கூட்டப்படுவீர்கள்.’ என்று கூறிவிட்டு, ‘முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.’(21:104) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். மேலும் மறுமையில் முதலாவது ஆடை அணிவிக்கப்படுபவர் இப்றாஹீமே, மேலும் எனது தோழர்களிலிருந்து சில மனிதர்கள் இடது பக்க அணியில் சேர்க்கப்படுவார்கள். அப்போது நான் எனது தோழர்கள், எனது தோழர்கள் என்று கூறுவேன், அப்போது ‘நிச்சியமாக அவர்கள் உம்மை பிறிந்ததிலிருந்து (வந்த வழியில் சென்று) முர்ததுகளாக மாறியவர்கள்.’ என்று கூறப்படும், அதற்கு நான் நல்லடியார் (ஈஸா நபி)கூறியது போன்று, ‘மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);118. (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்”( 5:117,118) (என்றும் கூறுவார்).‘என்று  கூறுவேன்.’ என்று கூறினார்கள்.  (புஹாரி)

D- அல்லாஹ் நபிமார்களுக்கு எவற்றையெல்லாம் அறிவித்துக் கொடுக்கின்றானோ அவை மாத்திரமே அவர்களுக்கு தெரியும். இப்படி அறிவித்துக் கொடுப்பதற்கான காரணம் நபித்துவத்தை (நுபூவத்தை) உறுதிப்படுத்தவும், நபிமார்கள் நம்பகமானவர்கள் என்பதனை உறுதிப்படுத்தவும்தான்.

  •  “(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.27. “தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர – எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.28. “தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக – இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”  (72:26)

E- மலக்குமார்கள் சுயமாக மறைவானவற்றை அறியவில்லை.

  • (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.33. “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.(2:30-33)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் சில மலக்குகளும் பகலில் சில மலக்குகளும் உங்களிடம் தொடர்ந்து (ஒன்றன்பின் ஒன்றாக) வந்துபோகின்றனர். அவர்கள் சுபஹ் தொழுகையிலும் அசர் தொழுகையிலும் ஒன்றுசேருகின்றனர். பிறகு உங்களோடு இரவில் தங்கியவர்கள் (வானை நோக்கி) ஏறிச் செல்கின்றனர், அப்போது அனைத்தையும் அறிந்த றப்பு அவர்களிடம் எனது அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் தொழும் நிலையில் அவர்களிடம் சென்றோம். தொழும் நிலையிலேயே அவர்களை விட்டு வந்தோம். என்று கூறுவார்கள்.  (புஹாரி)

குறிப்பு: எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதனை மலக்குமார்கள் அறியாததன் காரணமாகவே மனிதர்களை படைக்கும் போது படைக்கவேண்டாம் என ஆலோசனை கூறினார்கள். தட்போது மனிதனைப் பற்றி அறிந்துகொண்டனர்.

F- இன்று ஜின்களுக்கு மறைவு ஞானம் இருப்பதாக நிறைய முஸ்லிம்கள் நினைக்கின்றனர், அதனடிப்படையில் கானாமல் போன பொருட்களை தேடிப்பிடிப்பதற்கும், ஆய்வின்றி நோய்களைக் கண்டுபிடிப்பதற்கும், சூனியம் போன்ற மறைவான வற்றை அறிவதற்கும், குடும்பப் பிரச்சினைகளுக்கான காரணங்களை அறிவதற்கும் ஜின்களிடம் செல்கின்றனர். ஆனால் அதுவும் தவறாகும், ஏனெனில் ஜின்களுக்கும் மறைவான அறிவு இல்லை.

  • அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரிபட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.  (34:14)
  •  “(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.10. “அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.  (72:9, 10)
  • நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களில் சிலருடன் உகால் சந்தையை நோக்கி நடந்தார்கள். (அந்த நேரம்) ஷைத்தான்களுக்கும் வானத்தின் செய்திக்கும் இடையில் தடை போடப்பட்டு, அவர்கள் மீது நெறுப்புக் கங்குகளும் எறியப்பட்டு, தன் கூட்டத்தாரிடம் அந்த ஷைத்தான்கள் திரும்பிவந்தன. அப்போது  உங்களுக்கு என்ன நேர்ந்தது என அவர்கள் கேட்க, எங்களுக்கும் வானத்தின் செய்திக்கும் இடையில் தடை போடப்பட்டு, எங்கள் மீது நெறுப்புக் கங்குகளும் எறியப்பட்டன. என்று கூறினர். (அதற்கவர்கள்) உங்களுக்கும் வானச் செய்திகளுக்குமிடையில் ஏதோ ஒன்று நடந்திருப்பதின் காரணமாகவே தடை போடப்பட்டிருக்கின்றது. எனவே பூமியின் கிழக்கு மேட்கு திசைகளுக்குச் சென்று காரணத்தை தேடுங்கள். என்று கூற, திஹாமா பகுதியை நோக்கி புறப்பட்டவர்களே, நபிகளார் உகால் சந்தையை நோக்கி போகும் போது நக்லா என்ற இடத்தில் நபியவர்கள் தம் தோழர்களுடன் சுபஹ் தொழும் போது சந்தித்தவர்கள், அவர்கள் குர்ஆன் (ஓசையை) கேட்டபோது, அதற்கு செவிதாழ்த்தினார்க்கள்.  அப்போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவே உங்களுக்கும் வானச் செய்திக்கும் இடையில் தடைபோட்டது என்று கூறினர். அதுவே அவர்கள் தம் கூட்டத்தாரிடம் திறும்பிச் சென்று, :எம் சமூகமே! நாம் ஆச்சர்யமான ஒரு குர்ஆனை (ஓதலைக்) கேட்டோம், அது நேர் வழியின் பக்கம் வழிகாட்டுகின்றது. நாம் அதனை நம்பினோம்  (ஈமான்கொண்டோம்). மேலும் எங்கள் நாயனுக்கு எதையும் இணையாக (ஷிர்க்) வைக்கமாட்டோம். என்று கூறிய நேரமாகும். அல்லாஹ் நபியவர்கள் மீது ‘குல் ஊஹிய இலைய’ –நபியே எனக்கு வஹி அறிவிக்கப்பட்டது என்று நீர் கூறும்- என்ற (72 வது அத்தியாயத்தின் ஆரம்ப சில வசனங்களை) வசனத்தை இறக்கினான். (இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்) நபியவர்களுக்கு ஜின்னின் சொல்லே வஹியாக அறிவிக்கப்பட்டது. (புஹாரி, முஸ்லிம்)

J- நல்லடியார்களும் மரணித்தவர்களும் மறைவானவற்றை அறிவார்கள் என்ற ஒரு சிந்தனையும் எம் சமூகத்திடம் காணப்படுகின்றது. ஆனால் அதுவும் குர்ஆன் சுன்னாவுக்கு எதிறான ஒரு சிந்தனையாகும்.

ஈஸா நபியவர்கள் உயிரோடு உயர்த்தப்பட்டிருந்தும் அவர்களால் உலகில் என்ன நடக்கின்றது என்பதனை அறிய முடிய வில்லை என்றால் நாம் நினைக்கும் மரணித்த நல்லடியார்கள் எம்மாத்திரம்?

மரணித்த நபிகளாரும் உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறிய மாட்டார்கள் என்பதனை நாம் பார்த்தோம்.

பாருங்கள் அல்லாஹ்வின் சக்திகளைப் பற்றி சிந்தித்த ஒரு நல்லடியாரால் தூங்கும் நிலையில் தனக்கு பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதனை அறிய முடியவில்லை.

  • அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் -(அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார். (2:259)

அல்லாஹ்வுக்காக தம் ஊரைவிட்டு வெளியேரி ஹிஜ்ரத் செய்த நல்லடியார்களான குகை வாசிகளான அவ்வாழிபர்களால் தூங்கும் நிலையில் தம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை அறிய முடியவில்லை.

  • இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.  (18:19- 21)

எனவே இவ்வளவு தெளிவாக மறைவு ஞானம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானது, அதனை வேறு யாராலும் சுயமாக அறியமுடியாது என வந்திருந்தும் இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தால் எப்படியெல்லாம் இவ்வதிகாரம் படைப்பினங்களுக்கு வழங்கப்பட்டது என்பதனை பார்ப்போம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *